வாழும் கலை நிறுவனம் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அதன் நிறுவனர் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
பெங்களூருவில் உள்ள வாழும் கலை நிறுவனத்தின் சர்வதேச மையத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை, ஆர்கனைசர் ஆசிரியர் பிரபுல்ல கேத்கர் சந்தித்தார். 70வது பிறந்த நாளையொட்டி வாழ்த்தினார். வாழும் கலை 45 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் வாழ்த்துரைத்தார். பிரத்யேக பேட்டியின் முக்கியம்சங்கள் வருமாறு:
முதலாவதாக உங்களுக்கு 70வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டபடி உங்களது நூற்றாண்டைக் கொண்டாட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழும் கலை நிறுவனம் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நெடிய பயணமாகும். 1981–82 முதல் ஒவ்வொரு செங்கலாக இந்த அமைப்பை நீங்கள் கட்டி வளர்த்துள்ளீர்கள். ஆன்மிகத்திலும், கல்வியிலும் இது ஒளிர்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக சேவை, மோதல் கணிப்பு ஆகியவற்றிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த நெடிய பயணத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நாங்கள் தெளிவான இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். இயற்கை முன்கூட்டியே எல்லாவற்றையும் தீர்மானித்துள்ளது. யார் யார் எத்தகைய பணியை ஆற்ற வேண்டும் என்பதை கடவுள் ஏற்கனவே நிர்ணயம் செய்து விட்டார். பணியில் உயர்வு, தாழ்வு கிடையாது. இந்த வாழ்க்கையே ஒரு புதிர்தான். தவிர்க்கக்கூடியவர் என யாரும் கிடையாது. எதையும் அலட்சியமாக நினைக்கக்கூடாது. நான், உள்ளத்தில் தெளிவு, நெஞ்சில் தூய்மை, செயலில் நேர்மை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.
உள்ளத்தில் தெளிவு இருந்தபோதிலும், தொடக்க காலத்தில் பல சோதனைகளை எதிர்கொண்டீர்களே?
சோதனைகள், சவால்கள் இல்லாமல் சாதனைகள் சாத்தியமாகாது. எங்களது நிலைப்பாட்டுக்கு பழமைவாதிகள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுபுறம் நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நம் பாரதத்தில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் எதிர்ப்பு எழுந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயண இலக்கில் தொடர்ந்து முன்னேறிச் சென்றோம். ஒவ்வொரு சவாலையும், சாதனையாக மாற்றி காட்டினோம். `சத்தியமேவ ஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்பதுதான் எங்களுக்கு வழிகாட்டியது.
சிறுவயதிலேயே உங்களுக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு விட்டது. 8 அல்லது 10 நாட்கள் தியானம் செய்துள்ளீர்கள். எப்போது திருப்புமுனை ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?
எனது வாழ்வில் திருப்புமுனை என்று குறிப்பிட்ட எந்த தருணத்தையும் குறிப்பிட முடியாது. உறவு இழப்பு, வேலை இழப்பு உள்ளிட்ட எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. சிறுவயதிலேயே என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். இதனால்தான் திருப்புமுனை எதுவும் இல்லை என்று குறிப்பிடுகிறேன்.
நீங்கள் ஏற்கனவே வாழும் கலை முறையை பயன்படுத்தி வந்துள்ளீர்கள். குறுகிய காலத்தில் இதை வெளிப்படையாக அறிவித்தீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆம். இவ்வாறே எடுத்துக் கொள்ளலாம். 1981 – 82ல், 10 நாட்கள் மெளன விரதம் இருந்தேன். அப்போது `சுதர்ஸன் கிரியா’ வந்தது. நான் சிமோகாவில் முதல்முறையாக உபதேசித்தேன். 8 மருத்துவர்கள், 30 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எல்லாமே வாய் வழியாக பரவிய செய்தியின் எதிரொளிதான்.
வாழும் கலை அமைப்பு 45 ஆண்டுகளைக் கடந்து விட்டன. இப்போது 188 நாடுகளில் சுதர்ஸன் கிரியா முதன்மை பெற்றுள்ளது. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
நாங்கள் பல தியானங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். வெவ்வேறு வயதினருக்காக 67 வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதை சுதர்ஸன் கிரியா என்று மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடாது. யார் யாருக்கு எது தேவைப்படுகிறதோ, அதற்கேற்ப திட்டத்தை தகவமைத்துள்ளோம்.
செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாரதம் காலனிய மனோபாவத்திலிருந்து விடுபடாமல் இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. எதையும் ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். பிரஷ்னா உபநிஷத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. `நான் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் சிந்தித்துப் பார்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். நமது வேதங்களில் இல்லாத அம்சங்களே இல்லை.
உங்களது அமைப்பு இளைஞர்களை ஈர்த்து வருகிறது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நாங்கள் பஜன் போன்றவற்றைத் தொடங்கினோம். ஆன்மிகம் என்றாலே வறட்டுத் தனமானது என்ற பிம்பத்தை மாற்றினோம். இசை, நடனம் உள்ளிட்டவையும் ஆன்மிகத்தின் அம்சங்கள்தான் என்பதை நிலைநாட்டினோம்.
தேசிய கல்விக் கொள்கை − 2020ஐ எவ்வாறு பார்க்கிறீர்கள்?
கல்வியில் சுதேசித் தன்மையை, இது வலுப்படுத்துகிறது. காலனிய மனோபாவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறது. நமது பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பிடியிலிருந்து விடுபடும் நாள் தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி