சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பா.ஜ.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ‘முஸ்லிம்களின் கடமைகளில் முக்கியமாக கருதப்படும் ரமலான் நோன்பு தற்பொழுது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வது பெரிய பாக்கியம். பா.ஜ.கவின் சித்தாந்தத்தை புரிந்து கொண்டவர்களுக்கு முஸ்லிம்களும் இக்கட்சியின் அங்கம் என்பது புரியும். பா.ஜ.கவில் உள்ள முஸ்லிம்களுக்கு தேசியமும் தெரியும் இஸ்லாமும் தெரியும், ஹிந்துத்துவாவை பற்றியும் தெரியும். இக்கட்சியில் அவர்களுக்கு இடமும் முழுமையான பங்கும் உண்டு. பாரதத்தில் எந்த காரணத்துக்காகவும் தாங்கள் வணங்கும் கடவுளை ஒருபோதும் யாரும் விட்டு கொடுத்தது கிடையாது. இதுதான் உண்மையான பாரதம். இதைதான் பா.ஜ.க விரும்புகிறது. மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. ஹிந்துகளையும் முஸ்ளிம்களையும் எதிரும் புதிருமாக வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றன. பிரதமர் மோடி அதை உடைத்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பா.ஜ.க யாருக்கும் எதிரான கட்சி கிடையாது. அப்துல் கலாமை குடியரசு தலைவராக தேர்வு செய்தது பா.ஜ.க’ இரண்டாவது முறை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தற்போதைய குடியரசுத் தலைவரை தேர்வு செய்தது. இதன்மூலம், பா.ஜ.கவின் சித்தாந்தத்தை அனைவரும் புரிந்து கொள்ளலாம்’ என கூறினார்.