டுவிட்டரின் சண்டித்தனம்

டுவிட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் நீக்கப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக இப்பகுதிகள் சேர்ந்து தனி நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் கண்டனங்கள் எழுந்ததால், தவறான வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அனால், மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை. இந்தியாவின் வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் தவறாக வெளியிடுவது இது முதல் முறையல்ல. இந்நிலையில், இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டியதாக டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மீது உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய தொழில்நுட்ப சட்டத்தின்படி, தர்மேந்திர சதுர் என்பவரை, தற்காலிக குறைதீர் அதிகாரியாக டுவிட்டர் நியமித்திருந்தது. இதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து அவர் ராஜினாமா செய்தார். தற்போது இந்திய குறை தீர் அதிகாரி இந்தியராக இருக்க வேண்டும் என்ர நிபந்தனையை மீறி, ஜெர்மி கெசல் என்பவரை, இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியாக நியமிப்பதாக டுவிட்டர் அறிவித்துள்ளது.