உண்ணாவிரதம் – விதிமீறலால் விபரீதமே!

உணவில்லாமல் பசித்திருப்பதற்கு பெரிய மன உறுதி தேவை இல்லை. ஆனால் ஆடி, ஆவணி விழாக்கால சிறப்பு உணவு வகைகளை பார்த்துப் பார்த்து சுவையாக அனைத்தும் நம் கைகளாலேயே செய்து வைத்திருந்தும் நாம் அதனை உண்ணாமல் பிறருக்கு அன்பாக பரிமாறி அவர்களை உண்ணவைத்து, அழகு பார்ப்பதற்கு மிகுந்த அன்பும் மன உறுதியும் தேவை. இத்தகைய நற்குணங்களே குடும்பத்தையும் நாட்டையும் வழி நடத்த தேவை. இதை மிக எளிதாக நம் ஹிந்து தர்மம் கற்பிக்கிறது.

வீட்டினை வழி நடத்தும் வீட்டின் மகாராணியாகிய பெண்களுக்கு சில விரதங்களையும், ஆண்களுக்கு சஷ்டி போன்ற சில விரதங்களையும் கொடுத்து அவர்களின் மன உறுதியையும் அன்பையும் அதிகமாக்குகிறது. தினமும் அம்மாவை நான்கு முறை சுற்றிவரும் தன் தாய் விரதம் இருக்கிறார் என்றால் அன்று அவரை நாற்பது முறை சுற்றிவருவார்கள். ‘அம்மா, நான் உனக்கு இதை செய்யவா, அதை எடுத்து கொடுக்கவா?” என தங்களையும் அறியாமல் தங்களால் இயன்ற உதவி செய்வார்கள். கணவனும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் தன் மனைவி விரதம் இருப்பதை பார்க்கும்போது அவனுக்குள் அன்பு பலமடங்கு பெருகும். மனைவியை தன் தாயின் மறு உருவமாகவே காணுவான். மகாத்மா காந்திகூட தன் தன் தாய் விரதம் இருப்பதையும் அன்று சூரியன் தெரியாமல் மேகங்கள் சூழ்ந்து இருப்பதையும் அதனால் தன் தாய் அதை இறைவனின் கட்டளையாக ஏற்று அன்று முழுவதும் உணவு மிக உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார் என்றால் விரதத்தினால் குடும்பத்தின் அன்பு எப்படி அபரிமிதமாக வளர்கிறது என்பதை நாம் அறியலாம்.

விரதங்கள் நம் மனதினை உறுதிபடுத்துவது, அன்பை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அது நம் உடலின் கழிவுகளை அகற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நம் வாழ்க்கை முறையை செம்மையாக்கி நம்மை ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வைக்கிறது. ஆனால் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்ட நம் உடல், மனதின் ஆரோக்கியம் பேணும் அந்த விரதங்களை நாம் முறையாக கடைபிடிக்கின்றோமா, அதற்கான வழிமுறைகளை சரியாக அறிந்து வைத்திருக்கின்றோமா என்றால், இல்லை.  அவற்றை நாம் முறையான பயிற்றுவித்தல் இல்லாமலும், நம்முடைய பலவீனமான மனதால் சில உணவு ஆசைகளை கட்டுபடுத்த நமக்கு நாமே சாக்குப்போக்குகளை சொல்லிக்கொண்டு காலப்போக்கில் மறந்துவிட்டோம். ஒருவர் முறையாக உண்ணாவிரதம் இருந்தால் அவருக்குள் உள்ள உடல், மனக்கழிவுகள் மெல்ல நீங்க தொடங்கும்; ஆரோக்கியம் அதிகரிக்கும்; சக்தி பெருகும்; கண்கள் பிரகாசமாகும்; ஆன்மிக ஆற்றல் பெருகி முகத்தில் ஒருவித வசீகரிக்கும் தேஜஸ் அதிகரிக்கும்; வாழ்நாள் பெருகும்.

இன்றைய நவீன காலகட்டத்தில், அவசர யுகத்தில் விரதங்களுக்கு நேரம் இல்லை. அப்படியே விரதம் இருந்தாலும் அதை முறையாக கடைபிடிப்பதில்லை, சிற்றுண்டி சாப்பிடுவதால் விரததிற்கு பங்கம் வராது எனக் கூறி சில பல இட்லிகளை உள்ளே தள்ளுவது, பால் குடிப்பது, பழங்களை வயிறுமுட்ட உண்பது என்பதே இன்றைய நவீன விரதமாக மாறிவிட்டது. இதனால் நல்ல பலன்களுக்கு பதில் திடீர் உணவு மாற்றத்தின் காரணமாக அஜீரணம், மலசிக்கல், வாயு தொந்தரவு போன்ற சில உடல் உபாதைகளே ஏற்படுகின்றன. முறையான உண்ணாவிரதத்தை எப்படி கடைபிடிப்பது அதற்கு முன் நாம் செய்யவேண்டியது என்ன, விரதம் முடிக்கும்போது அதை எப்படி முறையாக முடிப்பது.

(இனி)