பயணிகள் அவசரகால மருத்துவ வசதி பெறும் வகையில் மாம்பலம், ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டும் இலவச மருத்துவ உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் படுக்கைகள் மற்றும் முதலுதவி அளித்து நோயாளிகளை நிலைப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள், சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த மையத்தில் ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவ மையங்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே இந்த வசதியை மேலும் 10 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங்களில் முன்பைவிட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டுமே தினமும் 10 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.பயணிகளுக்கு திடீரென காயம், சுளுக்கு, மாரடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் முதலுதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு உடனடி மருத்துவ முதலு தவி அவசியமாகும்.
பயணிகளை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான முழு வசதிகளும் இங்கு இருக்கின்றன. நடைமேடைகள், ரயில்களில் இருந்து பாதிக்கப்பட் டவர்களை அவசர உதவி மையத் துக்கு அழைத்து வருவதற்கு பேட்டரியில் இயங்கும் வாகனங் களும் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த மருத்துவ மையங்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்நிலையில், அடுத்த கட்டமாக மாம்பலம், ஆவடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், திருவான்மியூர், ஆம்பூர், அரக் கோணம், மேல்மருவத்தூர், திருத்தணி ஆகிய 10 ரயில் நிலையங்களில் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்கள் தொடங்க உள்ளோம்.இதற்கான, கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிந்தவுடன் 10 ரயில் நிலையங்களிலும் விரைவில் மருத்துவ உதவி மையங்களை திறக்க உள்ளோம்’’ என்றனர்.