மேற்கு வங்காளத்தில் பாங்குரா மாவட்டத்தில் உள்ள திருணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மின்சார வாரிய ஊழியர்கள் சங்கம், கோசைன் லிமிட்டட் எனப்படும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்கடிதத்தில், அந்நிறுவனத்தில் ரீடிங் எடுக்கும் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள அனிகேத் பானர்ஜி என்பவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்பதால், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், இது தேவையற்ற அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் என மறைமுக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக தாங்கள் சிபாரிசு செய்யும் அமீத் ராய் என்பவரை பணியமர்த்த வேண்டும், திருணமூல் காங்கிரசுடன் எங்கள் தொழிற்சங்கம் இணைந்திருப்பதால், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை பணியமர்த்த வேண்டாம் என்று கூற எங்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோசைன் ஒரு ஹைதராபாத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம். இது, நாட்டில் உள்ள பல மின் விநியோக நிறுவனங்களுக்கு மீட்டர் ரீடிங் எடுப்பது, மின் நுகர்வுத் தரவைச் சேகரிப்பது, விநியோகம் என மின் துறை நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.