ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சி செய்த கட்சிகளே மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளன. தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் தேர்தலுக்கு முன்னும், முடிவுகள் வெளியான பிறகும் வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் துவங்குவதற்கு முன்பே கொலைவெறி அரசியல் அரங்கேறத் துவங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கி, மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றிபெற்று அதிகாரத்தைக் கைப்
பற்ற உள்ளார் என்ற செய்திகள் வரத் துவங்கிய உடனேயே, கொலைவெறித் தாக்குதல்களும் துவங்கிவிட்டன.
சாதாரண மக்கள் சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்து வருவதால் நாட்டின் எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் மிகக்குறைந்த நேரத்தில் நாடெங்கிலும் காட்டுத்தீ போல பரவிவிடுகிறது. மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அம்மாநிலத்தில் நடந்த கொலைவெறித் தாக்குதல்கள் சமூக ஊடகங்களின் வாயிலாகவே நாடெங்கிலும் பரவியது. தேசிய அளவில் செய்திகளை வழங்கிவரும் தொலைக்காட்சிகளோ, நாளிதழ்களோ வன்முறை செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டு மமதாவின் வெற்றியை வானளாவப் புகழ்ந்துகொண்டிருந்தன. 3 இடங்களில் இருந்து 77 இடங்களில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை படுதோல்வி என்று வர்ணித்து சுய இன்பம் அடைந்தனர்.
அம்மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும், 34 ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்த சுவடுகூட தெரியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதைப் பற்றி எவரும் விமர்சனம் செய்யவில்லை. காங்கிரஸ் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் ஒரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் அந்தக் கூட்டணிகளுக்கு பல தொகுதிகளில் டெபாசிட் பறிபோய்விட்டது. மேற்கு வங்க வன்முறை வெறியாட்டத்தைப் பார்த்த பலரும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். பா.ஜ.க தலைமை தொண்டர்களைக் அம்போவென வீதியில் விட்டுவிட்டது என்றும், பிரதமர் நரேந்திர மோடி ஒரு காந்தியவாதியாக மாறிவிட்டார் என்றும், நோபல் பரிசை எதிர்பார்த்து இருப்பதால் நடக்கும் வன்முறை கொலைவெறியாட்டத்தைக் கண்டிக்காமல் அமைதி காத்து வருகிறார் என்றும், அரசியல் சாணக்கியர் என போற்றப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கு என்று ஒளிந்துகொண்டுள்ளார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் சாதாரண ஹிந்துக்கள் தங்கள் ஆதங்கத்தை கடும் வார்த்தைகளால் பா.ஜ.க.வையும், மத்திய அரசையும் வறுத்தெடுத்தனர்.
சாதாரண ஹிந்துக்களின் உள்ளக் குமுறல்களில் மேற்கு வங்கத்தில் அப்பாவி ஹிந்துக்கள் படுகொலைத் தாக்குதலுக்கு ஆளாகி பலியாவதைக் கண்டு பதறுவதைக் காண முடிந்தது. ஆனால், மேற்கு வங்க அரசியலில் வன்முறை, படுகொலைகள் ஒன்றும் புதிதல்ல. மம்தா பானர்ஜி தொடங்கியதும் அல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்பே வன்முறை அரசியல், அந்மாநிலத்தில் தொடங்கி இன்றுவரை அரசியல் படுகொலைகளும் வன்முறைகளும் முற்றுபெறாத ஒரு தொடர்கதையாகிவிட்டது. இத்தடவை திருணமூல் காங்கிரஸ் கட்சியும், மமதா பானர்ஜியும் அதை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இதில் பா.ஜ.க தொண்டர்கள், ஆதரவாளர்கள், தேர்தலில் அக்கட்சிக்காக பணியாற்றிய கட்சி சாராத வாக்காளர்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள் என ஏராளமானோர் திருணமூல் காங்கிரஸ் கட்சி குண்டர்களின் வன்செயல்களுக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சரியான விவரங்கள் முழுமையாக வெளிவரவில்லை. உண்மையான கள நிலவரத்தை வெளியிட முக்கிய ஊடகங்கள் தயங்குகின்றன. உண்மைத் தகவல்
களை வெளியிட்டால் அந்த நிறுவனமும், செய்தி சேகரிப்பவரும் மிரட்டப்படுகின்றனர். அதனால் அவர்களும் அடக்கி வாசிகின்றனர். இந்தக் கருத்துரிமை, பேச்சு சுதந்திரம் போன்றவையெல்லாம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் பேசமுடியும். மற்றவர்களிடம் பேசினால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அதனால் வழக்கம் போல் பழியை பா.ஜ.க.வினர் சுமக்கின்றனர்.
மேற்கு வங்க வன்முறைகள் மற்ற மாநில வன்முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது நிலவிய கல்கத்தா பெரும் பஞ்சம், இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட துயரங்கள், தேசப் பிரிவினையால் விளைந்த படுகொலைகள் இடம்பெயர்வு, 1970களில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம், நக்சலைட் இயக்கத்தின் தோற்றம் அதன் தாக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடத்திய கொடுமைகள் இப்படி எண்ணற்ற பின்புலங்கள் அந்த மாநிலத்தில் வன்முறைகள் தொடர்வதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
1997 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் 27,408 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. 34 ஆண்டு மார்க்சிஸ்ட்டுகளின் ஆட்சியில் மொத்தம் 55,408 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை குற்றவாளிகள் அரசியலில் எம்.எல்.ஏ.களாகவும், எம்.பி.களாகவும் உயர்ந்து சுதந்திரமாக வலம் வந்துள்ளனர். தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. 1971ல் அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் ஹேமந்தா பாசு, கல்கத்தா நகரில் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது மார்க்சிஸ்ட் கட்சியினர் என்று பார்வார்ட் பிளாக் கட்சி கட்சி குற்றம் சுமத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி மீது பழியைப் போட்டனர் மார்க்சிஸ்டுகள். இன்று வரை உண்மை வெளிவரவில்லை.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி எனும் ஒரு சின்னஞ்சிறு குக்கிராமத்தில் முளைத்த நக்சல்பாரி என்று அழைக்கப்படும் கம்யூனிஸ்ட்டு பார்ட்டி ஆப் இந்தியா (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சியின் ஆயுதம் தாங்கி புரட்சி செய்வோம் என்ற முழக்கமும், துப்பாக்கிமுனையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தொழிலாளர்களின் அரசை நிறுவிடுவோம் என்ற கோட்பாடும் அங்கு படுகொலைகளை அரங்கேற்றியன. நிலயுடமையாளர்கள் வன்செயல்களுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டனர். 1972 முதல் 1977 வரை காங்கிரஸ் கட்சியின் சித்தார்த்த சங்கர்ரே முதல்வராக இருந்த காலத்தில் தீவிர இடதுசாரிகளான நக்சல்பாரிகளை வேட்டையாடி அவர்களை முற்றிலுமாக அழித்தொழித்தார். இதுதவிர, எதிர்க்கட்சியினர் மீது இவரது ஆட்சியில் நடந்த பெரும் வன்முறை தாக்குதல்களும் படுகொலைகளும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இடையே இருந்த வந்த ஆதரவைக் குறைத்து மார்க்சிஸ்ட்டுகள் வசம் ஆட்சி அதிகாரம் மாறிட வழிவகுத்தன.
1967ல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து, அதிகாரத்தில் பங்கேற்ற காலத்திலிருந்தே அரசியல் வன்முறைகள் துவங்கிவிட்டன. கிராமப் புறங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து மார்க்சிஸ்ட்டுகளின் கை ஓங்கத் துவங்கிய காலத்தில் இருந்து இந்த வன்முறை படுகொலைகள் பரவத் துவங்கின. கல்கத்தா போன்ற நகரங்களிலும் மார்க்சிஸ்ட் குண்டர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு பெரும் பேரணிகள் நடத்தி மக்களை அச்சுறுத்தி வந்தனர். 1970ல் பர்துவான் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய மறுத்த செயின் சகோதரர்கள் உட்பட 3 பேரை மார்க்சிஸ்டுகள் கொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட செயின் சகோதரர்களின் ரத்தத்தை சோற்றில் கலந்து அவர்களின் தாயின் வாயில் திணித்தனர். அதன்விளைவாக அந்த தாய் மனநிலை பாதிக்கப்பட்டு, நினைவு திரும்பாமல் உயிர் துறந்தார். ஜோதிபாசு அமைச்சரவையில் மந்திரியாக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா 1996ம் ஆண்டு சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் 1977 முதல் 1996 வரையில் 28,000 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 4 பேர் கொலைவெறிக்கு பலியாகியுள்ளனர். தொழிலாளிகள் பாட்டாளிகளின் ஆட்சியில் இவ்வாறுதான் அமைதி மத நல்லிணக்கம், கருத்துரிமைகள், பேச்சுரிமைகள் பாதுகாக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட்டுகளின் வன்முறை கொலைவெறித் தாக்குதலில் இருந்து திருணமூல் காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர் மமதா பானர்ஜியும் கூட தப்ப முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அகில பாரதத் தலைமை இதை கண்டுக்காமல் கைவிட்டுவிட்ட நிலையில்தான், மமதா பானர்ஜி தனிக் கட்சி துவங்கி மார்க்சிஸ்ட்டுகளின் வன்முறைகளை சந்தித்தார். தெருவில் நின்று போராடினார். ஆனால் பதவிக்கு வந்த மமதா பானர்ஜி அதே வன்முறைகளை கையில் எடுத்து மார்க்சிஸ்டுகளை அடக்கி ஒடுக்கினார். கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் கிராமப்புறங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியது. சமூக, பொருளாதார மட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் பா.ஜ.க.வில் சேர்வது அதிகரிக்கத் துவங்கியதில் இருந்து, மமதாவின் தாக்குதல்கள் அக்கட்சியினர் மீது திரும்பியன.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது மேற்குவங்கத்தில் 7 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்தன. பல அரசியல் கட்சிகளைச் சார்ந்த 1,298 பேர் மீது தாக்குதல்கள் நடைபெற்றன பொதுமக்கள் 1,354 பேர் காயமடைந்தனர். 1999 முதல் 2016 வரையிலான காலத்தில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு அரசியல் படுகொலைகள் 20 நடந்துள்ளது. தனது கட்சி ஆதரவாளர்கள் 62 பேரை கொலை செய்து விட்டதாக திருணமூல் காங்கிரஸ் கட்சி மீது மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றம் சுமத்தி பிரசுரம் ஒன்று வெளியிட்டனர்.
2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது 1,061 வன்முறை சம்பவங்களும், 2014 தேர்தலில 931 வன்முறை நிகழ்வுகளும் நடந்துள்ளன. அரசியல் காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், வன்முறையால் பாதிக்கப்பட்டும் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டும் தொழில்கள் நசிந்து வேலையின்மை அதிகரித்து வறுமையில் வாடும் ஒரு மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளது. இந்த வன்முறை அரசியலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர் :
‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியர்.