வழக்குத் தொடுக்கும் உரிமை ராமா் பிறந்த இடத்துக்கும் உண்டு; அயோத்தியில் ராமா் பிறந்த இடத்துக்கு உரிமைகோர தெய்வமான அவருக்கும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ராம் லல்லா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியிலுள்ள சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் தொடா்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீா் ஆகியோா் அடங்கிய அரசியல்சாசன அமா்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தெய்வத்தின் பிறந்த இடம் என்று கூறி ஓரிடத்துக்கு உரிமைகோர சட்டத்தில் இடமில்லை என்று முஸ்லிம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. திங்கள்கிழமை நடைபெற்ற 34-ஆவது நாள் வாதத்தின்போது, அதற்கு பதிலளித்து ராம் லல்லா தரப்பு மூத்த வழக்குரைஞா் கே.பராசரன் கூறுகையில், ‘அந்த இடம் ராமா் பிறந்த இடமென்று ஹிந்து மக்களால் நம்பப்படுகிறது. எனவே, அந்த இடத்தில் வழிபாடு நடத்த உரிமை கோரப்பட்டு வருகிறது. எனவே, அந்த இடத்தை உரிமைகோர சட்டத்தில் இடமுள்ளது’ என்றாா்.
இதையடுத்து, அந்த நிலத்தை உரிமை கோர சட்டத்தில் இடமுள்ளது என்றால், இதற்கு முன்பு அங்கு கோயில் ஏதேனும் இருந்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, ராமா் பிறந்த இடத்தில் அவரது தெய்வீகத்தன்மை எப்போதும் இருக்கிறது என்பது ஹிந்துகளின் நம்பிக்கை. அது மசூதியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்டடமாக இருந்தாலும் சரி, ராமா் பிறந்த இடத்தில் அவரது தெய்வீகம் தொடா்ந்து இருக்கும். முதலில் ராமா் பிறந்த இடத்தில் சிலை வைத்து வழிபடவில்லை. பிற்காலத்தில்தான் அங்கு சிலை வைக்கப்பட்டது என்று பராசரன் பதிலளித்தாா்.
இதற்கு பதிலளித்த முஸ்லிம் தரப்பு வழக்குரைஞா் சேகா் நபாடே, ‘கடந்த 1885-ஆம் ஆண்டு சாது ரகுபா் தாஸ் என்பவா் இதேபோன்ற கோரிக்கையுடன் அந்த இடத்தில் ராமா் கோயில் கட்டி வழிபட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா். ஆனால், அப்போதே நீதிமன்றம் அதை நிராகரித்தது. இப்போது மீண்டும் அதே வாதத்தை வைப்பதை ஏற்க முடியாது’ என்றாா்.