காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய் என்பதில் சொற்சுவையும் பொருட்சுவையும் பின்னிப் பிணைந்துள்ளன.
உலர்ந்த இஞ்சி சுக்கு என்று அழைக்கப்படுகிறது. சுக்கை விஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியனை விஞ்சிய தெய்வமும் இல்லை என்ற பழமொழி இப்போதும் கிராமங்களில் உயிர்ப்புடன் உள்ளது.
இஞ்சி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனினும் இஞ்சியை அதிக அளவுபயன்படுத்துவது விரும்பத்தக்கது அல்ல. அளவுடனேயே இஞ்சியை பயன்படுத்த வேண்டும். இஞ்சி சாற்றில் தேன் கலந்து தினந்தோறும் உண்டுவந்தால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். இஞ்சி தேநீர் அலாதி சுவை கொண்டது. ஆரோக்கியத்திற்கும் இது உகந்தது. இஞ்சி முறப்பா வாந்தியை தடுக்கக்கூடியது. ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் இது பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.
எடையை அதிகரிக்க விரும்புவர்கள் எள்ளையும் எடையை குறைக்க விரும்பவர்கள் கொள்ளையும் சாப்பிடலாம் என்பதற்கு இணங்க எடையை குறைக்க விரும்புவர்கள் இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம். எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இஞ்சியை சேர்த்துக்கொள்ளக் கூடாது.
இஞ்சி சாகுபடியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. பாரதத்தில் உற்பத்தி ஆகும் இஞ்சியில் கேரளாவின் பங்கு சுமார் 70 சதவீதம். அசாம், ஆந்திரா, தெலுங்கானா, ஹிமாசலப் பிரதேசம், உத்தாரகண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இஞ்சி சாகுபடி நடைபெறுகிறது.
வங்காளத்தில் கூச்பிகாரில் உள்ள வேளாண் பல்கலைக் கழகம் சமீபத்தில் மோகினி என்ற புதிய இஞ்சி ரகத்தை வெளியிட்டுள்ளது. 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக பல்வேறு இஞ்சி ரகங்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சி நடத்திய வேளாண் விஞானிகள் பாரம்பரிய இஞ்சி வகைகளை இணைத்து இந்த புதிய ரகத்தை உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய விவரங்களை ஆய்வு குழுவின் தலைவர் சௌமேந்திர சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். மோகினி இஞ்சி பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
பூச்சி தாக்குதலை கூடுமானவரை தாக்குப்பிடிக்கக்கூடிய இயல்பு கொண்ட மோகினி இஞ்சி நறுமணச் செறிவு மிக்கதாக உள்ளது. எரிப்புத் திறன் அடர்த்தி மிக்கதாக உள்ளது. அதிக மகசூலை அளிக்கக்கூடியதாகவும் திகழ்கிறது. பொதுவாக ஒரு ஹெக்டேரில் 6 முதல் 10 டன் அளவுக்குத்தான் இஞ்சி விளையும். ஆனால் மோகினி இஞ்சி, ஒரு ஹெக்டேரில் 14 முதல் 15 டன் வரை மகசூல் தருகிறது என்பதை சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
மோகினி இஞ்சியை வர்த்தகப் பயன்பாட்டுக்காக விரைவில் விடுக்க இருக்கிறோம் என்று வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் சிரந்தன் சட்டோபாத்யாய தெரிவித்துள்ளார். மத்திய விவசாயத் துறை இணைச் செயலாளர் பி. ராஜேந்தர் மோகினி இஞ்சி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் இஞ்சி மகசூலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.