டெல்லி: எஸ்பிஜி எனப்படும் கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு என்பது நாட்டின் பிரதமருக்கு மட்டும்தானே தவிர ஒவ்வொருவருக்கும் தர முடியாது; இது சோனியா காந்தி குடும்பத்தை குறிவைத்தும் கொண்டுவரவில்லை என ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
ராஜ்யசபாவில் எஸ்பிஜி திருத்த சட்ட மசோதா மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது:
சோனியா காந்தி குடும்பத்தை மையமாக கொண்டு எஸ்பிஜி திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்படவில்லை. ஆனால் இதற்கு இதே சட்டத்தின் 4 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
அந்த 4 திருத்தங்களுமே ஒரே ஒரு குடும்பத்தை மையமாக கொண்டுதான் கொண்டுவரப்பட்டன.
சோனியா காந்தி குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இல்லை என தகவல்கள் கிடைத்த பின்னர்தான் எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஒரு பாதுகாப்பு பெறுதல் என்பதே கெளரவ அடையாளமாக கருத கூடாது. பிறகு ஏன் எஸ்பிஜி பாதுகாப்பு கேட்கப்படுகிறது? எஸ்பிஜி என்பது இந்த நாட்டின் தலைமை அமைச்சருக்கு மட்டும்தான்.
எஸ்பிஜி பாதுகாப்பை ஒவ்வொருக்கும் தனித்தனியே கொடுக்கவும் இயலாது. நாம் எஸ்பிஜி பாதுகாப்பை ஒரு குடும்பத்துக்கு மட்டுமே வழங்கக் கூடாது என எதிர்க்கவில்லை. நாங்கள் வாரிசு அரசியலைத்தான் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார். ஆனால் அமித்ஷாவின் விளக்கத்தில் திருப்தி இல்லை எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனைத் தொடர்ந்து எஸ்பிஜி திருத்த சட்ட மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.