பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் விரிவாக்கப்பட்டது. விரிவாக்கத்துக்கு முன் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு இருந்து வந்தார். இப்போது விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக அனுராக் தாக்கூர் உள்ளார். அமைச்சரவை மாற்றத்துக்கு முன் ஆர்கனைஸர் ஆசிரியர் பிரஃபுல்ல கேட்கர், செய்தியாளர் நிஷாந்த் ஆஜாத் ஆகியோருக்கு கிரண் ரிஜிஜு அளித்த சிறப்பு நேர்காணல்:
விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைக ளையும் மட்டுமே டோக்கியோவுக்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரிகளோ மேலாளர்களோ அனுப்பப்படவில்லை. இப்போது இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது ஏன்? இது எவ்வாறு அமலாக்கப்பட்டது?
கோவிட் 19 இன்னும் தணிந்துவிடவில்லை. சவாலான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் அதிக அளவில் இருக்கமாட்டார்கள். எனவே அங்கு அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டோம். இதனால்தான் அதிகாரிகளுக்கும் மேலாளர்களுக்கும் இடமில்லை என்று முடிவெடுத்தோம். எனவே விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே டோக்கியோவுக்கு அனுப்பப்பட்டார்கள். விளையாட்டு அமைச்சருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஜப்பான் அரசு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்கா சார்பில் அந்நாட்டு அதிபரின் மனைவிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர் அந்த அழைப்பை ஏற்று பங்கேற்கலாம். இதைப்போல பாரத விளையாட்டு துறை அமைச்சரும் பங்கேற்கலாம். எது எப்படியிருப்பினும் நிகழ்ச்சியின் தொடக்க நாளன்று பாரத அரசு சார்பில் முக்கிய பிரமுகர் பங்கேற்பது உறுதி.அதிகாரிகளையும் மேலாளர்களையும் அனுப்பவேண்டியதில்லை என்ற கொள்கை ரீதியான முடிவு இப்போது முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் இது நூற்றுக்கு நூறு சரியானதே.
இந்த அரசு பதவிக்கு வந்ததிலிருந்தே ‘கேலோ இந்தியா’ முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு விளையாட்டுகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. பாரதத்தில் விளையாட்டு கலாசாரத்தை எவ்வாறு மாற்றியமைக்கப்போகிறீர்கள்?
பாரதத்தில் பல இடங்களில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள போதுமான வசதி இல்லை. சில விளையாட்டுகள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளன. இவை பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ஆனால் அரசின் கவனத்தை இவை கவரவில்லை. இதனால்தான்யோகாசனத்தை விளையாட்டு நிகழ்ச்சியில் அரசு சேர்த்தது. களறிப் பயிற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவை மரபு சார்ந்த விளையாட்டுகள். இவை பாரதப் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்தவை. விளையாட்டு மரபை விளையாட்டு கலாச்சாரமாக வளர்த்தெடுக்கவேண்டும். இதனால்தான் ‘கேலோ இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இளைஞர்களை இதில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வருகிறோம். கிரிக்கெட், கால்பந்து, போன்றவற்றுக்கு ஆதரவு உள்ளது. ஆனால் கோ – கோ, கபடி உள்ளிட்டவற்றுக்கு இன்னும் ஊக்கம் தேவைப்படுகிறது. பாரத விளையாட்டுகளை அஸ்தமிக்க விட்டுவிட முடியாது. இந்த அடிப்படையில்தான் விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில் பல முன்னெடுப்புகளை நான் மேற்கொண்டேன். இதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சுதேசி விளையாட்டுகளை ஒலிம்பிக் மட்டத்துக்கு எடுத்துச்செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
ப: பாரதம் பரந்து விரிந்த தேசம். தொற்று நோய் பரவல் காரணமாக பல தடைகளை நாம் எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. 2028ல் நடைபெறும் ஒலிம்பிக்போட்டியில் கபடியை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று இப்போதே அழுத்தம் கொடுத்து வருகிறோம். 2028ல் இல்லாவிட்டாலும் கூட 2032லாவது இதை சாதித்துவிட முடியும் என்று நம்புகிறோம். இதற்காக தொடர்ந்து நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை இதை ஏற்குமாறு செய்யவேண்டும். எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. பாரதத்தில் இது நெடுங்காலமாக விளையாடப்பட்டு வருகிறது. எனவே சுதேசி விளையாட்டான கபடியை ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறச்செய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.
2014ல் ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம்’ என்பதை மத்திய அரசு தொடங்கியது. பாரதத்துக்கு ஒலிம்பிக் போட்டியில் அதிகளவில் விருதுகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதை சாதிக்க எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் காரணமாக கூடுதல் பதக்கங்கள் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம்’ மிகச்சிறப்பானது. விளையாட்டுத் துறையில் இளந்தளைமுறையினரை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி இளைஞர் ஒருவர் விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டுவிட்டால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. அவருக்கு பயிற்சி வசதி வெளிநாட்டு பயண வசதி உள்ளிட்டவற்றை அரசே செய்து கொடுக்கும். செலவுக்கும் அரசு பணம் கொடுக்கும். கோச், பிஸியோதெரபிஸ்ட் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் அரசே செய்து
கொடுக்கும். சம்பந்தப்பட்ட இளைஞரோ அல்லது இளம்பெண்ணோ விளையாட்டில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தினால் போதும். மற்றவற்றை அரசே பார்த்துக்கொள்ளும். பல்வேறு அறிவியல் அணுகுமுறைகள் வாயிலாக விளையாட்டு திறன் மிக்கவர்களை அடையாளம் கண்டுள்ளோம். இப்போதைய ஒலிம்பிக் பயணக்குழுவில் இடம்பெற்றுள்ள சுமார் 90 சதவீத விளையாட்டு வீரர்களும்வீராங்கனைகளும் இத்திட்டத்தின் வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தாண்டு உங்களது எதிர்பார்ப்பு எவ்வாறாக உள்ளது?
ஒலிம்பிக் போட்டி முடிவு நமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். பாரதம் ஒன்று அல்லது இரண்டு விருதுகளோடு நின்றுவிடாது. பல விருதுகளை இந்தியா வென்றெடுக்கும். நம் நாட்டின் பெருமையை விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள். 2028ல் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக பாரதம் உருவெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்தே நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஆனால் இப்போது நமக்கு குறுகிய அவகாசம் மட்டுமே இருந்தது. எனினும் நம் வீரர்களும் வீராங்கனைகளும் சோடை போகமாட்டார்கள். ஒலிம்பிக் போட்டிதான், உலகலாவிய மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். இங்கு போட்டி மிகக் கடுமையாக இருக்கும். எனவே யார் பதக்கத்தை வெல்வார் என்று எளிதில் கணித்து விடமுடியாது. முன்பெல்லாம் இரண்டு அல்லது மூன்று விருதுகளைப் பெற்றாலே போதும் என்ற இலக்குடன்தான் நம் வீரர்கள் சென்றார்கள். ஆனால் இப்போது பல பதக்கங்களை வென்றெடுக்க முடியும் என்று பாரதம் உறுதியாக நம்புகிறது. ஆனால் எத்தனை பதக்கங்களை பெறமுடியும் என்பதை துல்லியமாக அவதானிக்க முடியாது. எனினும் முன்பு பெற்றதை விட இப்போது அதிகப் பதக்கங்களைப் பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.
அண்மையில் மூத்த தடகள வீரர் மில்கா சிங்கை நாம் இழந்தோம். அவரது இறுதி நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லவேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். மில்கா சிங் இப்போது விளையாட்டு வீரர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவரது இறுதி விருப்பத்தை பாரதம் இப்போது நிச்சியமாக நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?
மில்கா சிங் ஜாம்பவான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவர் ஆசியாவின் விளையாட்டு நட்சத்திரமாக ஜொலித்தார். 1960ல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அவர் நான்காவதாக வந்தார். ஒரு நொடிப்பொழுதில் நழுவி விட்டது. இதை நனவாக்க அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டார். தடகளத்தில் பாரதவீரர் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஆனால், அவரது வாழ்நாளில் இந்த கனவு நிறைவேறவில்லை. ஆனால், இந்தமுறை தடகளத்தில் நாம் தங்க வெல்வோம் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது. இந்த முறை இல்லாவிட்டால் அடுத்த முறையாவது தங்கப்பதக்கத்தை வெல்வோம். மில்கா சிங்கின் கனவை நனவாக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இவ்வளவு ஆண்டுகளாக நாம் பின்தங்கியிருந்தது ஏன்?
இதற்கு பல தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன. அவற்றை அதிகமாக விவரிக்க விரும்பவில்லை. பாரதத்தில் விளையாட்டு கலாசாரம் நலிந்த நிலையிலேயே இருந்தது. இந்த மனோபாவத்தை மாற்றவேண்டும். இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி ‘கேலோ இந்தியா’வை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூகத்தில் விளையாட்டு கலாசாரம் வலுவடையவேண்டும். இதற்கு சாத்தியாமான அனைத்தையும் அரசு செய்யும். எனினும் மக்களும் இதை ஆதரித்தால்தான் இலக்கை எட்டமுடியும். அரசின் கொள்கைகளும் திட்டங்களும் வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு மக்களின் ஆதரவு தேவை.
பொதுமக்களிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள். பொதுமக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
நம் நாட்டு மக்களை துடிப்புள்ளவர்களாக மாற்றவேண்டும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி ‘சியர் ஃபார் இந்தியா’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவர், டோக்கியோவுக்கு செல்லாவிட்டாலும் இங்கிருந்தே வீரர்களுக்கும் வீராங்கனை களுக்கும் ஊக்கம் அளித்து வருகிறார். விளையாட்டு அரங்கத்திற்கு சென்று ஊக்கம் அளிக்கவேண்டும் என்று கருத வேண்டியதில்லை. தத்தமது இருப்பிடங்களில் இருந்தபடியே விளையாடுட வீரர்களுக்கு ஊக்கமளிக்க முடியும். பாரத விளையாட்டுகளுக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த விளையாட்டுகளை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் முடியும். எனவே விளையாட்டு போட்டி களை தவறாமல் ரசித்துப் பாருங்கள்.
கிரிக்கெட்டுக்கும் ஓரளவுக்கு கபடிக்கும் பார்வையாளர்கள் உள்ளனர். மற்ற விளையாட்டுகளுக்குப் பார்வையாளர்கள் குறைவாகவே உள்ளனர். விளையாட்டுகளைப் பார்த்தால்தான் வருமானம் அதிகரிக்கும். விளையாட்டு செழுமையடையும். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஜப்பானிலும் விளையாட்டு கிளப்புகள் பணத்தில் திளைக்கின்றன. இந்த நிலை பாரதத்திலும் ஏற்படவேண்டும். ஏராளமானோர் பார்த்தால்தான் விளையாட்டுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும்.
இங்கிலாந்தின் மக்கள்தொகை 1.6 கோடிதான். எனினும் மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளதால் கால்பந்து கிளப்புகளும் ரக்பி கிளப்புகளும் செல்வத்தில் திளைக்கின்றன. நம்நாட்டின் மக்கள்தொகை 130 கோடியைக் கடந்துவிட்டது. 1 சதவீதத்தினர் பார்த்தால்கூட 1.3 கோடி அளவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடும். ஆனால் நம் நாட்டில் துரதிருஷ்டவசமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களிலேயே நின்றுவிடுகிறது. எனவே விளையாட்டை விரும்பிப் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விளையாட்டு அரங்கங்களுக்குச் செல்லுங்கள். வீரர்களுக்கு ஊக்கமளியுங்கள். நேரடியாக அரங்கங்களுக்கு செல்லமுடியவில்லை எனில் தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடியிலோ பார்வையிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமே விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தமுடியும். விளையாட்டை மேம்படுத்தமுடியும். விளையாட்டு கலாசாரத்தை வலுப்படுத்த முடியும்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி