அந்தக் குழந்தை போர்வெல்லில் சிக்கியிருக்கும் சமயத்தில் எழுதியது.
ஆண்டொன்றிற்கு 10 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள்… அவர்கள் இதனாலெல்லாம் இறக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் செய்தியாக்கினவா?
சரி, குழந்தை சிக்கிக்கொண்டது; மீட்க வேலை நடக்கிறது. பெற்றோருக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் அவர்கள் பொறுப்பில்லாமல் திறந்து வைத்திருந்ததால்…
அவர்கள் கண்காணிக்காமல் விட்டதால் 2 வயது குழந்தை அதில் விழுந்தது. ஆனால் மீடியா அதை எப்படி எடுத்துச் செல்கிறதுன்னு பாருங்க…குழந்தை சிக்கிக்கொண்ட செய்தி வெளியான உடனே… அது சம்மந்தப்பட்ட அறம் சினிமா இயக்குனரை தொடர்பு கொண்டு பேட்டியெடுத்தால்… அது பிச்சிக்கிட்டு ஓடும் என்கிற ஐடியாவில் ஒளிந்திருக்கிறது ஊடக வக்கிரம்.
அந்த அம்மா போர்வெல்லுக்குள் இருக்கும் குழந்தையுடன் உரையாடுவதை BGM சர்ரவுண்டுடன் ஒளிபரப்பி…
உளவியல் ரீதியாக நம்மை உசுப்பேற்றி , நம்மை கட்டிப்போட்டு வைத்தார்கள்!
அதாவது அவர்கள் துயரம் என்று நினைப்பது தான் நாமும் துயரம் என்று முடிவுவெடுக்க வேண்டும் . அவர்கள் எதற்காக வெகுண்டெழுகிறார்களோ அதற்கு நாமும் வெகுண்டெழ வேண்டும் .
அவர்கள் அஜெண்டாவை செட் செய்வார்கள்; நாம் அதனுடன் பயணிக்க வேண்டும்.
அவர்கள் நினைத்தால்
நம்மை அழவைக்கலாம்…
அவர்கள் நினைத்தால் நம்மை
கோபமடைய வைக்கலாம்…
அவர்கள் நினைத்தால் நாம் சிரிக்கலாம் ….
இதன் நீட்சி என்ன தெரியுமா?
அவர்கள் நினைத்தால்
தளபதி என்று சொல்லிக் கொண்டு ஒருவர்
முதலமைச்சராக முயற்சிக்கலாம்.