ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம்தொட்டவர் ராமானுஜன். இவருக்கு, மூன்று வயது வரை பேசும் சக்தி வரவில்லை. தன் 13 வயதில் கணிதம் சம்பந்தப்பட்ட நுாலினை இரவல் வாங்கி படித்தது முதல் அவரது மனம் கணிதத்தில் லயித்தது. இளம் வயதில், சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார். தாமஸ் வாக்கர் என்பவரால் சென்னை பல்கலை மாதந்தோறும் 75 ரூபாய் ஊக்க தொகையோடு கணித ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ராமானுஜத்தின் கணித அறிவு ‘குன்றில் இட்ட விளக்காய்’ சுடர் விட்டு பிரகாசித்தது. பன்நாட்டு அறிஞர்களும் இவரது தொடர்பை விரும்பினர். பள்ளி பருவத்திலேயே பல கணித இணைப்பாடுகளை மனப்பாடம் செய்து ஒப்புவித்தலில் திறன் பெற்றிருந்தார். ‘பை’ யின் மதிப்பை பல தசமத்தில் சொல்லி புரியவைத்துள்ளார். இங்கிலாந்து பல்கலைக் கழகம் ‘எப்.ஆர்.எஸ்’ பட்டம் வழங்கியது. டிரினிடி கல்லுாரி ‘பெல்லோஷிப்’ வழங்கியது. ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி, அறிஞர்களை வியக்க செய்த ராமானுஜர், ‘ஜீரோவிற்கும் மதிப்புண்டு’ என கூறினார்.சிறிய வயதில் இருந்து தெய்வ பக்தியில் திளைத்தவர். லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத்ததும், தமது குல தெய்வமான நாமக்கல் யதுகிரி தாயார் சன்னதி சென்று உத்தரவு பெற்று சென்றார். லிட்டில்வுட் என்ற அறிஞர், ”18ம்நுாற்றாண்டின் ஸ்விட்சர்லாந்தின் எய்லர், 19ம் நுாற்றாண்டின் ஜகோபின் ஒன்று சேர்ந்த உருவம் ராமானுஜம்,” என போற்றியுள்ளார். 1962ல் மத்திய அரசு, ராமானுஜத்தின் 75 வது பிறந்த நாளில் அஞ்சல் தலையை வெளியிட, அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தது. இன்று ஜீரோவின் ஹீரோவான, கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள்.