கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, மக்களால் இதுநாள் வரை கருதப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலை, மஹாராஷ்டிராவில் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி, குஜராத்தில் நவ்சாரி, ஹரியானாவின் கைத்தல் உள்ளிட்ட இடங்களும் அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளிதர ஷர்மா தலைமையில், பல்துறை வல்லுனர்கள் குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்தது. இக்குழு, நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தியது. ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரது முன்னிலையில், இந்த குழு தங்களது அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என கூறப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலிலும் இது குறித்த கல்வெட்டுகள் உள்ளன என இதற்காக சில அதாரங்களையும் 20 பக்க கையேட்டில் அக்குழு வெளியிட்டுள்ளது.