( நீத்தார் நினைவு நாள் (DAY OF THE DEAD) இந்த நாளை மெக்ஸிகோ நாட்டில் வாழும் மக்கள் அவர்களின்
பண்பாட்டுத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.இந்த நாள்( அக்டோபர் 31 முதல் நவம்பர் 02)மெக்ஸிகோ முழுவதற்கும் அரசாங்க விடுமுறைநாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக மத்திய,தென்பகுதி மக்களின் மிக முக்கியமான திருவிழாவாகக் கருதப்படுகிறது.ஸ்பானிஷ் மொழியில் இதை Dia de los Muertos என்று அழைக்கப்படுகிறது மெக்ஸிகோ மக்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை அரிஸோனா மாநிலத்தில் உள்ள “டுக்சான் “ (Tucson) என்கிற பகுதியில் இருந்தபோது நவம்பர் 02 ஆம் தேதியன்று இந்தக் கடைசிநாள் நிகழ்ச்சி யைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த விழாவின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், இறந்துபோன பெற்றோர்கள்,உறவினர்கள், சொந்த பந்தங்கள் நண்பர்கள், ஆகியோரை நினைவுகூறும் நாள். அவர்களது ஆன்மிகப் பயணத்தை நினைவுக்கூர்ந்து அவர்களின் படங்களை வைத்து அவரவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள்,பழங்கள்,இனிப்பு வகைகளை அதற்கு முன் வைத்துப் படையலிடுகின்றனர். 2008ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக அங்கீகரித்தது.மெக்ஸிகோ மக்கள் அதிகமாக வதியும் இடங்களிலும்,மெக்ஸிகோ நாட்டிலும் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் All Saints Day ,ஆலோவீன் எனும் விவசாயிகளின் திருவிழாவுடன் தொடர்புடையது.ஸ்பானிஷ் காரர்களின் காலனி ஆதிக்கத்திற்கு முன்னர் (அதாவது 16வது
நூற்றண்டிற்கு முன் ) கோடை காலத்தின் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா நாளடைவில் இது அக்டோபர் 31,நவம்பர் 1,2 நாட்களில் என்று மாற்றம் அடைந்தது. இதையே மேற்கித்திய கிறிஸ்தவர்கள் All saints day
eve,All saints Day ,All souls Day என்று கொண்டாடுகின்றனர். இந்த நாளன்று இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று அவர்களின் நினைவாக படையலிடுவது அவர்களின் பாரம்பரியமான பழக்கம். கத்தோலிக்க சர்ச்சுகளில் “ ஆல் செயிண்ட்ஸ் டே”என்று சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.இது தமிழ் நாட்டில் கல்லறை திருநாள் என்கிற பெயரில் கொண்டாடப் படுகிறது. ஆனால் இது ஓரு வித்யாசமான நிகழ்வு. இந்த நாளை மெக்ஸிகோவில் உள்ள மக்கள் மிகவும் வித்யாசமாக எப்படிக் கொண்டாடுகின்றனர் என்பதை இங்கே விவரிக்கிறேன்.
இறந்துபோனவர்களின் உடல் மண்ணுக்குள் புதைந்து போனாலும்,அவர்களது ஆன்மா ஆவியுலகத்தில் சஞ்சரிப்பதாக நம்பப்படுகிறது.இந்த குறிப்பிட்ட தினத்தன்று இறந்தவர்களின், வாரிசுகள், உறவினர்கள், நண்பர்கள், இறந்துபோனவர்களின் திருஉருவப் படத்தை வைத்து அலங்கரித்து மூன்றாவது நாளன்று மாலையில்,இருளும்மாலையும் சந்திக்கும் நேரத்தில் வித விதமான,வித்தியாசங்களான
ஆடைகள் அணிந்து,பேய்,பிசாசு,பூதங்கள் போல பயங்கரமாக ஒப்பனை செய்துகொண்டு இறந்தவர்களின் உருவப் படம் தங்கிய பதாதகைகளை சுமந்துகொண்டு ஊர்வலமாக வருகின்றனர்..கிட்டத்தட்ட, ஒருமணி நேரம்
நடக்கும் இந்த ஊர்வலத்தில் சுமார் எத்தனைபேர்கள் கலந்து கொள்வார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். இது தவிர,இதைக் காண சாலையின் இரு மருங்கிலும் ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தார்கள் என்பது தனிக்கணக்கு. ஊர்வலம் வரும் குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப் படுகிறது கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்றாலும் போலீஸ்காரர்கள் மோட்டார் சைக்கிளில் வலம்வந்துகொண்டு மக்களை ஸ்பானிஷ் மொழியில் நகைசுவையுடன் தெம்பூட்டுகின்றனர். அருமையான,அமைதியான,கட்டுப்பாடான ஊர்வலம்.பாண்டு வாத்தியங்கள்,இசைக்கருவிகள் முழங்க,ஒளிவிளக்கு மாலைகளை கழுத்தில் அணிந்துகொண்டு சைக்கிள் ரிக்ஷா க்களிலும்,நடந்துகொண்டும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றனர்
.குழந்தைகள்,செல்லப் பிராணிகளையும் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருகின்றனர். நாய்கள் கூட ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன. இதில் ஒரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்கூட ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா என்று முழங்கிக்கொண்டு,பஜனை செய்துகொண்டு
ஊர்வலத்தில் வந்தனர்.இறந்துபோன வளர்ப்பு மிருகங்களின் படங்களுடன் கூடிய பதாதகைகளைக் காணுன்போது வியப்பாக இருந்ததுடன் நமது நாட்டில் மஹாளய பக்ஷத்தின் போது (புரட்டாசி 15 நாட்கள்,பௌர்ணமி
முதல் அமாவாசை வரை) .நடத்தப் படும் சடங்குகள் நினைவுக்கு வருகிறது .பிரமணர்கள் 15 நாட்களும்,மற்றவர்கள் மஹாளய அமாவாசையன்று படையலிடுவதும் நினைவுக்கு வருகிறது.அந்த 15 நாட்களிலும், பிராமணர்கள் இறந்துபோன ஆவி வடிவில் இருக்கும் மூதாதையர்களுக்கு அந்த தினத்தன்று எள்ளும் தண்ணீரும் இறைத்து பித்ருக் கடன் தீர்ப்பார்கள் அந்த நாட்களில் மட்டுமல்ல ஒவ்வொரு அமாவாசை ,மாதப் பிறப்பு,கிரஹண தினங்களின் போதும் செய்வது வழக்கம்.
அதில் ஒரு மந்திரம்—-
ஏ ஷாம் ந மாதா,ந பிதா ,ந ப்ராதா
நச பாந்தவா ,நான்ய கோத்ரேண :
தே ஸர்வே த்ருப்தி மாயந்து மய : உத்ஸ்ருஷ்ட்டை :
குசோதஹை : த்ருப்யத ,த்ருப்யத த்ருப்யத:
இதன் பொருள் என்னவென்றால், “எவர் எவருக்கு,தாயில்லையோ தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ,நண்பர்கள் இல்லையோ,இதுபோன்று யாருமே இல்லாத அனாதை என்று சொல்லப்படும்
அனைவருக்கும் நான் அளிக்கும் இந்தஎள்ளும் ,தண்ணியும் திருப்தியை,திருப்தியை திருப்ததிருப்தியை அளிக்கட்டும்” என்று ஜாதி,மத பேதம் இல்லாமல் உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்று இந்த மந்திரத்தை சொல்லும்போது கண்கள் நிறைகின்றன எவ்வளவு
உயர்வான தத்துவம்? இதே போல கயாவில் பிண்டப் பிரதானம் செய்யும்போது,48 பிண்டங்களை சோற்று உருண்டைகள் அல்லது கோதுமை மாவு உருண்டைகளை தர்பையின் மீது வைத்து எள்ளும்,அரிசியும் கலந்த நன்னீரை மந்திரங்களை சொல்லி வார்த்துச்ராத்தம் செய்யப்படும் வழக்கம் உள்ளது.அப்போது மனிதர்கள்
மட்டுமல்லாது,வீட்டில் வளர்த்த செல்லப் பிராணிகளின் பெயர்களையும் கூடச் சொல்ல சொல்கின்றனர்.
அதேபோல இந்தத் திருவிழாவின்போது,நாய்கள்,பூனைகள் போன்ற விலங்கினங்களின் புகைப்படங்களையும் தாங்கிவருவது கண்டு வியந்தேன். எந்த நாடாக இருந்தாலும்,எந்த மொழியாக இருந்தாலும்,எந்த
ம தமாக இருந்தாலும், இப்படி நன்றிக்கடன் செலுத்தும் பண்பாடு இன்றளவும் சாகாமல் இருப்பதால்தான் மனித குலம் வளமோடு வாழ்கிறது..”டுக்சான் “ மெக்ஸிகோவின் எல்லையில் இருக்கிறது. எனவே அதன் தாக்கம் இங்கும் இருக்கிறது. இதைக்கண்டு நான் மெய் சிலிர்த்த அனுபவம் இது. ஆவியுலகில் இருக்கும் முன்னோர்கள் இந்த தினத்தன்று தங்கள் உறவினர்களை, மனிதர்களை சந்திக்க பூமிக்கு வருகின்றனராம். அவர்களை வரவேற்று உபசரித்து மகிழ்வடையச் செய்ய பேய்,பிசாசு,பூதம் போன்ற வேடமணிந்து வரவேற்கின்றனர். அதைக்கண்ட அவர்களும் மனம் உவந்து அவர்களை ஆசிர்வதித்து மீண்டும் மேல் உலகத்திற்கு (ஆவிகள் ராஜ்யத்திற்கு) செய்வதாக நம்புகின்றன்னார். அப்படிச் செய்யாவிட்டால், அவர்களின் ஆத்மா மனம் வருந்தி வருத்தத்துடன் திரும்பிச் செல்லுமாம். இந்த ஊர்வலத்தில்ஒரு பெரிய உண்டியல் ஏந்தி வருகின்றனர்.அவர்களிடம் கடிதங்கள்,பரிசுப் பொருள்களை மக்கள் அதில் இடுகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு கடிதம் எழுதுகின்றனர்.
ஊரவலத்தின் இறுதியில், உண்டியலில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் குவியலாகக் கொட்டிவைத்து அதற்கு தீ மூட்டி சாம்பலாகும்போது அவை அவர்களை சென்றடைவதாக நம்புகின்றனர் இதை மூட நம்பிக்கை என்று சொல்லமுடியாது! .பாராட்டத் தக்க நல்ல நம்பிக்கை என்றுதான் கொள்ளவேண்டும். இதில் என்னை மிகவும் மனம் நெகிழவைத்த ஒரு சம்பவத்தை சொல்லியே ஆகவேண்டும். ஒரு வயது முதிர்ந்த மாது அவள் கணவனுடன் ஒரு சக்கர நாற்காலியில் ஒரு எலும்புக்கூட்டை வைத்து அதற்கு மணப் பெண்போல அலங்கரித்திருந்தனர்.கவுன் போன்ற அந்த வெள்ளை ஆடை எலும்புக்கூடாக இருந்த அந்தப் பெண்மணியின் திருமண ஆடையாம். அவர் அந்த வயது முதிர்ந்த மாதுவின் தாயாராம்.அவரது திருமணத்தன்று அணிந்திருந்த ஆடையை இன்றுவரை பாதுக்காப்பாக வைத்திருந்து ஒவ்வொரு வருடமும் அணிவித்து சக்கர நாற்காலியில் வைத்து எடுத்து
வருகின்றனராம் .அவர் உயிரோடு இருந்தபோது இதே நாற்காலியில் அமர்ந்து தான் இந்த ஊர்வலத்தைப் பார்வையிடுவார்களாம். நான் என் மனைவி,மருமகன்,மகளுடன் அவர்களை சந்தித்து நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று அறிமுகம் செய்துகொண்டபோது அவர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்ததுடன் நிறைந்த
கண்களுடன், எனது அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்,உங்களுக்கு எங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று அவர்கள் சொன்னபோது எனது கண்கள் கலங்கின.ஒழுங்கான கட்டுப்பாடான இந்த
நன்றி தெரிவிக்கும் ஊர்வலத்தைப் பார்த்தபோது என் கண்கள் நிறைந்தன எனது முன்னோர்களுக்கும் மானசீகமாக நன்றி தெரிவித்து அவர்களை நினைவு கூர்ந்தேன்.எந்த மொழியாக,எந்த நாடாக எந்த மதமாக இருந்தால் என்ன? கடல் கடந்து என் மூதாதையர்களுக்கு நன்றி செலுத்தினேன் என்கிற மன நிறைவு எனக்கு ஏற்பட்டது.