உணவு, உடை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனிதனின் பிரதான தேவை உறைவிடம். ஆனால், சொந்த வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைப் புள்ளிவிவரம் புலப்படுத்தி வருகிறது.
மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் ஜனநெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கிராமங்கள் நலிவடைந்து வருகின்றன. கிராமங்களிலிருந்து வேலைதேடி நகரங்களுக்கு வரும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டால்தான் நகரங்கள் நரகங்களாக மாறுவதைத் தடுக்கமுடியும். ‘சிறுகக் கட்டி பெருகவாழ்’ என்பது ஆழ்ந்த அர்த்தமுள்ள பழமொழி. சர்வதேச அளவில் ‘ஸ்மால் இஸ் பியூட்டிபுல்’ என்னும் கோட்பாட்டுக்கு ஆதரவு பெருகிவருகிறது.
பொருளாதாரம் என்பது உச்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியதல்ல. அடித்தளத்தில் உள்ளவர்களையும் விளிம்பு நிலையில் உள்ளவர்களையும் அரவணைப்பதுதான் செம்மையான பொருளாதாரத்துக்கு எடுத்துக் காட்டாக இருக்கமுடியும். சர்வதேச அளவில் வறியவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. விசாலமான வீடுகளை வாங்க அவர்களது பொருளாதாரம் இடம் கொடுக்காது.
இப்பின்னணியில்தான் சின்னஞ்சிறு இல்லத்திரளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘பிரிபேப்ரிகேஷன் டெக்னாலஜி’ வாயிலாக சின்னஞ்சிறு இல்லங்கள் அருகருகே கட்டப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 39 சின்னஞ்சிறு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சின்னஞ் சிறு இல்லத்தின் பரப்பளவு 6 சதுர மீட்டர் மட்டுமே. இதில் இரண்டு படுக்கைகள், நான்கு சாளரங்கள் உள்ளன. அதுமட்டு மல்லாமல், ஏசி பொருத்தவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சின்னஞ்சிறு இல்லத்தை உருவாக்க மில்லியன் கணக்கில் பணம் செலவிட வேண்டியதில்லை. சொற்ப தொகையை செலவு செய்தாலே சின்னஞ்சிறு இல்லத்தை உருவாக்கிவிடமுடியும்.
சின்னஞ்சிறு இல்லத்திரள் ஏழை எளிய மக்களுக்கான வரப்பிரசாதம் என்றே கருத வேண்டும். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் உலகிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சின்னஞ்சிறு இல்ல கிராமம் முன்னோடியாக உள்ளது. இதை அடியொற்றி பாரதம் உள்ளிட்ட வளரும் நாடுகளும் சின்னஞ்சிறு இல்லத்திரள்களை அமைக்க முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் வீடற்றவர் என யாருமே இருக்கமாட்டார். இந்த இலக்கை நனவாக்க அரசும் தொண்டு நிறுவனங்களும் பொதுநல ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.