உலகம் முழுவதும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை, உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1998 முதல் ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு நம்மில் பலர் ஆஸ்துமா என்கிற நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவருக்கு தொடர்ந்து சளிப் பிடித்தால் அவர்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம்வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி, இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் பாதிப்பு அடைகிறது. மூச்சுக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. இதனால் சுத்தமான காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியை வரவும் முடியாமல் தடங்கல் உண்டாகிறது.
காற்று, மூச்சு குழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான் ‘வீசிங்’ என்கிற மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆஸ்துமாவிலிருந்து தப்பலாம். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் ஆஸ்துமா தொந்தரவைத் தவிர்க்கலாம்.
உதாரணமாக குளிர்ச்சி அளிக்கும் பழங்கள், தயிர் போன்ற உணவு பொருட்களையும், செல்லப் பிராணிகளை கொஞ்வதை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும். தூசு பறக்கும் இடங்களில் மூக்கை மூடாமல் உள்ளவர்களுக்கு ஆஸ்துமா தாக்கும் அபாயம் உள்ளது.
ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது நல்லது. இதனால் ஆபத்தான பின் விளைவுகளை தடுக்கலாம். புகைப் பிடிப்பதால் ஆஸ்துமா வர அதிக வாய்ப்புள்ளது. உலகத்தில் 23 கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சிறுவர்களிடம்கூட தற்போது அதிகம் காணப்படுகிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கலாம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்த தற்போது பல வசதிகள் உள்ளன. ஆஸ்துமாவை தியானம், மூச்சுப் பயிற்சி மூலம் சுலபமாக விரட்டி விடலாம். பதற்றம் இல்லா எளிய வாழ்வுமுறை, சுகாதார வாழ்க்கை முறை மூலம் ஆஸ்துமா பாதிப்பை குறைக்கலாம்.
ஜெ. எஸ். சரவணகுமார்