கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு அறநிலையத் துறை அனுமதி மறுத்ததால் சர்ச்சை கிளம்பியது. பின்னர், பக்தர்களின் போராட்ட அறிவிப்பால் வரும் 14-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்னூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் கோயில், 400 ஆண்டுகள் பழமையானது. அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் செயல்பட்டு வரும் நிர்வாகக் கமிட்டியில் 20-க்கும் மேற்பட்டோர் பிரதிநிதிகளாக உள்ளனர்.
இந்தக் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயில் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறைஅதிகாரிகள், டிச. 1-ல் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தனர்.இதனால் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையறிந்த பாஜகவினர், கடந்த 30-ம் தேதி கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் கோயிலில் திரண்டனர். கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்த அறநிலையத் துறையினரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு தேதி அறிவித்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து கோயில் கமிட்டி உறுப்பினர்கள் கூறும்போது, “கும்பாபிஷேக தேதியை அறநிலையத் துறையினரிடம் தெரிவித்துவிட்டு, ஏற்பாடுகளைத் தொடங்கினோம். சில பணிகள் முற்றுப்பெறாமல் இருந்ததைக் காரணம் காட்டி, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர்,அறநிலையத் துறை இணை ஆணையரிடம் பேசி, கும்பாபிஷேகத்துக்கு அனுமதி பெற்றோம். பாஜகவினரும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில், வரும் 14-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது” என்றனர்.
பாஜக மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறும்போது, ‘‘நிர்ணயிக்கப்பட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடத்தஅனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. கும்பாபிஷேகத்துக்காக திருப்பதியில் இருந்து 40வேதியர்கள் வந்திருந்த நிலையில்,அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டனர். யாகசாலை அமைத்தல், பூஜைபொருட்கள் கொள்முதல் என பலலட்சம் செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது. எங்கள் போராட்ட அறிவிப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதால் கோயில் நிர்வாகத்துக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அறநிலையத் துறை ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும்’’ என்றார்.
அறநிலையத் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோயிலில் சீரமைப்புப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மண்டபத்தில் தரைத்தளம் அமைத்தல், வயரிங் உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. நிலுவைப் பணிகளை முடித்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத் துறை அறிவுறுத்தியது.
இதில் வேறு உள்நோக்கம் இல்லை. இது தொடர்பாக தவறான கருத்துகளை சிலர் பரப்புகின்றனர். அனைத்து திருப்பணிகளை முடித்து, வரும் 14-ம் தேதிகும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது’’ என்றார்.