பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பல்வேறு கோணங்களில் அணுகவேண்டியது அவசியம். படித்த இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யாவிட்டால் அவர்கள் தடம் மாறிச்செல்ல வாய்ப்புள்ளது. பொருளாதாரத்துக்கு நாம் பங்களிப்பு நல்குகிறோம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். இந்த உணர்வு மேலோங்கினால்தான் மன நிறைவு ஏற்படும். இந்த உணர்வு இல்லாவிட்டால் அதிருப்தி அலை மேலோங்கும். அரசால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது என்பது உண்மைதான். இதனால்தான் சுய வேலை வாய்ப்பின் முக்கியத்துவத்தை அரசு வற்புறுத்தி வருகிறது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வந்தால் அது பொருளாதாரத்தை படிப்படியாக அரித்து சிதைத்துவிடும். இன்னும் சொல்லப்போனால் வேலைவாய்ப்பற்றவர்கள் ஆக்கப்பூர்வமான மனோபாவத்திலிருந்து விடுபட்டு எதிர்மறையான மனோபாவத்துக்கு ஆட்பட்டுவிட்டால் நாசகார விளைவுகளை சமூகம் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதனால்தான் வேலைவாய்ப்புக்கு பொருளியல் வல்லுநர்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். மேலும் பணிப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என்ற கோட்பாடும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பாரதப் பொருளாதார நிலவரம் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தேசிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் 9.2 சதவீதமாக உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை 47.1 சதவீதமாக உள்ளது. இது தேசிய அளவைவிட 5 மடங்குக்கும் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை ஜீரணிக்க இயலவில்லை. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வேலைவாய்ப்பைப் பெருக்க உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
புதுச்சேரி முன்பெல்லாம் பருத்தி விளையும் பூமியாக இருந்தது. இப்போது பருத்தி சாகுபடி அருகிவிட்டது. நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பும் குறைந்துவிட்டது. கடல் வளத்தை நன்கு பயன்படுத்தவும் நாராயணசாமி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது. இவற்றையெல்லாம் குறிப்பிட்ட அளவுக்காவது மீட்டெடுக்க முடியும். இதைச் செய்தால் வேலைவாய்ப்பு கணிசமாக பெருகும்.
புதுச்சேரி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அரவிந்தர், அன்னையை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். இதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டால் புதுச்சேரியை பொருளியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் வளர்ந்தோங்க வைக்க முடியும். புதுச்சேரிக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் உள்ளது. அங்கு வேலைவாய்ப்பின்மை 26.2 சதவீதம். இதற்கு அடுத்தபடியாக மமதா பானர்ஜியின் மேற்கு வங்காளம் உள்ளது. அங்கு வேலைவாய்ப்பின்மை 22.1 சதவீதம். மற்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை இந்த அளவுக்கு உக்கிரமாக இல்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய அம்சம்.
-தெளிரல்