பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக நாட்டமுடையவர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர். பாரதத்தின் மேற்குவங்க மாநிலம், மேதினிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் தாகூர்தாஸ் − பகவதி தேவி ஆகியோருக்கு, 1820ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி மகனாகப் பிறந்தார். 1839ம் ஆண்டில், ஹிந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841ம் ஆண்டில், “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சமஸ்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமஸ்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது.
தனது 9 வயதில், கல்கத்தாவுக்குச் சென்று, பாகுபலி சரண் பர்ரா பஜாரில் வசிக்கத் தொடங்கினார். வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வாங்க வசதி இல்லாததால், தெரு விளக்கின் கீழ் படித்தார். அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாகவும், விரைவாகவும் தேர்ச்சிப் பெற்றார். அவரது கல்வித் திறனுக்காக, பல உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. தன்னையும், குடும்பத்தையும் ஆதரிக்க, ஈஷ்வர் சந்திரா ஜோராஷன் கோயிலில் ஒரு பகுதிநேர போதனைப் பணியை மேற்கொண்டார். 1841ல், சமஸ்கிருத இலக்கணம், இலக்கியம், இயங்கியல் வேதாந்தம், ஸ்மிருதி மற்றும் வானியல் ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்றார். ஈஸ்வர சந்திரா தனது பதினான்கு வயதில், தினமயி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1841ம் ஆண்டில், ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் முக்கியப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். 1846ம் ஆண்டில், கல்லூரியின் செயலாளரானார். 1851ம் ஆண்டில் அதன் முதல்வராக பொறுப்பேற்றார். 1855ம் ஆண்டில், வங்காளத்தின் தெற்குப் பகுதிக்கு சிறப்புப் பள்ளி ஆய்வாளராகக் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற இவரது முற்போக்கு எண்ணத்தினால், 35 பெண்கள் பள்ளிகளை நிறுவினார். பாரதத்தில் குறிப்பாக வங்காளத்தில் பெண்களின் நிலையை உயர்த்தினார். மாற்றுச் சங்கங்கள் அமைக்க முயன்ற சில சீர்திருத்தவாதிகள் போலல்லாமல், சமூகத்தை உள்ளிருந்து மாற்ற முயன்றார். வித்யாசாகர் ஒரு பழமையான ஹிந்து பிராமணர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரது பார்வையில் முற்போக்குத் தன்மை உடையவராக இருந்தார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்டு அதன்காரணமாக தங்களின் வாழ்க்கையை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்திய பெண்களின் நலனுக்காகவும், இளமையில் திருமணமாகி கணவரின் மறைவு காரணமாக, இளம் வயதில் விதவையாகும் பெண்களின் மறுமணம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். மேலும் பிராமண சமூக மக்களில் பலர் விதவையானதும் தலையை மொட்டையடித்து வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையினை கண்டு உள்ளம் வருந்தினார்.
இதற்கென வங்காளத்தில் பல புதிய சட்டங்களை உருவாக்கப் போராடினார். அதற்காக `நந்தன் கானன்’ என்று அழைக்கப்பட்ட அவரது வீட்டு வளாகத்தில், பெண்கள் பள்ளி மற்றும் முதியவர்களுக்கான இரவுப் பள்ளி அமைத்தார். வசதியற்ற பழங்குடி மக்களுக்கு சில மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக ஒரு இலவச `ஹோமியோபதி’ கிளினிக்கையும் திறந்தார். ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். 1891ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி, 70ம் வயதில் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு, ரவீந்திரநாத் தாகூர், “நாற்பது மில்லியன் வங்காளிகளை உருவாக்கும் பணியில் கடவுள் எப்படி ஒரு மனிதனை உருவாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.