உணவில் கலப்படம் செய்வதற்காகவே பல ஊர்களில் தொழிற்சாலைகள் நடத்தப்பட்டு வந்ததும் அதிரடி சோதனையில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகளுக்கும் குறைவில்லை.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 272ம் பிரிவு, 273வது ஷரத் ஆகியவற்றின்படி கலப்பட உணவுப் பொருள், பானங்களை தயாரிப்போர், விற்பனை செய்வோருக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்படுகிறது. குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த தண்டனை ஏற்புடையதாக தெரியவில்லை.
அதுமட்டுமல்லாமல், கலப்பட உணவுப் பொருள் விவகாரம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் வருவதால் இதுகுறித்து இரண்டு அரசுகளுமே சட்டம் இயற்ற முடியும். இதன் அடிப்படையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிஸா ஆகிய மாநில அரசுகள் உணவுக் கலப்படம் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனையை விதிக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்துவிட்டன. இருப்பினும், இந்த சட்டப்பிரிவு கடுமையாக அமலாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.
இப்பின்னணியில் உணவுக் கலப்பட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதை நன்கு பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இவ்விவகாரம் குறித்து நன்கு அலசி ஆராய்ந்து பரிந்துரையை அளிக்குமாறு சட்ட ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, சட்ட ஆணையம் உணவுக் கலப்பட விவகாரம் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் நுட்பமாக அலசி ஆராய்ந்தது.
உணவுக் கலப்படம் மிகவும் கடுமையான குற்றம். உணவுக் கலப்படத்தால் நுகர்வோரின் உயிருக்கே சில வேளைகளில் ஊறு ஏற்பட்டு விடுகிறது. எனவே இக்குற்றத்துக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்ற முடிவுக்கு சட்ட ஆணையம் வந்தது.
கலப்பட உணவுப் பொருள், உடல்நலனுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய ரசாயன கலப்படம் கூடிய பானம் உள்ளிட்டவற்றை தயாரிப்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளலாம். மேலும் அபராதத் தொகையை லட்சக்கணக்காக உயர்த்தலாம்” என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது. சட்டத்தை கடுமையாக்கினால் மட்டும் போதாது. சட்டமீறலில் ஈடுபடுபவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் உரிய தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளனர்.