உத்திரப்பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் உமேஷ் சந்திர பாண்டே. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்தது. இருதரப்பு விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் அமர்வு முன் உமேஷ் சந்திர பாண்டே என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி. சேகர் ஆஜராகி அயோத்தி தொடர்பான வழக்கை 1961 ல் சன்னி வக்பு வாரியம் தொடர்ந்த போதே பதில் மனு தாக்கல் செய்தவர் பாண்டே. அயோத்தி நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிக்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்ய விரும்புகிறார் என நீதிபதிகளிடம் சேகர் கூறினார். இதை ஏற்ற நீதிபதிகள் எழுத்துபூர்வமாக மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்கள்.
இதையடுத்து பாண்டே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் டல்ஹவுசி தலைமையில் இருந்த ஆங்கிலேயர் ஆட்சி கைப்பற்றியது. பின் கானிங் தலைமையில் ஆட்சி நடந்தபோது அந்த நிலத்தின் உரிமை ஆங்கிலேய அரசுக்கு அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அதனால் அயோத்தி நிலம் அரசுக்கு சொந்தமான நிலம். இதை முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அயோத்தி நிலம் அரசுக்கு தான் சொந்தம் என அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தை என்ன செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்யட்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது