சூரன் என்ற அசுரனையும் அவனது பரிவாரங்களையும்எம்பெருமான் முருகன் சம்ஹாரம் செய்து தேவர்களையும் மக்களையும் முருகப் பெருமானார் காத்த தலம் திருச்செந்தூர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் இந்த தலத்தில் இருந்து சித்திரை முதல்நாளான வரும் ஏப்ரல் 14ம் தேதி தனது நடைபயணத்தை தொடங்குகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூட தமிழக பா.ஜ.க மும்முரமாக களமிறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொடங்கி சென்னை வரை 39 தொகுதிகளிலும் நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார் அண்ணாமலை. தொகுதிவாரியாக மக்களை சந்தித்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார். சித்திரை முதல்நாளில் தொடங்கும் அண்ணாமலையின் பாதயாத்திரை, 117 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாமலையுடன் 500க்கும் மேற்பட்டோர் நடைபயணத்தில் பங்கேற்பார்கள். ஆங்காங்கே உள்ள கட்சி நிர்வாகிகளும் நடைபயணத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி இரவு நேரத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் அண்ணமாலை தங்குவார் அதற்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்படும். இந்த நடைபயணத்தின் போது மாணவ மாணவியர்களை சந்தித்து உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.