வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் என்று அழைக்கப்படும் திருவருட்பிரகாச ராமலிங்க அடிகளார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகான்களுள் முதன்மையான ஒருவராகக் கருதலாம்.

மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் ராமய்யா பிள்ளை எனும் கருணீகர் மரபிலே வந்த ஒரு தமிழ் புலவர். அவர் தினை பள்ளிக்கூடம் நடத்தி பிழைப்பை நடத்தினார். அவரின் துரதிர்ஷ்டம் அவருக்கு ஐந்து முறை திருமணம் ஆகி ஐந்து மனைவிமார்களும் மனம் முடிந்த சிறு காலத்திலேயே மரணமடைந்துவிட்டனர். ஆறாம் முறை சின்னம்மை என்ற பெண்ணை மணந்தார். தில்லை நடராஜரின் ஆழ் பக்தன் ஆன ராமய்யா இம்முறையாவது தன மனைவி காப்பாற்றப்படவேண்டும் தங்களுக்கு ஒரு நல்ல இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என அம்பலவாணனிடம் வேண்டிக்கொள்ள, சின்னம்மை நாளடைவில் சபாபதி, பரசுராமன் என்ற இரண்டு ஆன் பிள்ளைகளையும் பிறகு உண்ணாமுலை, சுந்தரம்மா என்ற இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று எடுத்தாள். குடும்பம் பெறுக, ராமய்யாவிற்கு பள்ளிக்கூடத்தில் கிடைத்த வருமானம் போதாதையால் கருங்குழியில் கிராம கணக்கு வேலையும் பார்த்தார். இப்படி இருக்ககையில் ஒரு ஆருத்திரா விரத நாள் அன்று ராமய்யா வெளியே சென்றிருந்த பொது சிவபெருமான் வந்து சின்னம்மையின் கையால் உணவு உண்டு அவள் நெற்றியிலும் வாயிலும் திருநீறை இட்டு, அவள்  ஜோதியே பிள்ளையாக பெற்றேடுப்பாள் எனக்கூறிவிட்டு மறைந்தார்.

அதே மாதம் சின்னம்மை கருவுற்று புரட்டாசி 29 ஞாயிற்றுக்கிழமை அன்று ராமலிங்கம் பிறந்தார்.  சுந்தரம்மை பிறந்து பத்து வருடங்கள் ஆகியிருந்தது.

ராமலிங்கம் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போது குடும்பத்தோடு ராமய்யா சிதம்பரம் சென்று தில்லை நடராஜரை தரிசனம் செய்யும் பொது அந்த சிறு குழந்தை நடராஜப்பெருமானிற்கு தீப ஆராதனை செய்வதை உன்னிப்பாக கவனித்து கலகலவென்று சிரித்தது. அங்கிருந்த தீக்ஷிதர் இவ்வாறு சிரிக்கும் இவ்வளவு சிறிய குழந்தையை பார்த்ததும் இல்லை கேள்வியும் பட்டதில்லை என்று சொல்லி, தெய்வக் கிருபையால் மட்டுமே இவ்வாறு அது சிரித்திருக்க முடியும் என்று சொன்னார்.

துரதிர்ஷ்டவசமாக அடுத்த மாதமே ராமய்யா பிள்ளை மரணம் அடைந்தார். ஐந்து குழந்தைகளோடு சின்னம்மை பொன்னேரியில்  தன்  தாய்வீட்டிற்கு சென்று தன அண்ணண் வீட்டில் தற்காலிகமாக இருந்தாள். அங்கும் ஏழ்மைத்தன. சிறிது நாட்கள் கழிந்தபின் அவள் குழந்தைகளோடு பிழைக்க சென்னை நகரம் வந்து சேர்ந்தார்.

கருணீகர் ஸமுதாயத்தின் முறைபடி மூத்த மகனான சபாபதி சென்னையில் மஹாவித்வான் காஞ்சிபுரம் சபாபதி என்பவரிடம் பெரிய புராணம் பயிலத்துவங்கினான். சிறிது காலத்தில் அவன் இதில் வித்வத்துவம் பெற்று சொற்பொழிவாற்ற துவங்கினான். குடும்பத்தின் பண தேவைகள் சற்று பூர்த்தியானது.

சபாபதிக்கு பாப்பாத்தி அம்மாள் என்ற பெண்ணை மணமுடித்து வைத்தால் சின்னம்மை. பிறகு பரசுராமன், உண்ணாமுலை, சுந்தரம்மா மூவருக்கும் திருமணம் முடிந்தது. அவர்கள் பொன்னேரி மற்றும் மேட்டுக்குப்பத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். தாயார் சின்னம்மையும் சிறுவன் ராமலிங்கமும் பரசுராமனுடன் வாழ்ந்து வாழ்ந்துவந்தார்கள்.

சிறிது நாட்கள் ஆன பிறகு அண்ணன் சபாபதியும் அண்ணி பாப்பாத்தி அம்மாளும் ராமலிங்கத்தை தாங்கள் வளர்க்க அனுமதி பெற்று அவரை சென்னை அழைத்து வந்துவிட்டனர். பாசம் மிகுந்த பாப்பாத்தி அம்மாள் ராமலிங்கத்தை ஆசையுடன் பார்த்துக்கொண்டாள். ராமலிங்கத்தையும் மஹாவித்வான் சபாபதியிடம் பயில அண்ணன் சபாபதி ஏற்பாடுகள் செய்தார்.

சில நாட்களிலேயே ராமலிங்கத்துக்கு வகுப்பில் உட்கார பிடிக்காமல் போய்   விட்டது. அவர் கந்தசுவாமி கோவிலில் நேரத்தை செலவழிக்க துவங்கினார். அங்கே அவர் தானாக பாடல்களை பாடித்திரிந்துக் கொண்டிருந்தார். மகாவித்வான் அண்ணனிடம் புகார் செலுத்த, அண்ணனுக்கு கோபம் வந்து ராமலிங்கத்தை திட்டி அடித்து வீட்டைவிட்டு, “படிக்காத நீ எனக்கு தம்பியே இல்லை, வீட்டை விட்டு போ,” என கூறி துரத்தி விட்டார்.

ராமலிங்கம் வழக்கம்போல கந்தசுவாமி கோவிலில் பாடிக்கொண்டு காலத்தை கழித்தார். மனம் கேட்காத அண்ணி ராமலிங்கத்தை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்து உணவு போட்டு வந்தார். இப்படி ராமய்யாவின் திவசத்தன்று ஊரில் உள்ள பலர் அண்ணன் வீட்டில் உணவருந்தினர். எல்லாரும் சென்ற பிறகும் ராமலிங்கம் வரவில்லை. கவலையுடன் அண்ணி காத்திருந்தாள். வெகு நேரம் கழித்து ராமலிங்கம் வந்து ஆரிய சோற்றை கொல்லும் பசியில் விழுங்கித்தின்றான். இதை பார்த்து அண்ணி கண்ணீர் சிந்தினாள். “ஏனய்யா நீ உன் அண்ணன் பேச்சை மீறுகிறாய்? படிக்கத்தான் சொல்லுகிறார்?” என்று கேட்க, ராமலிங்கம் இசைந்து, “சரி, நான் வந்துவிடுகிறேன் ஆனால் எனக்கு மாடியில் உள்ள அறையும் ஒரு விளக்கும் ஒரு  முகம் பார்க்கும் கண்ணாடியும் வேண்டும். என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது” என்றான். சபாபதியிடம் அண்ணி எடுத்து சொல்லி, இதற்கு ஏற்பாடு நடந்தது.

அவர் அறையில் விளக்கை ஏற்றி கண்ணாடி முன்னால் வைத்து அதன் முன் அவர் உட்கார்ந்து தியானம் செய்த பொழுது அந்த ஜோதியில் ஆறுமுகன் காட்சி அளித்ததை பதிவிட்டிருக்கிறார்.

சோமு செட்டியார் என்ற செல்வந்தர் தான் சபாபதியின் சொற்பொழிவுகளிற்கு ஏற்பாடுகள் செய்துவந்தார். ஒரு முறை சபாபதியின் சொற்பொழிவின் போது ஏடு படிக்கும் முத்தாலம்மை என்ற பெண்மணி தன் மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர முடியாமல் போக, சபாபதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்.  அப்போ பாப்பாத்தி அம்மாள் ராமலிங்கத்தை ஏன் அதை செய்யசொல்லக்கூடாது என்று கேட்க, அண்ணனும் அவன் என்ன செய்ய முடியும் என மனதில் சந்தேகத்துடன் வேறு வழியில்லாமல் அழைத்து சென்றார்.  நிகழ்ச்சியில் சபாபதியின் சொற்பொழிவின் அளவிற்கு ஏடு படிக்கும் சிறுவனுக்கும் ரசிகர்கள் ஏற்பட்டுவிட்டனர்.

ஒரு முறை சொற்பொழிவு நாளை நடக்க வேண்டிய கட்டத்தில் இன்று சபாபதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. சபாபதிக்கு வேறு வழி தெரியாமல் தம்பியிடம் தான் சோமு செட்டியாரிடம் பெற்றிருந்த முன்தொகையையும் தான் உடல்நிலை சரியில்லை என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தையும் கொடுத்து விவரத்தை எடுத்துச் சொல்லி கொடுத்துவிட்டு வரச்சொன்னார். பல மணிநேரங்களாகியும் ராமலிங்கம் வரவில்லை.

கிட்டத்தட்ட நள்ளிரவு ஆகிவிட்டதால் பாப்பாத்தி அம்மாள் பக்கத்தில் இருந்த மாட்டுவண்டியில் சென்று அவனை தீட்டி கொண்டுவர தீர்மானித்திருந்த பொழுது ராமலிங்கம் இன்னொருத்தருடன் வண்டியில் வந்து இறங்கினான். “ஆஹா இந்த சிறிய வயதில் உங்கள் தம்பி என்ன அழகா சொற்பொழிவு ஆற்றுகிறார்,” என்று சபாபதியிடம் சொல்லி, “இனி செட்டியார் அய்யா இவரையே அனுப்பச்சொல்லிவிட்டார்,” என்று ராமலிங்கத்தை பாராட்டினார்.

ராமலிங்கத்தின் பெயரும் புகழும் சென்னை நகரம் முழுவதும் தீயாக பரவியது. அவர் ஆற்றும் சொற்பொழிவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். சபாபதி தன் தம்பியின் வித்வத்தையும் ஆன்மீக ஞானத்தையும் கண்டு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற ஒரு தம்பியை தான் முன்பு அப்படி நடத்தி விட்டோமே என மிகவும் மனம் வருந்தினார்.

சின்னம்மை ராமலிங்கத்திற்கு மனம் முடிக்க வேண்டும் என்று ஆலோசிக்க, அதற்கு ராமலிங்கம் மறுப்பு தெரிவித்தார். இதையும் மீறி சின்னம்மை உண்ணாமுலையின் மகள் தனகோடியுடன் அவருக்கு கல்யாணம் செய்து வைத்தார். திருமணத்தின் முதல் இரவில் ராமலிங்கம் திருவாசகம் படித்ததாக தனகோடி தகவல் சொன்னார். அவர்களுக்கிடையே மணவாழ்க்கை நடக்கவில்லை. இந்த சம்பவத்திற்குப்பின் சின்னம்மை தான் செய்த தவறை மன்னித்துக்கொள்ள முடியாமல் மனஉடைச்சலால் காலமானார்.

தமிழ் புலவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் ஆலோசனை கேட்கவும் ராமலிங்கத்தை அணுகத்தொடங்கினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பெரிய புராணத்திற்கு ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற தலைப்பில் விளக்கவுரை எழுதுதினார். ஞான வள்ளலாக திகழ்ந்த ராமலிங்கம் ‘வள்ளலார்’ என்று அழைக்கப்பட்டார்.

அவரது போதனைகளுக்கு பல்வேறு வடிவங்களில் எதிர்ப்புகள் எழுந்தன, பிரபலமாக தெரிந்தது  ஆறுமுக நாவலர் அவரது போதனைகளை `அருட்பா’ என்று அழைப்பதை எதிர்த்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தது. சாத்தியம் வென்றது, வள்ளலார் தன பணிகளை தொடர்ந்து செய்துவந்தார்.

தினந்தோறும் திருவொற்றியூர் சென்று வடிவாம்பிகையையும், ஒற்றீஸ்வரப் பெருமானையும் பாடி வந்தார்.  ஒரு முறை அவர் கோயிலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு திருடன் அவருடைய கடுக்கனை எடுக்க வந்தான். அப்போது ராமலிங்கம் அவன் மீது இரக்கப்பட்டு அதனை அவிழ்த்து கொடுத்துவிட்டார்! ஒருமுறை அவர் கோயிலிலிருந்து வீடு திரும்ப நேரமாகிவிட, அவர் அன்று வரப்போவதில்லை என்று நினைத்து வீட்டை பூட்டிவிட்டு தூங்கியிருந்தனர் குடும்பத்தினர். பசியுடன் அவர் திண்ணையில் உட்கார, அக்கா சுந்தரம்மா வந்து அவருக்கு இலையில் சோறு போட்டாள். உணவை தின்று தூங்கின ராமலிங்கத்தை பார்த்து தன் அக்கா காலையில் அங்கே கிடப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார். அப்பொழுதுதான் அங்கே உணவு அருந்திய இலையை கண்டு ராமலிங்கத்துக்கு இரவு வந்தது வடிவுடையம்மன் என்று தெரிந்தது.

சிதம்பரம் விருத்தாசலம் கூட்டுரோட்டில் “சத்திய தர்ம சாலை” என்ற இடத்தில் ஒரு குடிசையை உருவாக்கி தானே சமைத்து மக்களுக்கு சேவை செய்தார். ஜீவகாருண்யம் மனிதனின் அடையாளம், எந்த ஜீவனுக்கும் துயரங்க ள் ஏற்படுவதை நாம் அனுமதிக்கக்கூடாது என்று அவர் கருதினார். எந்த உயிரையும் கொள்ளக்கூடாது எனக்கூறி புலால் உண்பது பெரும் பாவம் என்று எடுத்துச் சொன்னார்.

இராமலிங்க அடிகளின் உயர்ந்த மெலிந்த உருவத்தை பார்த்து அவரின் உடல் மற்றும் மன வலுவை கணிக்க முடியாதபடி இருந்தது. கருணையே தன் வாழ்க்கை செய்தியாக கொண்டார்

‘பசித்திரு தனித்திரு விழித்திரு’ என்ற கோட்பாட்டை அவர் கடைபிடித்தார். வள்ளலார் பணத்திடமிருந்து விலகியே இருந்தார். பணத்தை எரிந்து விட்டேன் என்று அவர் பல முறை செய்ததை சொல்லியிருக்கார். ஞானம் மிக்க வள்ளலாரிடமிருந்து அமுதுபோன்ற பாடல்கள் பொழிந்தன. ‘திருவருட்பா’ என பெயர் கொண்ட இப்பாடல்களின் தொகுப்பு.

அவருடைய சீடர்கள் சிலர் வள்ளலாரின் நற்காரியங்களிற்காக வடலூரில் ஐம்பது ஏக்கர் நிலம் கொடுத்தனர். ஜனவரி 25, 1872 அன்று வடலூரில் சத்திய ஞான சபையைத் திறந்தார்.

கோவிலுக்குள் பழங்கள் அல்லது பூக்கள் வடிவில் பிரசாதம் வழங்க அனுமதி கிடையாது, பிரார்த்தனை அனுமதிக்கப்படவில்லை.  இறைச்சி உண்பவர்களை தவிர அனைத்து சாதிகள், சமயங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு கோயில் திறக்கப்பட்டது; இறைச்சி உண்பவர்கள் வெளியில் இருந்தபடி வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த கோட்பாடுகளை பலர் பின்பற்ற தவறியதை கண்டு வருந்திய இராமலிங்க அடிகளார் இந்த கோவிலை ஒரு வருடத்திற்கு பிறகு  மூடிவிட்டார்.

கடவுளின் பார்வையில் மனிதர்களிடையே சமத்துவமின்மை இருக்க முடியாது என்றும் அனைத்து வேறுபாடுகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் நம்பினார்.  அவர் 1865 ஆம் ஆண்டில் `சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ நிறுவினார், இந்த காலகட்டத்தில் அவர் சென்னையிலிருந்து கருங்குழிக்கு  மாறியிருந்தார்.  அவர் அடுத்த படியாக 1867 ஆம் ஆண்டில் வடலூரில் `சத்திய தர்ம சாலை’ என்ற இலவச உணவு இல்லத்தை அமைத்தார், அங்கு அனைவரும் எந்த வேறுபாடும் இல்லாமல் சாப்பிடலாம். சத்திய தர்ம சாலையின் அடுப்பு இன்று வரை எரிந்துக்கொண்டே இருக்கிறது. பெருந்தோட்டரான கொரோனா காலத்திலும் கூட இங்கு மக்களுக்கு தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டு வந்தது. ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் அனைத்து சமையலுக்கும் தண்ணீர் அங்கே வள்ளலார் அமைத்த கிணற்றிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. சில நாட்களில் பல பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு தேவையான தண்ணீர் கொடுத்தும் கூட இந்த கிணறு ஒரு முறை கூட வெற்றியதே இல்லை!

ராமலிங்க அடிகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும், நலமுடன் வாழ வழிவகுத்துக்கொள்வது நமது கடமை என்றும் வலியுறுத்தினார்.  சித்த மருத்துவ முறையின்படி பல நோய்களை தடுக்கவும், குணப்படுத்தவும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.

தெய்வீக சக்திகளை கொண்ட வள்ளலாரின் வாழ்க்கையில் பல விசித்திரமான சம்பவங்கள் நடந்ததை பதிவிட்டிருக்கிறார்கள். ஜோதி ரூபமாக இருந்ததால் பல முறை முயற்சித்தும் அவரை புகைப்படம் எடுக்க முடியவில்லை. எண்ணெய்க்கு பதிலாக நீர் நிரம்பியிருந்த விளக்கை ஏற்றியது, உணவு தீர்ந்தபின் திடீரென வந்த நூறு விருந்தாளிகளுக்கு ‘பிச்’ என்று கூறி உணவை வரவழைத்து தன் கையால் உணவு பரிமாறி, அனைவரும் உண்டபின் உணவு மிஞ்சாமல் இருந்தது போன்ற பல பல வியக்க சம்பவங்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன.

ராமலிங்கரின் இவ்வுலக அழகிய பயணம் 1874 ஜனவரி 30 தைப்பூசம் அன்று முடிவுக்கு வந்தது, இது தெய்வீகத்துடன் இணைந்த அபூர்வமான மறைவாக இருந்தது. அவர் ஒரு அறையில் தன்னைப் பூட்டிக்கொண்டு, எந்தச் சூழலிலும் திறக்கக் கூடாது என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்; அவர்கள் அவ்வாறு செய்தாலும் அவர்கள் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மே மாதத்தில் அரசாங்க அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்ட அறை காலியாக காணப்பட்டது; சந்தேகப்படும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. 1906 ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தால் வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட அரசிதழில் அவர் இவ்வாறு மறைந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ராமலிங்கரின் பணிக்காக நிறுவப்பட்ட சங்கங்களும் வள்ளலாரின்  நினைவாக தைப்பூச  நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

திருமதி.யமுனா ஹர்ஷவர்தனா

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி