உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மதரஸா எனப்படும் முஸ்லிம்களுக்கான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், வழக்கமான பாடதிட்டங்களுடன் இஸ்லாம் மதம் பற்றி கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 117 மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்கட்டமாக டேராடூன், ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 நகரங்களில் உள்ள மதரஸாக்களில் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, மற்ற மதரஸாக்களில் இந்த புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த கல்வி ஆண்டு முதல் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆர்டி) கவுன்சில் பாட புத்தகங்களையும் பாடதிட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர் ஷதாப் ஷாம்ஸ் கூறும்போது, “இந்திய கலாச்சாரம் மற்றும் உண்மையான மதிப்புகளை எடுத்துரைக்கும் காவியம் ராமாயணம் ஆகும். இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாக விளங்கும் கடவுள் ராமரின் குணநலன்கள் குறித்துமாணவர்களுக்கு கற்பிக்க உள்ளோம். வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் 117 மதரஸாக்களிலும் சம்ஸ்கிருத மொழியுடன் ராமாயணம் குறித்த பாடங்களை கற்பிக்கஉள்ளோம். அப்போதுதான் மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்துடன் இணைய முடியும். இது நமது பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் உதவும்.
நாம் அரேபியர்களோ, மங்கோலியர்களோ அல்ல. நாம் இந்தியர்கள். எனவே, நம் நாட்டை நன்கு புரிந்துகொள்ள ராமாயணத்தின் மதிப்பை வளர்க்க வேண்டியது அவசியம். அடிப்படைவாதத்தை ஒழிக்க அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கவேண்டும் என்ற நேர்மறையான கருத்தில் இதை நாங்கள் தொடங்குகிறோம். பொதுவாக மதரஸாக்கள் அடிப்படைவாதத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு உள்ளது. அது தவறு” என்றார்.