ஹிந்து கோயில்களில் ஸ்தல விருட்சம் என ஒரு மரம் இருக்கும். இது கோயிலுக்கு கோயில் வேறுபடும். இது அக்கோயிலுடன் சம்பந்தப்பட்ட புராண கால வரலாறு, மருத்துவ குணம் என பல்வேறு ஆன்மிக விஷயங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்தல விருட்சங்கள் இருக்கும். மூலவர் அளவிற்கு சக்தி மிக்கவை இந்த மரங்கள். கோயிலில் திருப்பணிகள் நடக்கையில் அந்த கோயிலின் தெய்வம் கும்பாபிஷேகம் நடக்கும்வரை இந்த ஸ்தல விருட்சத்தில் வாசம் செய்யும் என்பதும் ஐதீகம். ஹிந்து கோயில்களில் உள்ள இவ்வளவு புனிதமான மரத்திலும் தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திராவிட அரசியலை புகுத்தி வருகிறது தி.மு.க.
சமீபத்தில், ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், கோயில்களுக்கான ஸ்தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அதற்காக, நாகலிங்க மரக்கன்று ஒன்றை நட்டு தொடங்கி வைத்தார். இத்திட்டப்படி, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மூன்று மாதத்துக்குள் இத்திட்டம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு இவர்கள் வைத்த பெயர் ‘கலைஞர் தல மரக்கன்று நடும் பணி’ என்பது. நாத்திகராக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட கருணாநிதிக்கும் ஹிந்து சம்பிரதாயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஹிந்து என்றால் திருடன், நெற்றியில் என்ன ரத்தமா, ஸ்ரீரங்க நாதரையும் தில்லை நடராஜரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? ராமர் என்ன இஞ்சினியரா என பலவாறு ஹிந்துக்கள், அவர்களது தெய்வங்கள், அவர்களது பண்பாடு, பாரம்பரியம் என அனைத்தையும் விமர்சித்த கருணாநிதியின் பெயரில்தான் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கியுள்ளார். அதுவும் காலில் ‘ஷூ’ போட்டுக்கொண்டே எவ்வித பக்தி சிரத்தையும் இன்றி ஸ்தல விருட்சத்தை நட்டுள்ளார் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலினும் தன் தந்தையை போலவே ஹிந்து என்றாலே எரிகிறது, சமஸ்கிருத மந்திரங்களில் உடல் நடுங்கும் பொருள்கள் உள்ளன என கூறியவர். அதேபோல, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என இவரது குடும்பத்தினரும் தி.மு.கவினரும் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து ஹிந்துக்களை அவமதிப்பவர்கள். அப்படி இருக்கையில் ஹிந்துக்களின் ஆன்மிக நிகழ்வில் ஆட்சி அதிகாரம் உள்ளது என்ற ஆணவத்தில் அவர்கள் தொடர்ந்து நிகழ்த்தும் இதுபோன்ற செயல்பாடுகள் ‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ எனும் பழமொழியையே நினைவூட்டுகிறது.