தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்?

வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வீதிக்குக் கொண்டு வந்த பெருமை பால கங்காதர திலகரையேச் சாரும். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர உணர்வை தட்டியெழுப்ப திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவை பிரபலப்படுத்தினார்.

அதேபோன்று தமிழகத்தில் திராவிட கழகத்தினர் நாத்திகப் பிரச்சாரம் என்ற போர்வையில் விநாயகர் சிலைகளை உடைப்பது, செருப்பு மாலை போட்டு கேவலப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டபோது, அவைகளை முறியடித்திட ஹிந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வெகுஜன விழாவாக மாற்றியது.

ஆனால் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவது என்பது ஏதோ பாகிஸ்தானிலோ அரேபியாவிலோ கொண்டாடுவது போன்று பூச்சாண்டி காட்டும் போக்கை திராவிட அரசுகள் கடைபிடித்து  வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி வருகிறதென்றால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சாமியாட்டம் தொடங்கிவிடும். எத்தனையோ காரணங்களால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பதை எல்லாம் தடுக்க யோக்கியதை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் ஒன்றுதான் சுற்றுப்புறச் சூழலுக்கே ஆபத்து என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

காவல்துறையிடம் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். புதிய இடங்களில் பிள்ளையாரை வைக்க அனுமதிக்க மாட்டார்கள். புதிய இடங்களில் வைப்பதால் காவல் துறைக்கு என்ன நஷ்டம் என்று தெரியவில்லை. அவ்வளவு சுலபத்தில் அனுமதிக்க மாட்டார்கள். சில ஊர்களில் விழாவிற்கு முன்பு அமைதிக் கூட்டம் நடைபெறும். சென்னை போன்ற சில ஊர்களில் அமைதிக் கூட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைத்து பேசுகிறார்கள். இது மிகவும் அபத்தமானது.

சென்னையில் வழக்கம்போல் பத்தாவது நாள் விசர்ஜன ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு பத்தாவது நாளாக செப்டம்பர் 3ம் தேதி ஊர்வலம் நடத்த ஹிந்து முன்னணியினர் திட்டமிட்டார்கள். ஆனால் 2ம் தேதி பக்ரீத் வருவதால் அதற்கு முன்பே விநாயகர் ஊர்வலத்தை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று காவல்துறை மிரட்டியது.

இங்கு ஆங்கிலப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், மொகரம் பண்டிகைகள் நடத்த எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால் ஹிந்துக்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகள்.

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்?