அரசியல் மூலம் மக்கள் நலன் புரியும் பாரதிய ஜனதா கட்சி

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் அரசியல் மூலம் மக்கள் நலன் புரியும் பாரதிய ஜனதா கட்சி பற்றி அறிவோம்…

கடந்த நூற்றாண்டில் மூன்று புதிய சித்தாந்தங்கள் உருவானது. அவற்றில் ஒன்று, காற்று வாங்கி ஓய்வெடுத்து ஊர் வம்பு பேசிய குழுக்களில் உண்டான சித்தாந்தம், அதற்கு பெயர் காங்கிரஸ் என்றார்கள். 1887ல், அதன் மைய கருத்து முஸ்லிம்களை தாஜா செய்யும் அரசியல், பின்னாளில் அது மதச்சார்பற்ற அரசியல் என்று சொல்லப்பட்டது.

இரண்டாவது தொழிலாளிகளின் சர்வாதிகாரம் என்ற பெயரில், ரஷ்யாவில் உருவான கம்யூனிச சித்தாந்தம். இது 1925ல் உருவானது, 100 ஆண்டுகள் ஆகிறது.
மூன்றாவது சித்தாந்தம், ஹிந்துத்துவா, அகண்ட பாரதம், ஹிந்து தேசியவாதம் என்கின்ற ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம். இது 1925ல் உருவானது, 100 ஆண்டுகளாக இளமையோடு வளர்ந்து வருகிறது.

மற்ற இரண்டு சித்தாந்தங்களும், மண்ணோடு மண்ணாக மக்கி, இறுதி யாத்திரை நடத்திக் கொண்டு இருக்கிறது. இதற்கு மேலும் கடவுள் இல்லை, கடவுள் மறுப்பு என்கின்ற குட்டி பிசாசுகள் ஆங்காங்கே உருவானதும் நமக்குத் தெரியும்.

மைனாரிட்டி அல்லது முஸ்லிம்கள் தாஜாவினால், பாகிஸ்தான் என்ற நாட்டை காங்கிரஸ் உருவாக்கி ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்திய போது, வெகுண்டு எழுந்த அரசியல் இயக்கம் தான் ஜனசங்கம்.


1951 அக்டோபர் 21, டெல்லியில் ஜனசங்கம் உருவானது. முதல் தலைவர் காங்கிரஸ் மந்திரி சபையில் தொழில்துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. இவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல. 1951லிருந்து 1975 வரை ஜன சங்கத்தின் வளர்ச்சி அபாரம், ஆனால் ஆட்சியைப் பிடிக்கும் அளவில் இல்லை, மாபெரும் தலைவர்களை உருவாக்கியது – பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ணா அத்வானி, குஷாபாவு தாக்கரே, ஜனா கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில், இந்திராகாந்தி தேர்தல் செல்லாது என்று அறிவித்த போது, இந்திரா காந்திக்கு ஏற்பட்ட ஆபத்தை, பாரத நாட்டிற்கு ஏற்பட்ட ஆபத்து என்றதாக திரித்துக் கூறி, 1975ல் இந்திராகாந்தி அவசரநிலை அறிவித்தார். எதிர்த்த எதிர் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சிறைக்குள்ளே உருவானது தான் “ஜனதா கட்சி”.

பல கட்சிகளின் கூட்டணி என்பதை விட ஒன்று சேராத அவியல் என்றே சொல்லலாம், தண்ணீரில் விட்ட எண்ணெய் போல பிரிந்து இருந்தது. காரணம் இரட்டை உறுப்பினர் பிரச்சனை, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருக்கக் கூடாது என சொல்லி, ஜன சங்கத்தை தனிமைப்படுத்தியது.

1980 ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி உருவானது, பாரதிய ஜனதா கட்சி. 1980 − 1984லில் சொல்லும் படியான வெற்றி இல்லை. காங்கிரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்ற நிலையிலும் இல்லை. “ஸ்ரீராம ஜென்ம பூமி” அத்வானியின் ரத யாத்திரைக்கு பின்னால், பா.ஜ.கட்சி மாபெரும் எழுச்சி பெற்றது. 1991ல் அதன் வளர்ச்சி, நாடு முழுவதும் பரவியது.


ஜன சங்கம், பா.ஜ.க.வின் வளர்ச்சியை இணையதளங்களில் புள்ளி விவரங்களோடு, நாம் தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஆனால் அவை வெறும் புள்ளி விவரங்கள் மட்டுமே, அதில் தெரியாத மற்றொரு புள்ளி இருக்கிறது, அது ஆர்.எஸ்.எஸ். அதன் லட்சியம், சித்தாந்தத்தில் ஊறி, பா.ஜ.க. தலைவராக இருந்தார்கள், அதன் விளைவாக அந்த சித்தாந்தம் அரசியலில் மேலும் மெருகேரி வெற்றிகளை பெற்றது. இந்த சித்தாந்தத்தின் மையப் புள்ளிகளில் ஒன்றுதான், ஸ்ரீ ராமஜென்ம பூமி.

அயோத்தியாவில் உயிர் பலிதானம் செய்த ராமர் படையினுடைய வீரர்களின் ஆன்மா, 1998ல் பா.ஜ.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. அது பா.ஜ.க.வின் முதல் வளர்ச்சி. இடையில் 10 ஆண்டு காலங்கள் தொய்வாக இருந்தாலும் ஹிந்து விரோத, தேச விரோத அரசு பாரதத்தை ஆண்டதால், மக்கள் மாபெரும் அல்லுற்றார்கள்.

அந்த காலத்தில் பா.ஜ.க, தன்னுடைய போராட்டத்தை கைவிடவில்லை, மாறாக உத்வேகத்தை மேலும் உயர்த்தியது. விளைவு 2014 தேர்தலில், நமக்கு ஒரு போர் தளபதி, நரேந்திர தாமோதர தாஸ் மோடி கிடைத்தார்.

2001ல், குஜராத் முதல்வராக மிகுந்த குழப்பத்துக்கு உரிய சூழ்நிலையில், கட்சிக்குள்ளே மிகப்பெரிய அதிருப்தி இருந்த நேரத்தில், ஒரு வார்டு கவுன்சிலராக கூட தேர்தலில் நின்று அனுபவம் பெறாத, எம்.எல்.ஏ கூட ஆகாத மோடி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

வெளிநாட்டின் கைக்கூலிகள் பாரத நாட்டை செயலிழக்க செய்ய வேண்டும் என உள்நாட்டு சதிகாரர்களோடு தொடர்ந்து செய்த தாக்குதலை சமாளித்து, மாநிலத்தின் வளர்ச்சியையும் உயர்த்தி, பாரதத்தின் முதல் முன்னோடியான முதலமைச்சராக உருவெடுத்தார் நரேந்திர மோடி, குஜராத்தில் முதலமைச்சர் பொறுப்பு மோடிக்கு மிகப்பெரிய அனுபவத்தை பாடங்களை கற்றுக் கொடுத்தது.

மத ரீதியாக மாநிலத்தை அதன் அமைதியை பிளவுபடுத்தி, வளர்ச்சியில் முன்னுக்கு வராதபடி பார்த்துக் கொண்டனர் தேச விரோதிகள். அதை சுக்குநூறாக்கி, இரண்டையும் வென்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்தது. அந்த அனுபவங்கள் அவருக்கு பெருமளவில் கை கொடுத்தது.


2014ல், ஒன்று திரண்ட களப்பணிக்கு கிடைத்த வெற்றி, காலம் காலமாக பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பணியாற்றியதின் விளைவு, ஒரு முகமாக சேர்ந்து மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.

அதுவும் அறுதிப் பெரும்பான்மை பெற்றுத் தந்தது. முதல் கட்ட பணிகளில், தொலைநோக்குப் பார்வையில், நீண்ட கால திட்டங்களை அமுல்படுத்த முயற்சித்தார்.

ஆனால் முதல் இரண்டு ஆண்டுகள் ஒன்றிணைந்த தேசவிரோதிகள், இவைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார்கள், மூன்றாவது ஆண்டில் நடையை மாற்றினார் மோடி, அதன் விளைவு திட்டங்களை முன்வைத்து வெற்றி பெற்றார்.

2019 – 2024ல், இந்த ஆட்சி மீண்டும் தொடராது, பா.ஜ.க. அஸ்தமித்து போகும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தவர்கள் அஸ்தமித்தார்கள். மீண்டும் ஒரு வலுவான அறுதி பெரும்பான்மையோடு ஆட்சி அமைந்தது.

இந்த காலகட்டம், பாரத நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு திருப்புமுனை காலம். உலகத்தில் பாரதத்தின் மரியாதையும், பெருமையும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட காலம். பாரதம் பெரிதும் உலகில் மதிக்கப்பட்ட காலம்.

சாமானிய மனிதர்களை, சகஜமான மனிதர்களாக மாற்றும் செயல் முதல், நீண்ட கால பொருளாதாரத்திற்கு அடித்தளமிட்ட வேலை வரை, இந்த ஐந்தாண்டு காலத்தை மோடி அசராமல் நடத்தினார். இது மோடி புராணம் அல்ல, சரித்திரத்தை நினைவு கூற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

உலகமே பின்தங்கி மக்களின் வாழ்க்கை, உயிர் கேள்விக்குறியான கொரோனா காலத்தில், சுயசார்போடு அதற்கான பாதுகாப்பு மருந்துகளை உற்பத்தி செய்து, சுய சார்பு பாரதத்தை உருவாக்கி வெற்றி கண்ட சரித்திரம். இந்த மூன்றாம் கட்டம் நம்முடைய நம்பிக்கை, நம்பகத்தன்மை, உறுதியான செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்த காலம்.

முழு மெஜாரிட்டி பெறாமல் மைனாரிட்டி அரசாக இருந்த போதும், கூட்டணி கட்சிகள் கடந்த கால வரலாற்றில் நாம் நம்பிக்கையாக நடந்து கொண்டதால், இப்போது ஆட்சி நமக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது.

11 ஆண்டு காலங்கள் வெளியே வராமல் பதுங்கி இருந்த தேசவிரோதிகள் வெளியே வந்து, அமைதியை சீர்குலைக்க பாதுகாப்புக்கு சவால் விட, காஷ்மீரில் இரண்டு தாக்குதலும் டெல்லியில் ஒரு தாக்குதலும் நடத்தி மாபெரும் பாடங்கள் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 4,114 சட்டமன்ற உறுப்பினர்களில், 1,654 சட்டமன்ற உறுப்பினர்கள் அதாவது 40 சதவீதம், பா.ஜ.க. பெற்றிருக்கிறது. பாராளுமன்ற மேல்சபையில், 96 உறுப்பினர்களும், மக்களவையில் 240
எம்.பி.க்களும் பாஜக பெற்றிருக்கிறது.

அமைப்பு ரீதியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கீழே உள்ள கிளையில் இருந்து மண்டல், மாவட்டம், மாநிலம், அகில பாரத அளவில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து தலைவராக இருக்க முடியாது. குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் போல தொடர்ந்து ஒரே நபர் பலமுறை தலைவராக முடியாது.

அமைப்பு ரீதியாக அமைப்புச் செயலாளர் என்பவர் இயக்கத்தை வழி நடத்துவார், அரசியல் ரீதியாக தலைவர் வழி நடத்துவார். குறைந்தபட்சம் ஒரு பருவம், அவர் இடைவெளி கொடுக்க வேண்டி இருக்கும்.

வருங்காலத்தில் பாரத நாடு, சுயசார்போடு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வலிமை பெற்ற நாடாக மாறும் என்னும் நம்பிக்கையோடு நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

பாஜகவின் சரித்திரம், ஒரு தியாக சரித்திரம் மட்டுமல்ல, புராணங்களிலும், இதிகாசங்களிலும், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்று சொன்னவை வெறும் போதனைகள் அல்ல, அவை உண்மையின் யதார்த்தம், இப்போது உண்மையில் நிதர்சனமாக மாறியது. தர்மத்தின் சரித்திரமே பா.ஜ.க.வின் சரித்திரம்.

கட்டுரையாளர்: எஸ்.ஆர். சேகர், 

மாநில பொருளாளர்,
பாரதிய ஜனதா கட்சி