மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனப்படும் எம்.எஸ் சுப்புலட்சுமி 1916-ல் மதுரையில் பிறந்தவர். தன் தாயிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். தாயைத் தவிர மதுரை சீனிவாச அய்யர், மாயவரம் வி.வி.கிருஷ்ணய்யர் செம்மங்குடி சீனிவாசய்யர் ஆகியோரிடமும் பாட்டு கற்றார்.
எம்.எஸ் நான்கு திரைப்படங்களில் நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்த படம் மீரா. அந்த பட பாடல்கள் காலத்தால் அழியாதவை. அவரது கணவர் சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இருவரும் காந்திஜியை சந்தித்தனர். அதன்பின்பு கஸ்தூரிபாய் நினைவு அறக்கட்டளைக்காக எம்.எஸ். ஐந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுதிய பாடல்களையும், ராஜாஜி உலக அமைதிக்காக எழுதிய பாடல்களையும் இவர்தான் பாடினார். கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில் பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் உயர் பரிசுகள் பட்டங்களையும் பெற்றுள்ளார். எம்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் ‘மீரா பஜன், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, காற்றினிலே வரும் கீதம்’ ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். காந்தியின் விருப்பப் பாடலான ‘வைஷ்வணவ ஜனதோ’ பாடலையும் எம்.எஸ். குரல் தான் இன்றும் நம் கண் முன் நிறுத்துகிறது. தனக்கு ராயல்டியாக கிடைக்கும் பணம் அனைத்தும் வேதபாடசாலைகள் உட்பட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
எம்.எஸ். சுப்புலட்சுமி பிறந்ததினம் இன்று