எலான் மஸ்க், ஒரு காலத்தில் ட்ரம்பின் முழு நேர ஆதரவாளர். 44 பில்லியன் டாலர் காசு போட்டு ட்விட்டரை வாங்கி, அதை ‘X’ என்று மாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘டெஸ்லா’ என்ற ஆளில்லாக் கார்களை விற்பவர். இவை எல்லாம் போக செயற்கைக்கோள் செலுத்தும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற கம்பெனி நடத்திவருகிறார். இவர் தென்னாப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டவர். அங்கிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த குடும்பம். இவரது தாத்தா அமெரிக்காவில் பிறந்து கனடாவில் பைலட், அரசியல் செயல்பாட்டாளர் என்று பல வேலைகள் செய்தவர்.
1950ல், எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து அங்கிருந்து இனவெறி அரசாங்கத்தை தீவிரமாக ஆதரித்து, அது சரி என்பதற்கான வாதங்களை உலகெங்கும் வைத்தவர். உலகப்போர் காலகட்டத்தில் தன் மாமனார் நாஜி ஜெர்மனியின் ஆதரவாளர் என்று எலானின் தந்தை குறிப்பெழுதி வைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பள்ளிப் படிப்பை முடித்து கனடாவில் கல்லூரியில் இயற்பியலும், அமெரிக்காவில் பொருளாதாரமும் படித்தார். 1990 நெட்ஸ்கேப் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போது, இவரிடம் வேலைக்கான உரிமம் இல்லை. படிக்க வந்தவன் எப்படி முழு நேர வேலையில் சேர்ந்தாய் என்று பலரும் கேட்க, மழுப்பியே காலத்தை ஓட்டினார்.
1999ல், X.com என்ற நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் இவருக்கு நிர்வாகம் தெரியவில்லை என, கம்பெனியின் பிற இயக்குநர்கள் இவருக்கு பதிலாக பில் ஹாரிஸ் என்பவரை தலைமைக்குக் கொண்டுவந்தனர். அந்தக் கம்பெனி பிறகு வேறொரு உள்ளூர் வங்கி நிறுவனத்திடம் விற்கப்பட்டது. இந்த இணைப்புக்குப் பிறகு, மஸ்க் மீண்டும் நிர்வாகத்துக்கு வந்து ‘பே பால்’ உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தினார். அதிலும் சரிவராமல் E Bay நிறுவனத்துக்கு விற்றார். 2001ல், ராக்கெட் விடுகிறேன் என்று ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கினார். 2006ல் முதல் ராக்கெட் விட்டார். ஆனால் அது சொன்ன இடத்துக்குப் போய்ச் சேரவில்லை. ஆனாலும் நாசாவிலிருந்து சில பல சிறு வேலைகள் பெற்றுக் கம்பெனியை நடத்தினார். 2015ல், முதல் வெற்றிகரமான ராக்கெட் விடப்பட்டது.
2003ல், டெஸ்லா கார் கம்பெனியைப் புதுப்பித்து வேலை தொடங்கினார். பல்வேறு மின்சார வண்டிகள், ஓட்டுநரில்லா வண்டிகள் என்று வியாபாரம் களைகட்டியது. அந்த லாபப் பணம் ராக்கெட் விடத் திருப்பிவிடப்பட்டது. மற்ற முதலீட்டாளர்கள்? பொறுமையா இருங்கப்பூ என்று ஓட்டினார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் செயற்கைக்கோள் சார்ந்த தகவல் தொடர்பில் இறங்கியது. அதுதான் இன்றைய எலானின் புலம்பல்களுக்கும், கூச்சல்களுக்கும் முக்கியக் காரணம்.
இந்த வரலாறெல்லாம் எதற்கு? எலான் மஸ்க் சொந்தமாக முதல் போடாமல், பொதுவில் நிதி திரட்டாமல், நேரடியாகக் கடன் வாங்காமல், மற்றவர் காசிலேயே வியாபாரம் செய்யும் வித்தகன். லாபம் வந்த பிறகு ஐ.பி.ஓ எல்லாம் போட்டு, காசு பார்க்கும் முனைப்புக் கொண்ட ஆள்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நம் நாட்டில் செய்யத் துடிக்கும் முதலீட்டுக்கும், அதற்கான சிக்கல்களுக்கும் வருவோம். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாட்டிலைட் கம்யூனிகேஷன் எனப்பட்டும் செயற்கைக்கோள் மூலமாக, தகவல் தொடர்பு இணைப்பைத் தருகிறது. இதன் சாதகம் மொபைல் ஃபோன் சிக்னலே இல்லை என்ற இடத்திலும், வானில் ஊர்ந்து செல்லும் செயற்கைக்கோள்கள் மூலம் சிக்னல்கள் பெற்று, தகவல் பறிமாற்றம் (பேச்சு, குறுஞ்செய்தி, இணையம்) சகல விதங்களிலும் சாத்தியப்படும். இதைச் செயல்படுத்தி வணிக நோக்கில் சந்தையில் கொண்டு வர நான்கு படிகள் தாண்ட வேண்டும்.
1. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் உரிமம்.
2. In-space எனப்படும் செயற்கைக்கோள் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்கும் பாரத அரசின் அமைப்பு.
3. உள்துறையின் அனுமதி. இது ஏன்? அசாதாரண சூழல் நிலவும் காலங்கள், இடங்களில் இணையம் பாரத அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தவிர நம் மக்களின் தகவல்கள், தரவுகள் நம் நாட்டை விட்டு வெளியே சேமிக்கப்படக் கூடாது.
4. அலைக்கற்றை.
இதில் முதலிரண்டு படிகளை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தாண்டிவிட்டது. மூன்றாவதில் வண்டி நிற்கிறது.
ஒரு உதாரணத்துக்கு யுத்த காலத்தில் குறிப்பிட்ட இடங்களில் இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் ராணுவம் தவிர மற்றவர்களுக்கு நிறுத்தப்படவேண்டும் என்று பாரத அரசு ஆணையிட்டால், அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நம் அரசின் பேச்சைக் கேட்குமா அல்லது அமெரிக்க அரசின் பேச்சைக் கேட்குமா? எல்லாம் முடிந்த பிறகு நீதிமன்றம் போய் நாலு பேரைச் சிறை வைப்பதில், இந்தச் சூழலில் என்ன பயன்?
அதே போல நம் நாட்டுத் தகவல்கள் தரவுகளை வெளியே கொண்டு போகக் கூடாது என்பதை மஸ்கின் நிறுவனம் பின்பற்றுமா அல்லது உள்குத்து ஏதும் செய்யுமா? அமெரிக்க அரசு தகவல் கேட்டால், தரமறுக்கத் துணியுமா ஸ்பேஸ் எக்ஸ்? உலக நாடுகளில் யுத்தம் அல்லது அசாதாரண காலங்களில் நடக்கும் செயல்களைப் பார்க்கும் போது, நமக்கு எச்சரிக்கை உணர்வு அதிகமாகிறது.
உக்ரைன் எல்லையில் நின்ற ரஷ்யப் படைகளுக்கான கட்டணம் முழுதும் செலுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஃபெடெரோவ் சொன்னதால் நிறுத்தப்பட்டது. இது ரஷ்யப் படைகளின் தாக்குதல் திறனை (தற்காலிகமாக) குறைத்தது. சில இடங்களில் ரஷ்யப் படைகள் பின்வாங்கின. கட்டணம் செலுத்தியிருந்தாலும், செயற்கைக்கோள் தொடர்புக் கருவிகள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு தொடர்பு நிறுத்தப்பட்டது. வெளுப்புப் பட்டியல் உக்ரைனின் அமைச்சரிடமிருந்து வந்தது. அவற்றுக்கு மட்டும் தகவல் தொடர்பு அனுமதிக்கபட்டது.
கடந்த பிப்ரவரி 1 முதல் உக்ரைன் எல்லையில், அந்நாட்டு அமைச்சகம் கொடுத்தப் பட்டியல் தவிர மற்ற செயற்கைக்கோள் கருவிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. தனிப்பட்ட பயனாளர்கள், தங்கள் சந்தாவை மறுபதிவு செய்ய வலியுறுத்தப்பட்டனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்த சில ஹாக்கர்கள் ரஷ்யப் படையினரிடம் ஸ்பேஸ் எக்ஸ் ஆட்கள் போலப் பேசி, அவர்கள் இருந்த இடங்களை அறிந்து கொண்டு உக்ரைன் படைகளிடம் போட்டுக்கொடுத்தனர். சில ரஷ்யப் படையினரிடம் 5000 டாலர் வரை பணம் பெற்றுக்கொண்டு உக்ரைன் ராணுவத்திடம் போட்டுக்கொடுத்ததாகப் பெருமைப்பட்டனர், சில உக்ரைன் ஹாக்கர்கள்.
நம் நாட்டில் கார்கில் போரின் போது, அமெரிக்க அரசிடம் நம் அரசு ராணுவ GPS பயன்படுத்த அனுமதி கேட்டது. பதுங்கியிருக்கும் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களின் இடங்களைக் கண்காணித்து அடிப்பதற்காகக் கேட்டோம். அப்போது அந்த வசதி அமெரிக்கச் செயற்கைக்கோள்களில் மட்டுமே இருந்தது. நாம் வேண்டிய பணம் தருகிறோம் என்று சொன்ன பிறகும், அமெரிக்க அரசு மறுத்தது. சரி பொது மக்கள் பயன்படுத்தும் GPS பயன்படுத்தலாம் என்றால், வேண்டுமென்றே அவற்றின் துல்லியத் தன்மையை 100 மீட்டர்களுக்கு நீட்டித்து, இந்த சுற்றளவில் எங்கோ இருக்கிறார்கள் என்று காட்டும்படிச் செய்தது, அமெரிக்க அரசு. இதனால் நாம் போரில் சந்தித்த இன்னல்கள் பல.
அப்போது ISROவிடம் நமக்கான செயற்கைக்கோள் துல்லிய இடம் காட்டும் செயலி தயாரிக்கச் சொல்லி அரசு உத்தரவிட்டது. பல கட்டப்பணிகளுக்குப் பிறகு, செப்டம்பர் 2014ல் தீவிரப்படுத்தப்பட்ட சொந்தச் செயற்கைக்கோள் துல்லிய இடம் காட்டும் செயலி பரிசோதிக்கப்பட்டது. இது 2019ல், செயல்பாட்டுக்கு வந்தது. இருந்தபோதும் 2008ல் ஸ்விட்சர்லாந்து நாட்டின் Spectra Time என்ற நிறுவனம் தயாரித்துதந்த அணுசக்தி கடிகாரம் செயலிழந்ததால், தற்போது சில சிக்கல்களைச் சந்திக்கிறது. நம் ISRO இதைச் சரிசெய்ய வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. நவம்பர் 2026ல், முழுச் செயல்பாட்டுக்கு முன்னெடுப்புகள் தீவிரமாக உள்ளன.
சமீபத்திய ஆபரேஷன் சிந்தூரின் போது அமெரிக்கக் கம்பெனிகள் செயற்கைக் கோள் படங்களைத் தரமிறக்கியும், தாமதித்தும் வெளியிட்டன. சில படங்களை அமெரிக்க அரசின் உத்தரவின் கீழ் வெளியிட மறுத்தன. இதே எலான் மஸ்க், ஈரானில் தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவி ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் கருவிகள் மூலம், அந்நாட்டு அரசால் இணையம் முடக்கப்பட்ட இடங்களில் இணைப்புகள் தந்து, கலவரத்தைத் தூண்ட உதவி செய்தார். ஆனால் பெரிதாக எந்தக் கலவரமும் வெடிக்கவில்லை.
தகவலும் தரவுகளும் அமைதிக்காலத்தில் பணம் பண்ணவும், யுத்த காலத்தில் ஆயுதமாக்கவும் பயன்படும் நவீனக் கருவிகள். எலான் என்னதான் ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டாலும், தகவல்களைத் தூக்கிச் செல்ல மாட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லை. அவரது வரலாறு அப்படி. அமெரிக்க நிறுவனங்கள் அனைத்துமே இந்த விஷயத்தில் ஸ்டார் லிங்குடன் கூட்டுக்கைகள் தான்.
அமெரிக்கா எப்போதுமே மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மூன்றாந்தரக் கருவிகள். முதல் தர விலையில் விற்று, அதிலும் கட்டுப்பாடுகள் பலவற்றைத் தன் கையில் வைத்துக்கொண்டு, பெரிய வஸ்தாது போல நடந்துகொள்ளும். நம்பிக்கைக்குத் துளியும் லாயக்கற்ற நாடு.
ஏற்கனவே X மூலம் அநேகத் தரவுகளும், தகவல்களும் எலான் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் போகின்றன. நாம் ஏன் 250 ரூபாய்க்கு வரும் இணையத்தை இவரது நிறுவனத்திடம் 36,000 ரூபாய் முன்பணம் கட்டிக் கருவி வாங்கி, மாதம் 5,000 ரூபாய்க்கு இணைய இணைப்பு பெற வேண்டும்?
சமீபத்திய கரப்பான்பூச்சிப் போராட்டங்களின் போதே மஸ்கின் இணைப்பு இருந்திருந்தால், அரசு கலவரக் கட்டுப்பாட்டில் திணறிப் போயிருக்கும். முந்தைய கரப்பான்பூச்சிப் போராட்டத்தில் இணையமில்லாமல் Bluetooth மூலம் செயல்படும் தகவல் தொடர்பை முன்னாள் ட்விட்டர் தலைவர் ஜாக் டோர்சி கொடுத்தார். அதனால் நம் போலீஸ் சற்றே திணறியது. இம்முறை இதைக் கண்டுபிடித்து சரி செய்துவிட்டனர்.
அமெரிக்காவுக்கு ஸ்டார் லிங்க், ஐரோப்பாவுக்கு ஒன் வெப், சீனாவுக்கு க்வியான் ஃபான் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனம் உள்ளது. ரஷ்யா தனக்கான செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனத்தைக் கட்டமைக்கிறது. நாம் மட்டும் ஏன் எலானை நம்பி இருக்கவேண்டும்?
இப்போது ஏன் மஸ்க் அம்பானியைப் பிறாண்டுகிறார் என்று பார்ப்போம். நாம் ஏற்கனவே பார்த்த செயற்கைக்கோள் இணைப்பு வணிகத்தின் 4 படிகளில், அம்பானியும் 3வது படியில் நிற்கிறார். ஏர்டெல்லும் அங்கேயே. ஆனால் இரண்டு நிறுவனங்களும் (ஜியோ, ஏர்டெல்) மஸ்கின் ஸ்டார்லிங்கோடு ஒப்பந்தம் போட்டு நாங்கள் தான் பெரிய வியாபார நெட்வொர்க். எங்கள் வியாபாரத் திறத்தைப் பாருங்கள் என்று சொல்லியிருந்தன. இதில் ஏர்டெல் கவர்மண்ட் பர்மிஷன் தரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்க அம்பானி தனக்கான ஜியோவில் JioSpaceFiber என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதுவும் 4 படிகளில் மூன்றாவதில் IN-SPACeன் தொழிநுட்ப அனுமதியைப் பெற்றுவிட்டது. பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுக்கான அனுமதி கிடைத்தால் களமிறங்கும். இது மஸ்கை எரிச்சலடையச் செய்துள்ளது. எனக்குப் போட்டியாக நீ எப்படி இந்தத் தொழிலில் வரலாம் என்று கொந்தளிக்கிறார். சந்தா விஷயத்தில் JioSpaceFiber செயற்கைக் கோள் இணைப்பு ₹3500 – ₹4200 என்ற அளவில் இருக்கிறது. இது போக 5G இணைப்பை JioAirFiber மூலம் ₹399 – ₹599 என்ற அளவில் தருகிறது. இதில் பல கிராமங்கள் உள்ளடங்கியது.
இதனால் தன் வியாபாரம் பாதிக்கும் என்று மஸ்க் அம்பானியைக் குறிவைத்து மக்களைத் தூண்டிவிட முனைகிறார். மேலும் எப்படியாவது மோடியைக் குறிவைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமக்குச் சாதகமாக இருக்கும் ராகுல்காந்தி வரவேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க ஐரோப்பிய சக்திகள் முனைகின்றன. இதற்கேற்ப ராகுலும் மஸ்கை வரவேற்று ட்விட்டரில் செய்தி போட்டார். அதற்குக் காங்கிரஸ்காரர்கள் முட்டுக்கொடுத்துத் தேய்ந்து போனதுதான் மிச்சம். ராகுல் உள்ளிட்ட காங்கிரசாருக்கு எப்போதுமே நம் நாட்டின் மீதும் நம் மக்களின் மீதும் மதிப்பு இருந்ததில்லை. ராகுலுக்கு அவர் ஆளப்பிறந்தவர் என்று நினைப்பிருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டம் வேறெதற்கோ இருக்கிறது. இவரிடம் நாடு போனால் சர்வநாசம் தான். அதனால் தேசியவாதிகள் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டிய காலகட்டம் இது.
இன்னும் சில நாட்களுக்கு இந்த அம்பானி இணையத்தை மறுக்கிறார். குஜராத்திக்கு குஜராத்தி என்று அமித்ஷா ஸ்டார்லிங்க் அனுமதியைத் தாமதிக்கிறார் என்ற பிரச்சாரம் தீவிரமாக வரும். நாம் எச்சரிக்கை கொண்டு இருக்கவேண்டும். அமெரிக்கா நமக்கெதிராக அடித்த பழைய அடிகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். சுதேசிப் பொருட்கள், சேவைகளைப் பயன்படுத்துவதில் முனைப்புடன் இறங்க வேண்டும்.
கட்டுரையாளர் : அருண்பிரபு