உணவு, உடை, உறைவிடத்தில் கோடையைக் கொண்டாடலாம் வாங்க!

மாற்றம் ஒன்றே மாறாதது. கோடை, உக்கிரமான வெய்யிலுடன் ஆஜர்! நம் அன்றாட உணவு உடை உறைவிடத்தில் காலச் நிலைக்கேற்ப சிற்சில சிறிய மாற்றங்களை செய்துகொண்டால் கோடையை எளிதாக சமாளிக்கலாம். சில குறிப்புகள் உங்களுக்காக இதோ!!

உடை, அலங்காரம்

பருத்தி ஆடை உடுப்பது நல்லது. காற்றுப் புகாத உடைகள், சிந்தடிக் உடைகளை தவிர்ப்பது நல்லது.

தளர்வான உடைகளால் உடல் சுவாசிக்கும். இறுக்கமான உடைகளால் உடல் சோர்வடையும்.

வெளிர்நிற உடைகள் வெப்பத்தினை பிரதிபலித்து உடலை காக்கும். அடர்நிற உடைகள் வெப்பத்தை உள்ளிழுத்து உடல் சூட்டை கூட்டும்.

நம் பாரம்பரிய வேட்டி சட்டை, பருத்தி புடவை, தாவணி பயன்படுத்தி அதன் மேன்மையை உணரலாம். ஜீன்ஸ், லுங்கி, நைலான் துணிகளை ஓரம் கட்டலாம்.

நம் கலாசாரத்தில் பெண்கள் தினமும் தலையில் பூக்களை சூடுவது அழகுக்காக மட்டும் அல்ல. அது மனதை சாந்தப்படுத்தும், உடலை குளிர்விக்கும். எனவே பெண்கள் அனைவரும் தினமும் பூச்சூடலாம்.

உரக் கலப்பிலாத செம்மண், புற்றுமண், முல்தானிமிட்டி, பழங்கள், தயிர் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு பேஸ்-பேக் செய்தால் இயற்கையாக நீண்டகால அளவில் முக அழகை கூட்டலாம். செயற்கை ரசாயன பேஸ்-பேக் உடனடியாக முக அழகை கூட்டினாலும் பின்விளைவுகள் பற்றி யோசிப்பது நல்லது.

பயத்தம்மாவு, கடலைமாவு, முல்தானிமிட்டி, மூலிகை குளியல்பொடி போன்ற இயற்கை குளியல் பொருட்கள் அழுக்கை போக்கி உடலை அதன் இயற்கையான ஈரப்பதத்துடன் மென்மையாக வைக்கும். எனவே இதனை பயன்படுத்தினால் சன்ஸ்கிரீன் லோஷன் தேவைப்படாது. அப்படி தேவைபட்டால் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். ரசாயன சோப்புகள் அழுக்குடன் ஈரப்பதத்தை போக்கி உடலை வறட்சியாக்கிவிடும். எனவே அதிகமாக வெயிலில் அலைபவர்கள் கட்டாயம் சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டிவரலாம்.

உறைவிடம்:

வீட்டை சுற்றிலும் மரங்கள், செடிகள் வளர்ப்பது, மாடிதோட்டம் அமைப்பது கோடையில் வீட்டை குளுமையாக்கும், இது இயற்கையான காய்கறிகளை நாமே விளைவித்து கொள்ளும் மனதிற்கு இனிமையான பொழுதுபோக்காகவும் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

வெண்மை நிற பெயிண்டை நடைபாதை, மொட்டைமாடி இங்கெல்லாம் அடித்தால் கோடைவெயிலின் வெப்பம் தடுத்து பிரதிபலிக்கப்படும் அதனால் 5 முதல் 10 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் குறையும்.

வெட்டிவேர் தட்டி வாசனையுடன் வெப்பத்தை தணிக்கும்.

தினமும் துணி அலசும் நீரை வீட்டில் நடைபாதை,  மொட்டைமாடிகளில் தெளித்தால் வீட்டின் உள்பகுதியில் தூசு படிவதும் குறையும், உஷ்ணமும் குறையும்.

வீடு கட்டுபவர்கள் தளத்தின் உயரத்தை அதிகரிப்பதால் வீட்டின் உள்பக்கம் வெப்பத்தின் தாக்கம் குறையும்.

இன்வெர்ட்டர், குளிர்சாதன பெட்டிகளை ஏசி இருக்கும் அறையில் வைக்காமல் இருந்தால் அதனால் வரும் பாதிப்பும் அதிகப்படியான வெப்பமும் குறையும்.

ஏசி’யை 18, 20 என அதிக குளிராக வைத்து இழுத்து போர்த்திகொண்டு தூங்குவதைவிட 26 – 28 வைத்து டேபிள் பேன் அல்லது பெடஸ்டல் பேனை ஓடவிட்டால் அறை உடலுக்கு இதமாக குளிர்விக்கபட்டு நிம்மதியாக உறங்கலாம், மின்சாரமும் சேமிக்கப்படும்.

சென்னை, புதுச்சேரி போன்ற கடலோரப்பகுதிகள் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் ஏர்கூலர்கள் அவ்வளவாக உதவாது. அப்படி பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் அதிகப்படியான ஈரம் உடலில் பிசுபிசுப்பையும், சளி தொந்தரவுகளையும் தரலாம்.

வெய்யில் காலத்திற்கு உதவாத ரெக்ரான், ஸ்பான்ஞ், போம் மெத்தை
களுக்கு மாற்றாக எக்காலத்திற்கும் ஏற்ற இலவம்பஞ்சு மெத்தை, கோரைப்பாய் பயன்படுத்தலாம்.

இரவு 9.00 மணிக்குமேல் நம் வீட்டு ஜன்னலில் ஒரு எக்ஸாஸ்ட் பேனை வீட்டின் உள்பக்கமாக பார்த்து ஓடவிட்டால் வெளியில் இருக்கும் குளுமையான காற்று உள்செலுத்தபட்டு சில நிமிடங்களில் அறை குளிர்ந்துவிடும், ஏசி, ஏர்கூலர் தேவைபடாது.

முடிந்தவரை காலையிலேயே உங்கள் வேலைகளை முடித்திடுங்கள் அல்லது மாலைக்கு ஒத்திவையுங்கள், உச்சி வெயிலில் வெளியே அலையாமல் வீடு, அலுவலகங்களில் இருந்திடுங்கள், அப்படி செல்லவேண்டி இருந்தால் தகுந்த முன்னெச்சரிக்கையை கையாளுங்கள்.

இந்த சில எளிய ஆலோசனைகளுடன் உங்களுக்கு தெரிந்த பல யோசனைகளையும் இணைத்து பயன்படுத்தி கொளுத்தும் சூரியனை சமாளித்து கோடையையும் கொண்டாடுங்கள்.       

வேணும்

தண்ணீர் நிறைய அருந்தவும்

நீர்ச்சத்து மிகுந்த காய்கறி பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளவும்

சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்தவும்.

மோர், பழரசங்கள், இளநீர், பானகம், கூழ் போன்றவற்றை குடிக்கலாம்.

பாரம்பரிய இயற்கை குளிர்விப்பான்களாகிய மண்பானை நீர், சப்ஜா விதைகள், பாதாம்பிசின், கடல்பாசி போன்றவை உடலை இதமாக்கும்.

எள் உருண்டை, கடலை உருண்டை, பணியாரம், கொழுக்கட்டை, சுண்டல் போன்ற மாலைநேர உணவுகள் ஆயுளை காக்கும்.

எளிதில் செரிமானமாகும் சைவ உணவுகள், காய்கறி சாலட், பழசாலட் அவலில் செய்த உணவுகள் போன்றவை உடலை குளிர்விக்கும்.

கோடையில் குறைவாக / அளவாக உண்பது உயிரை வளர்க்கும்.

வேணாம்

காபி, டீ தவிர்க்கவும்

நீர்ச்சத்து இல்லாத வற்றல், உலர் பழங்களை நேரடியாக அதிகம் எடுப்பதை குறைத்துகொள்ளவும்.

அரிசி, கோதுமையை குறைத்துகொள்ளவும்.

கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம் தவிர்க்கலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் அதிகமாக குளிர்விக்கபட்ட பொருட்கள் பர்ஸை பதம் பார்க்கும்.

வயிறுக்கு பிரச்சினை தரும் பஜ்ஜி, போண்டா, பகோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆஞ்சியோ செய்ய நாள் குறிக்கும்.

எளிதில் செரிமானமாகாத வறுத்த பொரித்த உணவுகள், மைதா கலந்த பொருட்கள், பிட்ஸா, பர்கர், போன்றவை நோயை வரவைக்கும்.

கோடையில் அதிகம் உண்பது உயிலை எழுத வைக்கும்!!!