தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர், விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் உடுமலை நாராயணகவி. 1899ல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் தம்பத்யருக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்து வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். கொங்கு மண்ணின் கிராமியக் கலைகளில் ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.
அக்காலத்தில் நாடகத்துறையில் புகழ்பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பரும் ‘ஆரிய கான சபா’ நாடக மன்றத்தின் ஆசிரியருமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர், பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி நடித்த நாடகத்தைக் கண்டு, அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி, தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதினார்.
வாணிகத்தில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லையால், இந்தக் கடனை எல்லாம் திருப்பித் தரும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன் எனச் சூளுரை செய்து கையில் நூறு ரூபாயோடு பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதினார் ஈட்டிய பணத்துடன் சென்று தன் ஊருக்குப்புறத்தே நின்று கடனையெல்லாம் அடைத்த பிறகே ஊருக்குள் நுழைந்தார்.
நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுதித் தர இயக்குநர் ஏ.நாராயணன் மூலம் சென்னைக்கு வந்த அவர், திரைப்படப் பாடல் உலகிலும் நுழைந்தார். கவிராயர்” எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவர், தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.