“மாயோன் மேய காடுறை உலகமும்;
சேயோன் மேய மைவரை உலகமும்;
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்;
வருணன் மேய பெருமணல் உலகமும்…”
எனத் தொல்காப்பியம் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக வகுத்துக் காட்டுகிறது.
முல்லை நிலத்தை ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்றனர். “காடும், காட்டைச் சார்ந்த இடமும்” என்று கூறி, அந்தக் காட்டிற்கு உரிய தெய்வமாகத் திருமாலை, “மாயோன்” என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்.
குறிஞ்சி நிலத்தை “மலையும், மலையைச் சார்ந்த இடமும்” என்று கூறி, அந்த மலைக்கு உரிய தெய்வமாக “முருகனை”க் குறிப்பிடுகின்றனர்.
‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது, “வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய” மருத நிலத்தையே ஆகும். இந்திரனுக்கு வேந்தன் என்று பெயரிடப் பட்டுள்ளது. “இந்திரனே” வயலும் வயலைச் சார்ந்த இடத்திற்குக் உரிய கடவுளாகும்.
‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது மணல் மிகுந்திருக்கக் கூடிய, “கடலும், கடல் சார்ந்த இடமும்” ஆகும். இந்த நிலத்திற்குக் கடவுளாக “வருணன்” உரைக்கப் படுகின்றார்.
பாலைத் திணை என்பது பாலை வனப் பகுதியாகும். இதற்கான தெய்வத்தைத் தொல்காப்பியர் கூறவில்லை. தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது.
இதன் அடிப்படையில் முன்னோர் உள்ளக் கிடக்கையின் மரபு வழி தொடர்புகளாகவும், வரலாற்றுப் பெட்டகங்களாகவும் நிலை பெற்றுள்ள ஹிந்து மதமும், தமிழ் மண் சார்ந்த இடமும் மக்களின் மனதில் நிலை பெற்று உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை :
திருக்கோயில்கள் மற்றும் அதன் பண்பாட்டு அசைவுகளைக் காக்கும் பொருட்டு திருக்கோயில் நிர்வாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப் பட்டது. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே, தமிழகக் கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் இருந்து வருகிறது.
இந்து சமயத் திருக் கோயில்களுக்குத் தொன்று தொட்டு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்து உள்ளன.
இந்த நிலையில், 1817ஆம் ஆண்டு முதல் முறையாக, “மதராஸ் நிலைக் கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம்” என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப் பட்டது.
இந்த சட்டமானது, திருக்கோயில்களுக்கு வழங்கப் படும் நிதி உதவி முதலான அறக் கொடைகள் முறையாக பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும், கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போது இருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அதில் தொடங்கி, ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள், அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
‘மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு தலையிடாது’ என்ற வாக்குறுதியை அளித்தது. இதனால் ஏற்கெனவே கோயில்களும், அவற்றின் சொத்துகளும் யார் வசம் இருந்தனவோ, அவர்கள் தங்கு தடையின்றி அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.
1920 ஆம் ஆண்டு, பனகல் அரசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போதைய மதராஸ் மாகாணத்தில் இருந்த, அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்தார். இதற்காக 1922 ஆம் ஆண்டு, “இந்து பரிபாலன சட்டத்தை” முன் மொழிந்தார்.
1925 ஆம் ஆண்டு, “இந்து பரிபாலன சட்ட மசோதாவை” அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி, இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927 ஆம் ஆண்டு “இந்து சமய அறநிலைய வாரியம்” என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இதன்படி, திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப் படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப் பட்டது. அதைப் போலவே, நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயில்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலைய வாரியத்தினை சீர் படுத்தும் பொருட்டு, 1940 ஆம் ஆண்டில், ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்தது.
இந்து சமயம் மற்றும் அற நிறுவனங்களை, வாரியத்திற்கு பதிலாக அரசே நிர்வகிக்கலாம் என்ற சிறப்பு அலுவலரின் பரிந்துரையில், இந்து சமயம் மற்றும் அற நிலையங்கள் வாரியத்தினை, ஒரு அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தால், பயன் உள்ளதாகும் என ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், 1942 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட, அலுவல் சாரா குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று, “இந்து சமய அறக்கொடைகள் சட்டம்” 1951 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இந்து சமய அற நிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது.
1959 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில், விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு, 1960 ஆம் ஆண்டில், தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22 ஜனவரி, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்காக, தனியான அரசுத் துறை ஒன்று உருவாக்கப் பட்டது.
இந்து மத ஊர்வலத்திற்கு தடை:
பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் கிராமத்தில், கிழக்குப் பகுதியில் இஸ்லாமியர்களும், மேற்குப் பகுதியில் இந்துக்களும் வசித்து வருகின்றார்கள். 1951ஆம் ஆண்டு முதல், அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் நிலத்திற்கு இரு தரப்பினரும் உரிமை கோரி வந்தனர்.
இதனால் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தொடர்ந்து மோதல் நடைபெற்று வந்தது. சில நேரங்களில் கைகலப்பும் நடந்தது. இந்த நிலையில், கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவதற்கு, இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். “சுன்னத் வல் ஜமாஅத்” என்ற அமைப்பு சார்பில், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப் பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் தி. வேல்முருகன் ஆகியோர், “சுன்னத் வல் ஜமாஅத்” தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், “மதம் சார்ந்த ஊர்வலங்கள், அனைத்தும் சாலைகள் வழியாக நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
தீர்ப்பில் இரு நீதிபதிகளும் கூறியதாவது:
“மக்கள் மதம் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம், அல்லது சமுதாயம் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால், சாலை எப்படி சமுதாயம் சார்ந்ததாக இருக்க முடியும்?
மதம் சார்ந்த விழா நடக்கும் போது, அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மதம் ரீதியான ஊர்வலங்கள் நடத்தப் படும் போது, எந்தவித பிரச்சினையும் வரக் கூடாது. மத சகிப்புத் தன்மையை இழந்து விட்டால், நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. நமது நாடு மதநல்லிணக்க நாடு. காலங்காலமாக நடந்து வரும் சம்பிரதாயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், கலவரம், மதம் ரீதியான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, உயிர் சேதம் மற்றும் பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டு விடும், “மதம் நல்லிணக்க கோட்பாடு” என்ற உணர்வும், அழிந்து விடும்.
அதனால் தான், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் படி, சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்தும் மதம் சார்ந்தவை அல்ல. அனைத்து மக்களும் பாரபட்சமின்றி, சாதி, மதம் பேதமின்றி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எந்த மதம் சார்ந்த உருவங்களும், அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக நடத்தப்பட, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். மற்ற மதத்தினர் உள்ளனர், வியாபாரங்கள் செய்து வருகின்றனர் என்பதற்காக, மதம் சார்ந்த ஊர்வலங்கள் எதையும் தடுக்கக் கூடாது.
ஊர்வலங்களில் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வது, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் கடமை. எல்லா மதம் சார்ந்த ஊர்வலங்களும், மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் நடத்தப்படக் கூடாது.
ஒரு வழிபாட்டுத் தலம், வேறு ஒரு மதத்தினருக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது என்பதற்காகவே, மதச் சடங்குகளுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் மீது, மற்ற மதத்தினர் உரிமை கொண்டாடக் கூடாது. மதம் ஊர்வலங்களை நடத்திட, அனைத்து பிரிவிலும் அடிப்படை உரிமை உள்ளது”, என இரு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.
இந்து மத ஊர்வலத்திற்கு – தொடரும் இன்னல்கள்:
நமது தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் சிலை ஊர்வலத்தை, எல்லா சாலைகளிலும் செல்ல, அனுமதி மறுக்கப்படுவதை, நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற சில சமுதாயத்தினர் வசிப்பதால், பெரும்பான்மையான மக்கள் வணங்கும் விநாயகருக்கு, சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப் படுவதுடன், விநாயகர் ஊர்வலம் நடத்த காவல் துறையினர் தடை விதிப்பதும், ஹிந்து பக்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
மற்ற வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் காரணத்தினாலேயே, அந்த சாலை வழியாக விநாயகர் ஊர்வலம் செல்லக் கூடாது என அதிகாரிகள் அனுமதி மறுப்பது, ஹிந்து பக்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
இந்து மத கடவுள்கள் இருக்கும் சாலைகளில், மற்ற மத ஊர்வலங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அதையும் நாம் அனைவரும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் மூலமாக, இனி வரும் காலங்களிலாவது, அனைத்து தெருக்களிலும், அனைத்து சாலைகளிலும், அனைத்து இடங்களிலும், ஹிந்து மத ஊர்வலங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது.
நிச்சயமாக, எந்த மதத்தினராக இருந்தாலும், மற்ற மதத்தினரை புண்படுத்தக் கூடாது. அதிக சகிப்பு தன்மை வாய்ந்த மதமாக, இந்து மதமே இருந்து வருகின்றது. நமது நாட்டில், கடவுளே இல்லை என சொல்பவர்களும், இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பவர்களும், இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
அதிகமான சகிப்புத் தன்மைக்கு பேர் போன இந்து மத பக்தர்களுக்கு, இந்த தீர்ப்பின் மூலமாக, தங்களுக்கு பிடித்த கடவுளை, தங்களுடைய தெருக்களில், விழாக் காலங்களில், ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து இருப்பதன் மூலமாக, ஹிந்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்து இருக்கின்றது என்றால், அது மிகையல்ல.
ஆனால், நீதிபதிகளின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும், காவல் துறையினரும் நடைமுறைப் படுத்துவார்களா?
அரசியல் கட்சித் தலைவர்கள் அதற்கு வழி வகுத்து கொடுப்பார்களா?
காலம் பதில் சொல்லும்..!!!
– அ. ஓம்பிரகாஷ்,