கலை என்பதே ரசிப்பதற்கானது. இயல், இசை, நாடகம் என்பது இயந்திர மயமான வாழ்க்கையின் உராய்வுகளை குறைக்க, டென்ஷனை போக்க, கவலைகளை நீக்கத்தான். இதனால்தான் இவைகளுடன் சினிமாவையும் நோக்கி மக்கள் படையெடுத்தனர். சினிமா கலைஞர்கள் ஆட்சியை பிடிக்குமளவு பிரபலமானார்கள். ”கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. வீட்டில் முடங்கிய மக்களை டிவி சீரியல்கள் இழுத்தது, ஈர்த்தது. கொரோனாவிற்கு பிறகும் பெரியளவில்சினிமா வெளிவராததால் டிவி சீரியல்கள் வீட்டு சமையலறைக்குள்ளும் ஆட்சி செலுத்துகிறது.
பொழுதை போக்க வேண்டிய சீரியல்கள் கவலையை பெருக்குகிறது. எப்படியெல்லாம் அது நம் உடலுக்குள் மனதுக்குள் புகுந்து விளையாடுகிறது. அதனால் நாம் எவ்வளவு இம்சைகளை சந்திக்கிறோம் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். சிகரெட் பெட்டியின் மீது ‘இது உடல் நலத்துக்கு கேடு’ என்று எப்படி சட்டப்பூர்வமான எச்சரிக்கை எழுதப்பட்டிருக்கிறதோ, மதுபாட்டில் லேபிள்களில் ‘மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உடல் நலத்திற்கும் கேடு’ என்று எப்படி அச்சாகி உள்ளதோ அதுபோல ஒவ்வொரு சீரியலையும் தொடங்கும் முன்பு ஒரு ‘பொறுப்பு துறப்பு’ ஸ்லைடு டிவி திரையில் தோன்றும். அதில் இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை. யாரையும் குறிப்பிடுவன அல்ல என போடப்பட்டிருக்கும்.
இதுவரை சரி. அடுத்த ஸ்லைடு ‘இதை பார்ப்பதனால் ஏற்படும் எந்த விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்பதுதான். இப்படி போடும் ஸ்லைடு படிக்கவே முடியாத அளவு மிகச் சிறிய எழுத்துக்களில் இருக்கும் என்பது இவர்களின் உள்நோக்கத்திற்கு சான்று. இந்த பொறுப்பற்றவர்களின் பொறுப்பு துறப்பு பற்றி கவலைப்படாமல் நாம் டிவி சீரியல்களை பார்ப்பதால் நமக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்பதை அலசுவோமா?
நான் உலகெங்கும் போகப் போவதில்லை. தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஒரு பிரபலமான டிவியில் பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கும் தொடர் இரவு 11 மணி வரை டிவிமுன் உட்கார்ந்தவர்களை எழுந்திருக்க விடாமல் தொடர்கிறது.அந்த டிவி ஏற்கனவே இதில் ஸ்பெஷலிஸ்டாக இருந்த திமுக டிவியை பின்னுக்குத்தள்ளி முன்னணியில் உள்ளது. ஒரு தொடர் மருமகளை கொடுமை படுத்தும் மாமியார், இன்னொரு தொடர் 40 வயதுக்காரன் இருபது வயதுக்காரியை சுற்றும் புதுமை.
வெறோரு தொடரில் திருமணமான ஆணை மனைவி இருக்கும்போதே மனைவியிடம் சவால் விட்டு அவனை அபகரிக்க முயலும் பெண். இதில் கொடுமை என்னவெனில் அந்த பெண் மந்திரவாதி உதவி மூலம் கிளியாக மாறுவாள். பேயாவாள், தாலியுடன் அலைவாள். இந்த இருதார மணம் செய்விக்கும் கலாச்சார சீர்கேடான கதையம்சம் TRP Ratingல் உச்சமாம். என்னே நம் மக்களின் ரசனை! இப்படி சமுகத்தில் விதிவிலக்கான விஷயங்களை விதியாக காட்டும் அவலம். இந்த சமூக சீர்கேடுகள் பார்க்கும் பிஞ்சு உள்ளங்களில் எப்படி பதியும் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்தால் மனம் பதபதைக்கிறது. இவையெல்லாம் நீண்டகால சீரழிவுக்கு வித்திடுபவை. உடனடியான சீர் கேடுகளுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் இடை இடையே எத்தனை டென்ஷன் உண்டாகும் சீன்களை இச்சீரியல்கள் கொண்டிருக்கிறது தெரியுமா?
பணக்கார அக்காவின் சொத்தை அபகரிக்க தங்கை, அக்காவைக் கொல்ல அத்தனை திட்டங்களையும் போடுவாள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பார்மூலா திடுக்திடுக் காட்சிகள். 30 நிமிடத் தொடரில் 3 இடைவேளை. ஒவ்வொன்றும் முடியும் போது மனம் திக்திக் பக்பக்தான் பார்ப்பவர்களுக்கு டென்ஷன் எகிறும். பிளட்பிரஷர் கூடும். வயிற்றில் அமிலம் அதிகமாக சுரக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிறும். இது புதிய பிளட் பிரஷர் பேஷண்ட்களை உருவாக்கும். பழையவர்களை மேலும் மோசமாக்கும்.ஒரு சீரியலில் இரட்டை பெண் குழந்தைகள் வீட்டை விட்டு ஓடும். கயவர்கள் கையில் சிக்கும். பார்க்கும் குழந்தைகள் மனது எப்படிதவிக்கும். மருமகளை கொல்ல மாமியாரும் மாமியாரை கொல்ல மருமகளும், திருமணமானவனை அடைய ஒரு பெண் கொலை செய்ய தீட்டும் சதிகள், கொலை செய்ய முயற்சிக்கும் வழிமுறை, அப்பப்பா இதை பார்ப்பவர்களுக்கு இதே முறையை கடைபிடிக்க தோன்றாதா? இதை பார்க்கும் குழந்தைகள் மாணவ, மாணவியர் மொழி கற்கும் திறமை, குறுகிய கால ஞாபகசக்தி படிக்கும் திறமை கிரகிக்கும் தன்மை குறைபாடுகளால் அவதியுறுகிறார்கள் என ஒரு ஆய்வு சொல்கிறது. இதோடு, Anxiety Aggresive Behaviour உண்டாகிறதாம். தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதும் மிக அருகில் அமர்ந்து பார்ப்பதும் கண்ணுக்கு கேடு விளைவிக்கிறதாம்.
இந்த தொடர்களின் சம்பவங்களில் எந்த லாஜிக்கும் இருக்காது. ஒரு பூவின் பெயர் கொண்ட தொடரில் வில்லி மருந்து கொடுத்து கொல்ல முயன்று பிடிபட்டு ஜெயிலுக்கு போவாள். கதாநாயகி அவளை விடுவித்து வீட்டுக்குள் கூட்டி வருவாள் மறுபடியும் வில்லி ஏராளமான தீய விஷயங்களை செய்வாள். இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?
கல்யாணமான ஒரு போலீஸ் ஆபிசர் கல்லூரி மாணவியை ஏமாற்றுவதும் 8 வயது மகனுக்கு தாயானவள் இரண்டு ஆண்களுக்கு ஆசைப்படுவதும் கேப்பையில் நெய் வருது என பார்ப்பவர்களை ஏமாற்றும் கதையாகும். இப்படியாக டிவி தொடர்களின் மூலம் நாம் பெறுவது எதிர்மறை சிந்தனை மட்டுமே.மொத்தத்தில் இது பொழுதை வீணடிக்கிறது. இது பொழுது போக்க, பாடம்புகட்ட எந்த அம்சமும் கொண்டதாக இல்லை. மாறாக டிவி முன் எழாமல் அமர வைக்க உண்டான அத்தனை முயற்சியும் தொடர்களில் செய்யப்படுகிறது. இது உடல், மன நலத்திற்கு கேடு. இது மருத்துவர்களின் தேவையைத்தான் உயர்த்துகிறது. இப்படிப்பட்ட டிவிக்கு சினிமா போல் தணிக்கை இல்லாதது ஒரு மாபெரும் இழுக்கு. தணிக்கை கொண்டு வந்து விட்டால் மாறிவிடப்போகிறதா? தணிக்கை செய்யப்படும் சினிமாவின் லட்சணம் நமக்கு தெரியாதா என்ற குரல்களும் ஒலிக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் தொலைக்காட்சி தொடர்கள் பொழுதுபோக்க அல்ல. உடல், மனதை பழுதாக்க.