சென்னை ஐஐடியில் படித்து இந்திய வனத்துறை (I.F.S) அதிகாரியாக மகாராஷ்டிர மாநிலம், நாசிக் வட்டாரத்தில் பதவி ஏற்றுக்கொண்ட ஆனந்த ரெட்டிக்கு வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. எனவே தன் பணிக்களம் குறித்து அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த இந்த வனப்பகுதியில் ஆனந்த் மேற்பார்வையிட வேண்டிய நான்கு ரேஞ்ச்சுகளில், ஒரு ரேஞ்ச்சில் உண்டிவில் கொண்டு பறவைகளை கல்லால் அடித்து எடுத்துச் செல்லும் பழக்கம் சிறுவர்களிடையே மிக அதிகமாக இருந்தது. அதனால் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ‘உண்டிவில்லை ஒப்படையுங்கள்’ என்று ஒரு முயற்சியைத் தொடங்கினார்.
வனத்தையும் வன உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஆனந்த் தன்னுடைய அலுவலக வாசலில் ஒரு பெட்டியை வைத்தார். உண்டிவில் ஒப்படைக்கும் சிறுவன் தன் பெயரை ஒரு சீட்டில் எழுதி அந்தப் பெட்டியில் போடலாம். பிறகு குலுக்கலில் அவனுக்கு ஏதாவது பரிசு கிடைக்கும் என்பது திட்டம். விரைவில் அலுவலக வாசலில் 670 உண்டிவில்கள் குவிந்துவிட்டன. பெட்டியில் அந்த ஊர் சிறுவர்களின் பெயர்களும்தான்! திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, மற்ற மூன்று ரேஞ்ச்சுகளிலும் இது போல செய்ய ஆசைப்படுகிறார் ஆனந்த்.
வனப்பகுதியில் உயிரினங்களை வதைப்பது தண்டனைக்குரிய குற்றம். சிறுவர்கள் என்பதால் தண்டனை வழங்காமல் வகுப்பெடுத்தார் ஆனந்த். அவர் மட்டுமல்ல வகுப்பெடுக்க தனது துறை அலுவலர்களையும் பயிற்றுவித்தார். எல்லோரும் ஊருக்குள் போய் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்கள்; சில விஷயங்களைப் புரிய வைத்தார்கள்:”நமக்கு மாம்பழம், கொய்யாப்பழம் எல்லாம் கிடைப்பது மரங்களிலிருந்து. மரங்களில் பழம் விளைவது எப்படி? மகரந்தசேர்க்கை மூலமாகத்தான். அதற்கு பறவைகளின் உதவி வெகுவாக கைகொடுக்கும்.
அது மட்டுமல்ல, பறவைகள் விஷப் புழு பூச்சிகளையும் தின்று விடும். இது நமக்கு நல்லது இல்லையா? நாம் ஒரு கிளியை அடித்துக் கொன்றுவிட்டால் இரை தேடிப் போன தாய்க்கிளி எப்போது வருமோ என்று கூட்டில் காத்திருக்கும் அதன் குஞ்சுகள் என்ன பாடுபடும்!” இதுதான் ஆனந்தும் அவரது அலுவலர்களும் நடத்திய பாடம். அந்த எளிய வனவாசி சிறுவர்கள் மனதில் இது நன்கு பதிந்துவிட்டது. திட்டம் வெற்றி பெற்றது. கிளியும் குருவியும் மைனாவும் புறாவும் இப்போது பயமே இல்லாமல் சிறகடிக்கின்றன அந்த வனப்பகுதியில்.
சட்டம் புத்தகத்தில் இருக்கும். அதை மதிக்கவேண்டும் என்பதை பிரஜைகள் மனதில் பதிய வைத்து அனுசரிக்கச் செய்வது எப்படி என்று நமக்கெல்லாம்கூட பாடம் எடுத்துவிட்டார் இந்த இளம் அதிகாரி. இந்த ஆந்திர இளைஞர் சென்னையில் படித்து மகாராஷ்டிரத்தில் பணிபுரிய முடிகிறது; அது மட்டுமல்ல, சுற்றுச் சூழலுக்கும் சமுதயத்துக்கும் ஏன், அரசுக்குமே கூட சாதகமான திட்டங்களை வெற்றிகரமாக நடத்தவும் செய்கிறார். இதில் ஏது மொழித் தடை?
தகவல்: பெரியசாமி