தொட்டிலில் குழந்தை தூங்க வேண்டும். அதற்காக அம்மாக்காரி தொட்டிலை ஆட்டியபடியே தாலாட்டு பாடுவாள். பாடலில் வரும் வரிகளில் பூக்களின் பெயர்கள் இருக்கும். உறவுகளின் பெயர்கள் இருக்கும். அத்தை அடித்தாரோ அல்லிப்பூ செண்டாலே, சித்தி அடித்தாரோ செண்பகப் பூ செண்டாலே! என்பது போல. டியூஷன் டீச்சர் இல்லாமல் பிள்ளையின் பொது அறிவு வளர்ந்து கொண்டே போகும்.
வறட்டுத்தனமாக பொது அறிவு மட்டுமல்லாமல் வாழையடி வாழையாக குடும்பங்களில் தவமிருந்து குழந்தை பாக்கியம் பெறுவது என்ற மரபை சொல்லிக்காட்டி மனதில் பதிய வைக்கிறார் தாலாட்டு பாடும் தாய். ஊருக்கு நல்லது செய்வது தவம் என்ற கருத்தையும் தாலாட்டு வாயிலாகவே ஊட்டுகிறாள் ஹிந்துத் தாய். அரசமரம் நட்டுச் சாலைகள் வைத்துச் சத்திரங் கட்டித் தவம் செய்தாள் ஒரு மாது. “விளக்கிலிட்ட வெண்ணெயைப்போல்” அவள் உருகி நிற்கையில், “கலத்தில் இட்ட சோற்றைப் போல” அவள் குழந்தைப் பசி போக்க அவன் பிறந்தானாம். இந்தத் தாலாட்டை பாருங்கள்
அரசைப் பதிப்போமோ அதிகதவம் செய்வோமோ
சாலைகளை வைப்போமோ சத்திரங்கள் கட்டுவமோ
கொழுந்தைப் பதிப்போமோ கோடிதவம் செய்வோமோ!
விளக்கிலிட்ட வெண்ணெயைப்போல் வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல் கண்கலக்கந் தீர்த்தாயோ !
ஒருத்தி பிள்ளை வரம் வேண்டி தான் செய்த வேறு தவ விரதங்களைச் சொல்கிறாள்.
சரியாய்த் தவந்தானம் தருமங்கள் செய்த எங்கள் கலிதீர்க்க வந்துதித்த காதலனே கண்வளராய்!
சாமிரெண்டு கையாலே தந்தஎன்றன் திரவியமோ!
கங்கைபுனை ஸ்ரீநாதன் கருணையினால் என்வயிற்றில் மங்களமாய் வந்துதித்த மணியேநீ கண்வளராய்!
ஹிந்து அம்மா தன் பிள்ளையை நல்ல ஹிந்துவாக வளர்க்க தாலாட்டிலேயே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று முறையாக தரிசனம் செய்து வைக்கிறாள். புண்ணிய நதிகளில் நீராடுவது ஹிந்துக்களின் சமய மரபு என்பதை எவ்வளவு அழகாக இந்தத் தாலாட்டில் பட்டியலிடுகிறாள் பாருங்கள். அயோத்திக்கார அம்மவின் பெயர் சொல்லி, அர்ஜுனரை அழைத்துக் காட்டி … அடடா!
ஆறிரண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற்கடல் ஆடி மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
ஸ்ரீரங்க ராயரோடு சீர்பாதம் பெற்றவனோ மாமாங்க ராயரோடு சரிகை பதம் பெற்றவனோ சங்குமுகம் ஆடி தவ மாடி வந்தவனோ
முத்துலகம் ஆடி முத்தி பெற்று வந்தவனோ தைப்பூசம் பார்க்க என்று தவம் பெற்று வந்தவனோ
கோதை மகனோ கோசலையாள் தந்தவனோ சீதை மகனோ ஸ்ரீராமர் தந்த கண்ணோ அல்லி மகளோ அர்ஜுனனார் தந்த கண்ணோ
பாலூறும் பிள்ளையடி பழம் சொரியும் குற்றாலம் சீர் பொலியும் காஞ்சிபுரம், திருப்பதியில் உள்ளவனோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிரோ
இந்த “ஆறிரண்டும் காவேரி” தாலாட்டை நாட்டுக்கோட்டை வட்டார அம்மாக்கள் சிறப்பாகப் பாடுவார்கள். நாஞ்சில், கொங்கு, தஞ்சை, காஞ்சி வட்டார அம்மாக்கள் பெருமை பொங்க பாடும் தாலாட்டுக்கள் என்னென்ன என்று பார்த்தால் தமிழகத்தின் எந்த ஊரானாலும் பிள்ளையை நல்ல ஹிந்துவாக வளர்க்க என்னென்ன பண்புகளை தாலாட்டில் பொதிந்து தருகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். யாராவது சில ஹிந்து அம்மாக்கள் / பாட்டியார்கள் அதற்காக முனைய வேண்டும்.
பிள்ளை வளர்ப்பில் அழுத்தமான ஹிந்துத்துவ முத்திரை பதிக்காமல் விட்டுவிட்டால் பிறகு “சண்டே கிளாஸ்” போகும் மகன் / மகள் மூளைச்சலவை ஆவதைத் தடுப்பது சிரமம். எனவே ஹிந்து அம்மாக்களே! தாலாட்டுப் பாடலை நாடுங்கள் – பிள்ளை தூங்குவதற்காக மட்டுமல்ல. வீடே விழித்துக் கொள்வதற்காக!!
-அறம் வளர்த்தநாயகி பெரியசாமி