நாவலர் என திருவாவடுதுறை ஆதீனத்தால் பட்டமளிக்கப்பட்ட, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் 1822-ல் இலங்கையில் பிறந்தார். சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்று விளங்கினார். வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பள்ளியின் நிறுவனரின் வேண்டுகோளால் பைபிள், கிறிஸ்துவ இலக்கியங்களை மொழி பெயர்த்தார். அப்போது இலங்கையில், கிறிஸ்துவ மிஷனரிகள் மக்களை மதம் மாற்றியதை கண்டு மனம் வெதும்பினார். இலங்கையில் உள்ள ஹிந்துக்களுக்கு தங்கள் சமயம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை, சரியான வழிகாட்டி அமையவில்லை என்பதை உணர்ந்தார். எனவே, சமயத் தொண்டாற்றுவதையே தன் குறிக்கோளாய் ஏற்று, ஆசிரியர் பணியை துறந்தார். கோயில்களில் தேவார, திருவாசகங்களைப் பாடி மக்கள் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டினார்.
தனது வீட்டிலேயே ஒரு அச்சுக்கூடம் நிறுவினார். மாணவர்கள் பயன்பெற பாலபாடம், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, போன்ற நூல்களும், சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படையுரை, சூடாமணி நிகண்டுரை, செளந்தரியலஹரி போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார்.
இலங்கையில் மதமாற்றத்திற்கு எதிராக, சைவசமய நூல்களையே தன் போர்க்கலன்களாக கொண்டு, தன்னந்தனியராக தானே ஓர் அமைப்பாக இயங்கினார். கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிராக அவர் எழுதிய நூல்களில் சைவ சமய தூஷணப் பரிகாரம், சுப்பிரபோதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை . இவை அனைவரின் பேராதரவைப் பெற்றது. எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு வெற்றி பெற்ற இவரால், தமிழில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆறுமுக நாவலரின் பிறந்த தினம் இன்று.