ஹிந்து மதத்தில் தீண்டாமை இருப்பதாகவும் அதனால் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுங்கள் என்று மதமாற்றம் செய்யும் மிஷனரி கும்பல்கள் அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றிய பிறகு அவர்களுக்கான உரிமைகள் மறுத்து வருகிறது. பட்டியலின கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை, தனி சவ ஊர்தி, சர்ச்சுக்கு செல்லும் பொது வழியில் அனுமதி மறுப்பு, தங்களது பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளில் அனுமதி மறுப்பு, திருச்சபை நிர்வாக விவகாரங்களில் அனுமதி மறுப்பு போன்றவை தொடர்கதையாகவே உள்ளன. இவை அனைத்தும் கிறிஸ்தவத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்கள். ஆனால், இங்குள்ள 18 பிஷப்களில் ஒரே ஒரு பிஷப் மட்டும்தான் பட்டியலினத்தவர். தமிழக தலித் கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன்வரை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பட்டியலின கிறிஸ்தவர்கள் வருந்துகின்றனர். இந்நிலையில், கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவும் இந்த தீண்டாமை குறித்தும் அதற்காக வரும் 26ல் போராட்டம் நடத்துவது குறித்தும் தமிழக தலித் கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு சார்பாக சமீபத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.