அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் 1993 முதல் ஹிப்னாடிசம், யோகா மற்றும் தியானத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்குள்ள பள்ளிகள் விரும்பினால் யோகா கற்பிக்கலாம் என்ற மசோதாவுக்கு அலபாமா பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், கோஷமிடுதல், மந்திரங்கள், நமஸ்தே போன்றவை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தாக்கல் செய்த, ஒபெலிகாவின் ஜனநாயக கட்சிப் பிரதிநிதி ஜெரமி கிரே, “நான் கடந்த ஏழு ஆண்டுகளாக யோகா செய்கிறேன். யோகாவின் நன்மைகளை நான் அறிவேன், அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது அலபாமாவிற்கும் சிறந்ததாக இருக்கும்” என்று அவர் கூறினார். அலபாமாவில், யோகா தடை செய்யப்பட்டிருந்தும் பல ஜிம்களில் அது தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. மக்களும் விரும்பி கற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.