வீட்டில் இருந்தே வேலை

கொரோனாவுக்கு பிறகு உலகில் மாறிவிட்ட பல விஷயங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் ‘ஒர்க் பிரம் ஹோம்’ முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா முடிந்தாலும் இனி இது நிறுவனங்களாலும் உழியர்களாலும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களின் நன்மைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகளவிலான பொறுப்புகளை ஏற்கும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்கவும், அரசு விதிமுறைகளை மாற்றி அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு நிலையான வேலை நேர நிர்ணயம், ஒழுங்குமுறை, பாதுகாப்பு, மின்சாரம், இணைய பயன்பாட்டுக்கான கட்டணத்தை நிறுவனம் ஏற்பது போன்றவை இதில் இடம்பெறும். மத்திய அரசு, 2021 ஜனவரி மாதம் சேவைத்துறையை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை முறைப்படுத்த அரசாணை வெளியிட்டது. இதனால் இத்துறை ஊழியர்கள் பெருமளவில் வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். கொரோனா தொற்று குறைந்தும் பல ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.