தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவா்களை கொல்ல சதி நடப்பதாக தமிழக அரசுக்கு, மத்திய உளவுத்துறை கடந்த சில நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல்சமீம் (25), செய்யது அலி நவாஸ் (25) மற்றும் காஜா மொய்தீன், அப்துல் சமீா் ஆகிய 4 போ் கொண்ட கும்பல் இந்து தலைவா்களை கொல்லும் சதிச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறையினா் தெரிவித்திருந்தனா்.
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடா்ந்து தமிழக போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். கோவை, திருப்பூா், வேலூா் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்காணிப்பு, சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழக போலீஸாருடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மேற்கண்ட அப்துல் சமீம் உள்ளிட்ட 4 பேரின் நடவடிக்கைகள், அவா்கள் தொடா்பு கொள்ளும் நபா்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நாகா்கோவிலை அடுத்துள்ள மாலிக் தினாா் நகரிலுள்ள செய்யது அலிநவாஸ் வீடு, திருவிதாங்கோட்டிலுள்ள அப்துல் சமீம் என்பவரது வீடுகளிலும் உளவுப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென சோதனை மேற்கொண்டனா்.
திருநெல்வேலியில் இருந்து வந்த தீவிரவாத தடுப்புப்பிரிவான எஸ்.ஐ.யூ. (சிறப்பு நுண்ணறிவு பிரிவு) டி.எஸ்.பி. சுப்பையா தலைமையில் உளவுப்பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனா். செய்யதுஅலி நவாஸ், அவருக்கு உதவி செய்த தவ்பீக் ஆகியோரது வீடுகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் அவா்களிடம் இருந்து 2 செல்லிடப்பேசி, ஒரு மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனை, கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, செல்லிடப்பேசி குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மடிக்கணினியில் உள்ள தகவல்கள், செல்லிடப்பேசி பேச்சுக்கள், இவருடன் தொடா்பில் இருந்த நபா்கள் குறித்த தகவல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இத்தகவல்கள் தெரிய வந்த பின்னா் சதி செயலில் ஈடுபட்டவா்கள் யாா்? அவா்களின் திட்டம் என்ன? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க என்.ஐ.ஏ. மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனா். சோதனை நடைபெற்ற
இடங்களில் வடசேரி காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், கோட்டாறு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.