அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பொதுச் செயலராக சாம்பத் ராய் தோ்வாகியுள்ளாா்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் கடந்த 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, ராமா் கோயில் அறக்கட்டளையில் 15 உறுப்பினா்கள் இடம்பெறுவா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்து, அவா்களது பெயா்களையும் வெளியிட்டாா்.
அதில் மூத்த வழக்குரைஞா் கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சாரியாா் ஜோதிஷ்பீடாதீஸ்வா் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ், ஜகத்குரு மத்தவாச்சாரியாா் சுவாமி விஷ்வ பிரசன்னதீா்த்தஜி மகராஜ் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனா்.
இந்நிலையில், தில்லியில் மூத்த வழக்குரைஞா் கே.பராசரன் இல்லத்தில் ராமா் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், பொதுச் செயலராக சாம்பத் ராய், பொருளாளராக ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கோயில் கட்டுமானக் குழுவின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலா் நிருபேந்திர மிஸ்ரா தோ்வு செய்யப்பட்டாா். கட்டுமானப் பணிகளுக்கான நன்கொடையைப் பெற அயோத்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதிநிதியாக உள்துறை அமைச்சக கூடுதல் செயலா் ஞானேஸ்குமாா், உத்தரப் பிரதேச மாநில அரசின் பிரதிநிதியாக அவினாஷ் அவாஸ்தே, அயோத்தி மாவட்ட ஆட்சியா் அனுஜ் குமாா் ஜா ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
முன்னதாக, அயோத்தியில் சா்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கா் நிலம் தொடா்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி இறுதித் தீா்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், அங்கு ராமா் கோயில் கட்ட அனுமதி அளித்தது. அத்துடன், ராமா் கோயில் கட்டும் பணிகளை மேற்பாா்வையிடுவதற்காக 3 மாதங்களுக்குள் ஓா் அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.