சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி நமக்குத் தெரியும். அப்போது பஞ்சாபில் கவர்னராக இருந்தவர் சர் மைக்கேல்-ஒ-டயர். அவர் தான் ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்றக் கூட்டத்தை தடுத்து நிறுத்துமாறு ராணுவ அதிகாரியான ஜெனரல் ஹாரி டயருடன் 150 ராணுவ வீரர்களையும் அனுப்பி வைத்தார். அவர் தான் காட்டுமிராண்டித் தனமாக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றார்.
ஜாலியன் வாலாபாக்கில் நடந்த அந்த படுகொலையை நேரில் கண்ட ஒரு பத்தொன்பதே வயதான இளைஞன், அந்தப் படுகொலைக்குக் காரணமான இருவரையும் பழிவாங்க சபதமெடுக்கிறான். அவன் பெயர் உதம் சிங். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன், ஒரு இலவச மாணவர் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தான்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான இருவரும் இங்கிலாந்து சென்று விட்டனர். ஏழ்மையான உதம் சிங்கால் இங்கிலாந்து செல்வது என்பது அவ்வளவு எளிதானதா? ஆனாலும் பல ஆண்டுகள் போராடி, பல துன்பங்களை அனுபவித்து இங்கிலாந்து சென்று அவர்களின் வீடுகளைத் தேடிக் கண்டு பிடிக்கிறான்.
அதற்குள் ஜெனரல் ஹாரி டயர், பக்கவாத நோயால் படுத்து இறந்து விட்டார். மைக்கேல் ஒ டயராவது தனது கையால் கொல்லப்பட வேண்டும் என்று தனது நடவடிக்கைகளை வேகப்படுத்தினான் உதம் சிங்.
அதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. லண்டனில் ஒரு கூட்டத்தில் மைக்கேல்-ஒ-டயர் கலந்துகொண்டார். அந்த கூட்டத்திற்கு சென்ற உதம் சிங் மேடையிலேயே அவரைச் சுட்டுக் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றினான்.
கைதான உதம் சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தான் ஏற்ற சபதத்தை இருபத்தொரு ஆண்டுகள் காத்திருந்து நிறைவேற்றிய இந்த சம்பவம் உலக வரலாற்றிலேயே ஒரு அதிசயம்தான்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்