அந்நிய நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்க்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மாவோயிஸ்டுகள்

அந்நிய நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவது அடிப்படை உரிமை அல்ல என்பது அரசியல் சாசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதையோ அல்லது அந்த நிதி எப்படி செலவிடப்படுகிறது என்பதையோ காட்டத் தயங்க வேண்டியதில்லை. ஒரு காரணத்தைக் கூறி நிதியைப் பெற்றுக் கொண்டு, அதை மடை மாற்றம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதால்தான் அந்நிய நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதை நிகழாண்டு, திருத்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. மார்ச் மாதம் 25ம் தேதி மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதற்கு பொருள் இந்த மசோதா வாபஸ் பெறப்பட்டுவிட்டது என எடுத்துக் கொள்ளக்கூடாது. மசோதா நிச்சயமாக நிறைவேறும். மசோதா, சூழ்நிலைக்கேற்ப தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விசுவ ஹிந்து பரிஷத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், “அந்நிய நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக என் மனதில் அடிப்படை கேள்வி ஒன்று எழுகிறது. இந்த நாட்டில் ஹிந்துக்கள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள் பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார்கள். ஹிந்து அமைப்புகள் எதுவும் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. இதைப்போல, புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள், சமண மதத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரும் மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.
கிறிஸ்தவ பாதிரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைப்போல, இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் மசோதாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்கெல்லாம் என்ன காரணம்? கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் வெளிநாடுகளிடம் பெருந்தொகையை நன்கொடையாக பெற்றுக் கொண்டு, அதை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்’’ என்று கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
எம்.பி. முகமது பஷீர் இந்த மசோதாவை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார். நீங்கள் சட்டவிரோதமாக இயங்காவிட்டால் திருத்த மசோதாவைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமே கிடையாது. குற்றமுள்ள நெஞ்சம்தான் குறுகுறுக்கும் என்பதற்கிணங்க, தவறு செய்து வருவதால்தான், வேண்டும் என்றே பிரச்சினையை திசை திருப்பி ஆதாயம் அடைய துடிக்கிறீர்கள் என்ற விமர்சனத்தை புறம் தள்ளிவிட முடியாது. சில தொண்டு நிறுவனங்கள் `வளர்ச்சி’ என்ற பெயரில், நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு, அதை நக்சல்கள் ஆயுதம் வாங்க பயன்படுத்துவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த `டிமோதி இனிசியேட்டிவ்’ என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சத்தீஸ்கரில் உள்ள பஸ்தரிலும், தம்தரியிலும் நக்சல்களுக்காக நிதி மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல 2024ல் ஒடிசாவில் `தி என்விரானிக்ஸ்’ அறக்கட்டளையில் சோதனை நடத்தப்பட்டது. புயல் நிவாரணம் என்ற பெயரில், வெளிநாட்டில் நிதி வாங்கி அதை `ஜே.எஸ்.டபுள்யு’ உருக்காலைக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர் என்பதும் ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி `டயோசிசன் அசோசியேசனும்’ வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் பிரியங்க் கானுங்கோ, “நம் நாட்டின் மத ரீதியான மக்கள் தொகை விகிதாச்சாரத்தை மாற்ற சில விரும்பத்தகாத சக்திகள் வேலை செய்து வருகின்றன. இந்த விஷமத்தனமான சக்திகள் வெளிநாட்டு நிதியை மதமாற்றம் செய்வதற்காக பயன்படுத்துகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளையோடு சோனியாவும், ராகுலும் நெருக்கமான தொடர்புடையவர்கள். இந்த நிறுவனம் சீனாவிலிருந்து கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு, பிரிவினைவாத சக்திகளை நம் நாட்டில் ஊக்குவிக்கிறது. வெளிநாட்டு நிதி வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில், எங்கிருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது, அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்ற கணக்கை காட்டுமாறுதான் அரசு கேட்கிறது. இதில் தவறு எதுவும் இல்லை.
கட்டுரையாளர் : ஆய்வாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி