உடல், மன நல வாழ்வுக்கு உதவ நகரில் ‘கிராமிய’ சூழல்

 

இப்போதெல்லாம் மன அழுத்தம் பதின்பருவம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது என்று உளவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். உலகை அச்சுறுத்துகின்ற ஆரோக்கிய குறைபாடு மன அழுத்தம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இதைக் களைவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தோ, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்பது குறித்தோ போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது துரதிருஷ்டமே.

இயற்கையோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ அவ்வளவே உடல், மன நலம் என்ற கூற்று மிகையன்று என்பதை சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. இது பற்றிய ஆய்வுகள் அடங்கிய அறிவியல் கட்டுரை சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்ற விஞ்ஞான இதழில் வெளிவந்துள்ளது. பசுமையும் கிராமியச் சூழலும் உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளத்துக்கும் இதமளிக்கிறது. பசுமையிலிருந்தும் கிராமியச் சூழலிலிருந்தும் விலகுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் ரணமளிக்கிறது.

கிராமங்களில் அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருபவர்களைவிட, நகரங்களில் இரைச்சலான சூழ்நிலையில் வாழ்ந்து வருபவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

உலகம், நகரமயமாகிவருகிறது. இதற்கு பாரதமும் விதிவிலக்கல்ல. நகர மயம் அதிகரித்து வந்தாலும் கூட முடிந்த அளவுக்கு கிராமியச் சூழலை உருவாக்கிக் கொள்வது விரும்பத்தக்கது. கிராமங்களில் உள்ள உறவு சார்ந்த கட்டுக்கோப்பு நகரங்களில் சாத்தியம் அல்ல. இருப்பினும் ஓரளவுக்கேனும் நட்பின் அடிப்படையிலான நெட் ஒர்க்கை வலுப்படுத்திக் கொள்வது நல்லது. நகரங்களில் கூட குடிசைப்பகுதிகளில் பிணைப்பு வலுவாக உள்ளது. அங்கே புறத்தூய்மை சற்று குறைவாக இருப்பினும் மனத் திண்மையும் உளமார்ந்த பரிவர்த்தனையும் செம்மையாக உள்ளன என்பதை மறுக்க முடியாது.

நகரங்களில் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை தவிர்க்க முடியாதது. இதிலிருந்து சிறிதுகாலமாவது விடுபடுவது மன அழுத்தத்தை தணிக்க உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இப்போதும் கூட பல கிராமங்களில் பசுமையான தோட்டங்களின் நடுவே எளிய வீடுகள் உள்ளன. இத்தகைய சூழல் உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் துன்பங்களை துரத்தியடிக்கிறது.

நகர வாழ்க்கையைத் துறந்துவிட்டு அனைவரும் கிராமங்களுக்குச் செல்லவேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது. குடியிருப்புப் பகுதியில் கிடைக்கக்கூடிய சொற்ப இடத்தில் கூட பயனுள்ள செடிகளை வளர்க்க முடியும். நகரங்களில் இத்தகைய ஹோம் கார்டன் அமைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய நற்போக்கு வரவேற்புக்குரியது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இதைக் கருத்தில் கொண்டு நகரங்களிலேயே இதமான கிராமியச் சூழலை கொண்டுவரலாம். அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையோ அல்லது இரு முறையோ பசுமை நிறைந்த கிராமங்களுக்குச் சென்று வருவது உடலுக்குத் தெம்பையும் உள்ளத்துக்கு உவப்பையும் அளிக்கும் என்பது திண்ணம்.