கொங்கு மண்டலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. உழைப்பு, மரியாதையுடன் கூடிய உபசரிப்பு, குறிப்பறிந்து உதவும் மனோபாவம் உள்ளிட்டவை இப்போதும் கொங்கு மண்டலத்தின் மகத்தான அடையாளங்களாக பளிச்சிடுகின்றன. கொங்கு மண்டலத்தின் உணவு வகைகள் மிகுந்த ருசி கொண்டவை. இதைப் போல, இங்கு உற்பத்தி செய்யப்படும் உடைகளும் கலை நேர்த்தி மிக்கவை.
எத்தனையோ உடை வகைகள் பயன்பாட்டில் உள்ளன என்றபோதிலும், பெண்களின் உச்ச விருப்பத்தேர்வாக சேலைதான் உள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளிலும் சேலை அணிவது மதிப்பையும் மரியாதையையும் உயர்த்துகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள நெகமம், நெசவாளர்கள் நிறைந்த பகுதியாகும். நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலை பல தலைமுறைகள் கடந்த பிறகும் உயிர்ப்பு மிக்கதாக இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல் பாரதத்துக்கு வெளியேயும் நெகமம் பருத்தி சேலைகள் பயணிக்கின்றன. மதுரை, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளில் கண்டாங்கிச்சேலை, சுங்குடிச்சேலை என விதவிதமான உடைகள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இங்கு பணப்புழக்கம் உச்சம் பெருகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக கொரோனா பரவல் கடந்த ஆண்டு இதை மட்டுப்படுத்திவிட்டது.
பொள்ளாச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள நெகமம் உள்ளிட்ட 30 கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக ஏராளமான நெசவாளர் குடும்பங்கள் நெகமம் பருத்தி சேலையை நெய்து வருகின்றனர். கால ஓட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அவற்றின் வாயிலாக சேலைகளை சந்தைப்படுத்தி வருகின்றனர். நெகமம் பகுதியில் தயாரிக்கப்படும் கோவை காட்டன் சேலை சர்வதேச சந்தையிலும் முத்திரை வகித்து வருகிறது. இந்தச் சேலைகள் 600 கிராம் முதல் 1,600 கிராம் வரை எடையுள்ளவை. இந்த சேலைகள் 7.3 மீட்டர் முதல் 8.2 மீட்டர் நீளம் கொண்டவை. சேலையோடு அதே வண்ணத்தில் ரவிக்கை துணியும் சேர்க்கப்பட்டிருக்கும்.
நெகமம் சேலையின் சிறப்பம்சங்களில் பிரதானமானது விளிம்புப்பகுதிதான். அதில் கலைநயம் கொஞ்சுகிறது. யானை, மயில், கிளி, அன்னம், தாமரை உள்ளிட்டவை பொலிவுடன் மிளிர்கின்றன. இப்போது இந்த சேலைக்கு கிராக்கி அதிகரித்துள்ளதால் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட இடங்களிலும் இதை நெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெகமம் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு அளிக்கக்கோரி அண்மையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற நெகமம் பருத்திச்சேலை முழு தகுதி பெற்றுள்ளது. எனவே, வெகு விரைவில் புவிசார் குறியீடு அளிப்படும் என நெசவாளர்கள் நம்பிக்கையுடனும் ஆர்வப் பெருக்குடனும் காத்திருக்கிறார்கள்.