அன்புடையீர் வணக்கம்.
சென்னையில் எனக்கு அறிமுகமான ஒரு அம்மையாரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரது வீட்டுக்கு அந்த தெருவில் உள்ள நாய்கள் தாராளமாக வருவதும் போவதுமாக இருந்தன. சில நாய்களுக்கு அந்த அம்மையார் கொஞ்சம் சாதம் வைத்தார். அவை அமைதியாக சாப்பிட்டு விட்டுச் சென்றன. அவர்கள் வீட்டில் தனியாக நாய் எதுவும் வளர்க்கவில்லை. ஆனால் தெரு நாய்கள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன. இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. நான் எனது தெருவில் உள்ள நாய்கள் மீது அன்பு செலுத்துகிறேன். பசித்துவரும் நாய்களுக்கு உணவளிக்கிறேன். ஒருவேளை அவை உடல்நலம் சரியில்லை என்றால் நானே கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றார். இதுபோன்று நல்ல மனம் படைத்தவர்கள் நமது ஊரிலும் பல தொண்டுகள் செய்து வருவர். அவர்களைப் பற்றிய விஷயங்களை அவரின் போட்டோவுடன் விஜயபாரதத்திற்கு ‘ஈர நெஞ்சம்’ என்ற தலைப்பில் எழுதி அனுப்ப வேண்டுகிறேன். தகுதி வாய்ந்தவை பிரசுரிக்கப்பட்டு சிறந்த புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
வாழி நலம் சூழ.
ம. வீரபாகு, ஆசிரியர்