வணக்கம்

ஸ்டாலினின் அறிவிப்பும் கள எதார்த்தமும்:

தி.மு.க என்றுமே சொன்னதை செய்ததில்லை என்பதற்கு, ரூபாய்க்கு மூன்று படி அரிசி திட்டம் தொடங்கி, வீராணம், கூவம், ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என நிறைவேற்றப்படாத வெற்று அறிவிப்பு திட்டங்களே சாட்சி. மக்களின் ஆசையை தூண்டிவிட்டு, அதை ஓட்டுகளாக மாற்றி எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்பதற்காக இவர்கள் பொய் வாக்குறுதிகளை கூறுவது இயல்பே என்பதற்கு கடந்த கால வரலாறே உதாரணம். ஸ்டாலின் அறிவித்துள்ள எந்த திட்டத்திற்கும் அவர் அதற்கான வருமானம் எப்படி வரும், அதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எவை என கடைசிவரை கூறவேயில்லை. எனவே ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் என்பதையே கள எதார்த்தங்கள் நிரூபிக்கின்றன.

தி.மு.கவால் கல்வித்துறை வளருமா?

புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு என்று மாணவர்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து நல்ல விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின், ‘கற்றல் அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் இடம் பெறச் செய்யப்படும்’ என கூறியுள்ளது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

தொழில் முன்னேற்றம் சாத்தியமாகுமா?

‘தமிழகத்தில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும்’ என கூறிய ஸ்டாலின், எட்டு வழி சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, ராணுவ தளவாட தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு, காற்றாலை எதிர்ப்பு என தமிழக தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கோட்டை போடுவதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். இப்படி இருந்தால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமாகும், வேலை வாய்ப்புகள் பெருகுமா, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை மீட்பது எப்படி, தனி நபர் வருமானம் எப்படி பெருகும் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?

தி.மு.க’வால் விவசாயம் வளருமா:

தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என ஈடுபடும் பெரும்பாலான அரசியல்வாதிகள், மணல் மாபியாக்கள் தி.மு.க விஸ்வாசிகள். மேலும், விவசாயிகளை முன்னேற்றும் புதிய விவசாய சட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதே தி.மு.க கூட்டணிதான் என்பது கள எதார்த்தம். நிலைமை இப்படி இருக்கும்போது, தமிழகத்தில் பயிரிடும் பரப்பு 75 சதவீதமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் இரு போக சாகுபடி 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும், தனி நபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் அளவு அதிகரிக்கப்படும் என ஸ்டாலின் கூறுவதும் நம்பும்படியாகவா இருக்கிறது?

தற்போது உள்ள தமிழக அரசின் நிதி நிலைமையில் இதனை எல்லாம் செயல்படுத்த முடியாது என்பதே நிதி மேலாண்மை நிபுணர்களின் கருத்து. ஏழு துறைகள் சீரமைப்பு என கூறியுள்ளார் ஸ்டாலின். ஆனால், அத்துறைகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதே அவரின் தி.மு.கதான் என்பதுதான் உண்மை. எனவே எப்படியாவது தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும், இல்லை என்றால் கட்சி காணாமல் போகும். தானோ தன் மகனோ இனி என்றென்றும் முதலமைச்சர் ஆகமுடியாது என்ற எண்ணத்தில் ஸ்டாலின் அள்ளிவிட்ட வெற்று அறிவிப்புகளாகவே இந்த தேர்தல் அறிக்கை உள்ளது.

  • மதிமுகன்