தவறான முன்னுதாரணம்

நுபுர் சர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேவையற்ற சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர்களது கருத்துகளை திரும்பப்பெற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நுபுர் சர்மா குறித்த நீதிபதிகளின் கருத்தை முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என். திங்ரா கடுமையாக சாடியுள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நீதிபதிகள் தங்களுடையஎழுத்து பூர்வ உத்தரவில் இந்த வாய்மொழி கருத்துகளை சேர்க்கவில்லை. நீதிமன்றங்கள் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் யாரையும் குற்றவாளியாக்க முடியாது. வழக்குகளை மாற்றுவதற்காக மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.நீதிபதிகள் தாங்கள் சொந்த கருத்தினை வலியுறுத்தி பேச விரும்பினால் அரசியல்வாதியாக போகலாம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் உச்ச நீதிமன்றம் இது போன்ற வாய்மொழி கருத்துக்களை ஏன் வெளியிடுகிறது என்று தெரியவில்லை. நீதிபதிகள் இவ்வாறு பேசுவது, நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்கே அதிக அதிகாரம் உள்ளது, அதனால் நீதிபதிகள் தங்கள் விருப்பப்படி எதையும் கூறலாம், அதை யாராலும் தடுக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துகிறது. நுபுர் சர்மா ஆட்சேபனைக்குரிய கருத்து எதையும் கூறியிருந்தால், அவரது கருத்துக்களில் அடிப்படை ஆதாரம் உள்ளதா, வேறுவிதமாக தூண்டப்பட்டதா என்பதைச் சரிபார்ப்பது கீழமை நீதிமன்றங்களின் வேலை. அவரது கருத்து தவறானது என நிரூபிக்கப்பட்டால், அந்த நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும். ஆனால் இந்த வழக்கில், உச்சநீதிமன்றம், தனது கருத்துக்களுடன், விசாரணை நீதிமன்றத்திற்கு ஒரு தவறான வழிகாட்டியாகவும் நாட்டிற்கே தவறான முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது” என சாடினார்.