காலங்கள் தோறும், நாடுகள் தோறும் அறம் மாறுமா? இல்லை மாறுவது அறமல்ல, சமூகம். துறைகள் தோறும் அறம் மாறுமா? அப்படியும் அல்ல. அறம் பொதுவானதே. அறம் முட்டிக்கொள்வதில்லை, துறைகள் முட்டிக்கொள்ளும். ஆனால் அறம் பொதுவானது. எந்தக் காலத்திலும் மாறாதது. அறத்தை நான்கு வார்த்தைகளில் நிர்ணயம் செய்துவிட்டார் வள்ளுவர். ‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’ துறைசார்ந்த அறங்கள் இந்தப் பொது அறத்திற்கு உட்பட்டவையே. இந்தக் கோணத்தில் ஊடக அறத்தைப் பார்ப்போம்.
அச்சும், காட்சியும் சேர்ந்த ஊடகத்தையே நாம் பார்த்தாக வேண்டும். ஒரே செய்தியை வெவ்வேறு பொருள் தொனிக்கும் விதமாக காட்சி ஊடகம் காட்டுகிறது. அச்சு ஊடகமும் இப்படித்தான். காட்சி ஊடகங்களில் பெரும்பாலானவற்றை அரசியல்வாதிகளோ அவர்களை சார்ந்தவர்களோ நடத்துகிறார்கள். மக்கள் மனதில் குறிப்பிட்ட எண்ணத்தை நிலைப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் தொலைக்காட்சி அமைப்புகள் முன்னதாகவே கேள்விகளை முடிவு செய்துகொண்டு அழைக்கப்பட்டவரிடமும் இப்படி பதில் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகின்றன போலும். ஆக சில தொலைக்காட்சிகளில் பேட்டிகளும் நாடகங்களே. உண்மையில்லாத இடத்தில் அறம் எங்கே இருக்கிறது?
சமீபத்திய குற்றச்சாட்டு செய்தியின் வடிவத்தில் விளம்பரங்கள் வெளியிடப் பட்டன என்பது. இது புதிதல்ல, முன்பே சில பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வலது மூலை கால் பக்கத்தில் செய்தியின் வடிவமைப்பிலேயே தலைப்பு கொடுத்து ஊர் பெயர் இட்டு தேதி போட்டு செய்தி போலவே விளம்பரம் வரும். அதன் கடைசி வரியில் பொடி எழுத்தில் எடிவிடி என்று எழுதியிருக்கும் அதாவது இது விளம்பரம் என்று. விளம்பரத்தை விளம்பரம் போல் வெளியிடாமல் செய்தி போல் அச்சு ஊடகம் வெளியிட்ட போதே ஊடக அறம் காணாமல் போய்விட்டது. அப்போது கால் பக்கம். இப்போது இரண்டு பக்கங்கள் அல்லது நான்கு பக்கங்கள். காலத்தின் வளர்ச்சி இது. காசின் வளர்ச்சியும்தான்.
ஒரு பத்திரிகையில் இந்த வகை விளம்பரம் பிரச்சனையாக்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட பங்குதாரர், உறவுக்கார பங்குதாரர்களை குறிப்பிட்டாரே ஒழிய தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் விலகிக்கொண்டார். ஒரு காலத்தில் இவர் ஊடக அறம் விருதைப் பெற்றவர். பெறுபவர்கள் எல்லோரும் விருதுகளுக்கு கவுரவம் சேர்க்கிறார்களா என்ன? இவரது ஊடக அறம் எப்படி இருந்தது என்று பார்ப்போமா?
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது போபோர்ஸ் பீரங்கி ஊழல் வெடித்தது. ஆட்சி மாறியது. போபோர்ஸ் பற்றிய கட்டுரைகள் பல பத்திரிகையில் வெளிவந்தன. மேற்சொன்ன நபர் இந்த பத்திரிகையில் இந்த கட்டுரையை எழுதிவந்தார். ஒரு குறிப்பிட்ட கட்டுரையை அவரது உறவினரான ஆசிரியர் வெளியிட மறுத்தார். வெளியிட வேண்டுமென்று வாதிட்டிருக்க வேண்டும் இவர். ஆனால் இவரோ போட்டி பத்திரிகைக்கு அந்த கட்டுரையைக் கொடுத்தார். அங்கே அது பிரசுரம் ஆனது. அந்தப் பத்திரிகையில் வேலை செய்யும் ஒரு நிருபர் இந்த வேலையை செய்திருந்தால் சீட்டு கிழிந்திருக்கும். ஊடக அறத்தை மீறினார் என்ற காரணத்திற்கு. இவர் சீட்டு கிழியவில்லை. ஏனென்றால், பிறர் சீட்டை கிழிக்கும் நிறுவன முதலாளிகளில் ஒருவராக இவர் இருந்தார்.
ஆக ஊழியர்களுக்கு மட்டுமே அறம் முதலாளிகளுக்கு அல்ல என்பது நிரூபணமானது. தங்களுக்கு சுங்கத்துறை அதிகாரியின் தயவு வேண்டுமென்றால் அவர்களது மகனையோ, மகளையோ வேலைக்கு நிர்ணயித்துக்கொள்வது. போலீஸ் அதிகாரியின் தயவு வேண்டுமென்றால் அவரது வாரிசை சப் எடிட்டராக நியமித்துக்கொள்வது என்றெல்லாம் எல்லா பத்திரிகைப்போலவும் அறத்தைப் பற்றி உரக்கப் பேசும் அந்தப் பத்திரிகையும் செய்தது. அதே நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு நிருபர் ஊடக அறத்தை எப்படி காப்பாற்றினார் என்பதையும் பார்ப்போம். அவர் கல்லூரி பணியிலிருந்து பத்திரிகைத் துறைக்கு மாறியவர். கல்லூரி முதல்வராக இருந்த போது ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டு ஒரு பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் ஆனவர். பின்னர் அதே பல்கலைக்கழகம் இருந்த மாவட்டத்திற்கு நிருபராக மாற்றப்பட்டார்.
அவர் செய்த முதல் வேலை செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது. துணை வேந்தர் அது அவசியமில்லை என்றார். இருந்தாலும் நிருபர், நான் பத்திரிகையாளர் மத்தியிலேயே அமர விரும்புகிறேன். செனட் உறுப்பினராக இருந்தால் பல்கலைக்கழகத்தை விமர்சனம் செய்ய முடியாது. என் தொழில் தர்மத்தை காப்பாற்ற முடியாது என்று சொல்லி விட்டார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. அவர் பத்திரிகையாளர் பென்ஞ்ஜில்தான் அமர்ந்துகொண்டார். அதே நிருபர் அதற்கு முன்பு செனட் கூட்டங்களில் கலந்துகொண்ட போது இணை வேந்தர் அளித்த மதிய விருந்தில் பிற முதல்வர்கள் பேராசியர்கள், செனட் மெம்பர்களுடன் கலந்துகொண்டார்.
ஆனால் செணட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான்கு ரூபாய் ஆட்டோ கட்டணம் கொடுத்து ஊருக்குள் சென்று நான்கு ரூபாய் சாப்பாடு சாப்பிட்டு, மீண்டும் நான்கு ரூபாய் ஆட்டோ கட்டணம் செலுத்தி மதிய செனட் கூட்டத்தை பார்ப்பதற்கு வந்தார். நான்கு ரூபாய் சாப்பாட்டிற்கு எட்டு ரூபாய் ஆட்டோ கட்டணம் செலுத்தினார். இருந்த இடத்திலேயே சுவையான உணவு சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அவர் ஏன் அப்படி செய்யவில்லை? ”செஞ்சோற்றுக்கடன் கூடாது,” அது பத்திரிகை தர்மம் அல்ல, என்று கருதினார். அவரும் மேற்சொன்ன அதே பத்திரிகையில் தான் பணியாற்றினார். யார் அவர்? பணிவு தடுத்தாலும் சொல்லி விடுகிறேன். அந்த நிருபர் தான் இந்த கட்டுரையாளர்.